ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் பகுதிகளில் இருந்து இராணுவத்திற்கு இணைந்த இளைஞர்கள் தற்போது விடுமுறையில் வீடுகளுக்கு வந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்கள் தாங்கள் இராணுவத்தினர் என்றும், தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற சிந்தனையில் அங்குள்ள பெண் பிள்ளைகளுடன் சேட்டை விட்டுள்ளனர். இதனையறிந்த பெற்றோர் ஈச்சமோட்டை சனசமூக நிலைய நிர்வாகத்திடம் தெரிவித்தனர் இதனையடுத்து அவர்களை சனசமூக நிர்வாகம் தட்டிக்கேட்டனர்.
அதனையடுத்து ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் இளைஞர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டே இந்த சனசமூக நிலையம் உடைக்கப்பட்டதுடன் தளபாடங்களும் பொருட்களும் சேதமாக்கப்பட்டதுமாகும். மேலும் தங்களுடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டால் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டும் என்றும், நாங்கள் இராணுவம் எங்களுக்கு இங்குள்ள இராணுவத்தினர் உதவிகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர்கள் மிரட்டி வருவதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளதுடன் குறித்த விடயங்களை பொலிஸ் நிலையத்திலும் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு உதயன் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
இலங்கையின் சிங்கள பேரினவாத அரசின் இராணுவம் தமிழ் மக்களை இலட்சக்கணக்கில் கொலை செய்தது. அவர்களால் பாலியல் வன்முறை செய்யப்பட்ட தமிழ்ப்பெண்களை மண் தூர்ந்த பள்ளங்கள் மடி தாங்கிக் கொண்டன. அந்த பாவிகளிடமிருந்த உயிர் பிழைத்த பெண்கள் பாதி நினைவு, பாதி கனவு என்று மயக்கத்தில், மருட்சியுடன் வாழ்கிறார்கள். காலம் அவர்களிற்கு ஒரு முடிவு எழுதும் நாள்வரை அவர்களின் ரணங்கள் மாறப்போவதில்லை. துயர்மிகும் அவர்களின் வலிகள் காட்டுத்தீயாய் எரிந்து கொண்டே இருக்கின்றன. சிங்களப் பேரினவாத அரசின் இராணுவம் செய்த இந்த கொடுமைகளை இன்றைக்கு அந்த அடக்குமுறை இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்கள் செய்ய முயலுகிறார்கள்.
இராணுவம் என்றால் இப்படித் தான் இருக்கும். காவல்நாய்கள் கட்டவிழ்த்து விட்டவுடன் கண்ணில் படுபவரை எல்லாம் கடிக்கப்பாயும். அவைகள் வளர்க்கப்படுவதன் நோக்கம் அதுதான். ஒரு முதலாளித்துவ அரசின் இராணுவம் முதலாளிகளின், அரசியல்வாதிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகவே இருக்கிறது. அரசினையும், முதலாளிகளையும் எதிப்பவர்களை அது கொல்லும். இராணுவ பயிற்சி என்பது எதிர்ப்பவர்களை கொல் என்ற பயிற்சி தான். தமிழ் மக்களை கொல்லச் சொன்னால் அது தமிழ் மக்களை கொல்லும். சிங்கள மக்களை கொல்லச் சொன்னாலும் மிகப் பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட இலங்கையின் இராணுவம் எதுவித தயக்கமும் இன்றி சிங்கள மக்களை கொல்லும்.
இராணுவத்தில் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் தமிழ்ப்பெண்கள் மீது காடைத்தனத்தை காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கையின் இனவாத அரசுடன் சேர்ந்த தமிழர்கள் ஒட்டுமொத்த தமிழ்சமுகத்தின் மீதே காடைத்தனத்தை காட்டுகிறார்கள். பதவிகளிற்காகவும், பணத்திற்காகவும் அரசாங்கத்திற்கு அடிமைவேலை செய்யும் சில தமிழ் அரசியல்வாதிகளை வைத்து தமிழர்களிற்கு அரசியல் அதிகாரம் அளித்திருக்கிறோம் என்று இலங்கையின் ஆட்சியாளர்கள் பேய்க்காட்டுகிறார்கள். இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை குறித்து கேள்விகள் எழும்போது இந்த அரசியல் அடிமைகள் இலங்கை அரசிற்கு சார்பாக கொடுத்த காசை விட கூடுதலாக கூவுகிறார்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் உண்மையை கூற வேண்டும் என அண்மையில் தமிழ் அமைச்சர் பெருமான் ஒருவர் அலறியது கொடுத்த காசிற்கு மேலாக கூவுகிறார்கள் என்றவுடன் உங்களிற்கு நினைவுக்கு வந்து தொலைத்திருக்கலாம்.
உண்மையை சொன்னதால் 19.10.2000 அன்று யாழ்ப்பாணத்தில் வைத்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜனை கொன்றது யார் என்ற உண்மையை யாராவது சொல்வார்களா? 28.05.2008 அன்று சக்தி தொலைக்காட்சியின் தேவகுமாரன் நாவாந்துறையில் வைத்து எந்த அராஜக கும்பலினால் ஏன் கொல்லப்பட்டார் என்று எவராவது சொல்லுவார்களா?. லசந்தா விக்கிரமதுங்கா, ரிச்சார்ட் டி சொய்சா என்று எண்ணற்ற பத்திரிகையாளர்கள் கொழும்பிலே, இலங்கையின் தலைநகரத்திலே வைத்து கொல்லப்பட்டார்கள். அவர்களின் கொலையாளிகள் எவரும் ஏன் கைது செய்யப்படவில்லை என்று அமைச்சர் உண்மை பேசும் உத்தமர்கள் எவரையாவது கேட்டுச் சொல்வாரா?.
பிரகித் ஏக்னலிகொட ஒரு கேலிச்சித்திரக்காரர். லங்கா நியுஸ் என்ற இணையத்தளத்தின் செய்தியாளர். பத்திரிகையாளர். தமிழ் மக்களின் இனப்படுகொலையின் போது இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தமிழ்மக்களை கொன்றது தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருந்தவர். 2010 ஆண்டின் இலங்கை ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்த ராஜபக்சாவை எதிர்த்து எழுதி கொண்டிருந்தவர். 24.01.2010 அன்று ஜனாதிபதி தேர்தலிற்கு இரண்டு நாட்களிற்கு முன்பாக வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் போது காணாமல் போனார்.
தனது இரண்டு சிறு குழந்தைகளினதும் மிருதுவான கன்னங்களில் உதடு குவித்து உயிர்முத்தம் கொடுத்தவர் ஏன் திரும்பி வரவில்லை. அந்த வண்ணத்து பூச்சிகளின் வடிவான கன்னங்களில் கண்ணீர்கோடுகள் இன்னும் கரையாமல் இருக்கின்றன. பிரகீத்தின் சந்தியா கணவனின் காலடி ஓசைகள் கதவருகில் கேட்க கூடும் என்று ஒவ்வொரு இரவிலும், பகலிலும் ஆவி சோர காத்திருக்கிறார். சிரிப்பு மறந்து போன சீவியத்துடன் அதிகாரவர்க்கத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறார்.
தன்னைத் தானே உயிர் போகும் அளவிற்கு புத்தபிக்கு தாக்கி கொண்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் நோக்கில் காயங்களை எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்டேன் என சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவன் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கும் நாட்டில் அந்த அபலைப்பெண்ணிற்கு என்ன நீதி கிடைக்கும். ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்ற கொலையாளிகள் அதிகாரத்தில் இருக்கும் நாட்டில் அந்த அப்பாவிப்பெண்ணுக்கு யார் உண்மை சொல்லப் போகிறார்கள்.
புலிகளை அழித்து விட்டோம், பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் இலங்கை அரசு எதற்காக தமிழ் இளைஞர்களையும், தமிழ் பெண்களையும் இராணுவத்தில் சேர்க்கிறது?. யுத்தம் முடிந்து விட்டது என்று சொல்லி விட்டு ஏன் இராணுவத்தின் அளவை அதிகரிக்கிறார்கள்?. ஏனெனில் இந்த மக்கள் விரோத அரசுகளை மக்கள் எதிர்த்து போராடுவார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். அன்னிய பெருமுதலாளிகளிற்கு நாட்டையும் மக்களையும் அடகு வைப்பதை எதிர்த்து மக்கள் ஒருநாள் வீதிக்கு வருவார்கள் என்பது அவர்களிற்கு தெரியும். வெலிவேரியாவில் தமது குடிநீரை நஞ்சாக்கும் இந்திய நிறுவனத்தை எதிர்த்து போராடிய சிங்கள மக்களை சிங்கள இராணுவத்தை வைத்து கொலை செய்தது போல் தமிழ் மக்கள் தமது உரிமைகளிற்காக போராடும் போது தமிழ் இராணுவத்தை வைத்தே ஒடுக்குவதற்காகவே தமிழர்களை இராணுவத்தில் சேர்க்கிறார்கள்.
ஆனால் ஒடுக்குவதற்காக ஆட்சியாளர்களும், முதலாளிகளும் ஒன்று சேரும்போது அதற்கு எதிர்வினையாக ஒடுக்கப்படுவர்கள் ஒன்று சேர்ந்து போராடுவார்கள். இரவிற்கு பிறகு வெளிச்சம் வரும் என்பது தானே இயற்கையின் நியதி. ஒரு சிறுபொறி சுடர்ந்து ஒராயிரம் விளக்குகளை ஏற்றி வைக்கும்.