04_2008.jpg

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் 77ஆவது நினைவு நாளில், அவர்களின் சோசலிசப் புரட்சிக் கனவை, உழைக்கும் மக்களின் விடுதலை எனும் இலட்சியத்தைச் சாதிக்க உறுதியேற்று, இம்மாவீரர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23ஆம் தேதியன்று சென்னைசேத்துப்பட்டு சமூகநலக் கூடத்தில் பு.மா.இ.மு. அரங்கக் கூட்டத்தை நடத்தியது.

 

பு.மா.இ.மு.வின் சென்னை மாவட்டச் செயலர் தோழர் கார்த்திகேயன் தலைமையில் இளந்தோழர் தமிழ்ச்சுடரின் பறை முழக்கத்துடன் தொடங்கிய இக்கூட்டத்தில் பு.மா.இ.மு. தோழர் சக்திவேல், சட்டக் கல்லூரி பு.மா.இ.மு. கிளைச் செயலர் தோழர் ராஜேஷ், பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர் உஷா ஆகியோர் இவ்வீரத் தியாகிகளின் போராட்ட வாழ்வையும், நாட்டு விடுதலையின் மீது கொண்டிருந்த மாளாக் காதலையும், இளைஞர்களையும், பெண்களையும் அமைப்பாக்கிப் போராடிய படிப்பினைகளையும் விளக்கி, இத்தியாகிகள் வழியில் மறுகாலனியாக்கத்தை வீழ்த்தச் சூளுரைத்தனர்.


சிறப்புரையாற்றிய ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன், ""இந்திய மக்களின் விடுதலையை சோசலிசப் புரட்சிப் பாதையில் மட்டுமே சாதிக்க முடியும் என அரசியல் சித்தாந்த வழியை வகுத்துக் கொண்டுப் போராடிய மாவீரன் பகத் சிங் ஒரு மார்க்சியவாதி'' என்று ஆணித்தரமாக எடுத்துரைத்து, பகத் சிங் வழியில் பு.மா.இ.மு.வினர் மாணவர்இளைஞர்களை அணிதிரட்டி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரைத் தொடுக்க அறைகூவினார்.


இன்றைய மாணவர்இளைஞர்களைக் கவ்வியுள்ள சாதிமத மூடத்தனங்களைத் தூக்கியெறிந்து, நாட்டையும் சமுதாயத்தையும் விடுவிக்க வேண்டுமானால், இளைய தலைமுறையினருக்கு அறிவியல்பூர்வமான சிந்தனையும் செயல்பாடும் அவசியம் என்பதை விளக்கும் வகையில் பு.மா.இ.மு. தயாரித்துள்ள ""அறிவியக்கத்தின் அவசியம்'' என்ற நூலை ம.க.இ.க. தோழர் வீராச்சாமி வெளியிட, ஓவிய ஆசிரியர்


திரு.இராசகோபாலன் பெற்றுக் கொண்டார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான பகத்சிங், சுகதேவ், ராஜகுருவைப் பற்றி மாணவர்கள் கவிதை வாசித்து உறுதியேற்றனர். இளம் ஓவியர் தோழர் இரகுவின் கருத்தோவியங்களும், பு.மா.இ.மு. தோழர்களின் புரட்சிகரப் பாடல்களும் புரட்சிகர உணர்வைப் பொங்கியெழச் செய்தன. திரளாக மாணவர்இளைஞர்களும் உழைக்கும் மக்களும் பங்கேற்ற இக்கூட்டம், பகத் சிங் வழியில் மீண்டுமொரு விடுதலைப் போரைத் தொடுக்க உறுதியேற்பதாக அமைந்தது.


— புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, சென்னை.