கடந்த 22 ஆம் திகதி இறக்குவானை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்பாட்டம் பற்றி அச்சு, இலத்திரனியல் ஊடகங்களில் நிறைய செய்திகள் வந்த வண்ணமுள்ளன. நண்பர் ஒருவரிடம் இது பற்றி விசாரித்த போது, அங்கு இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு பற்றி வந்த செய்திகளில் அச்சம்பவத்திற்கும் அதன் பின்பு இடம்பெற்ற பொலிசாரின் பக்கச்சார்பான செயற்பாடுகள் தொழிற்சங்கங்களின் கோமாளித்தனங்கள், காட்டிக்கொடுப்புக்கள் அரசியல்வாதிகளின் அநீதியான தலையீடுகள் பற்றி வெளிப்படுத்தப்படாமை துரதிஷ்டவசமானது. இதன் உண்மை தன்மை பற்றி அறியவென நேற்று இறக்குவானை டெல்வின் “B” பகுதிக்குச் சென்றோம். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமியின் பெற்றோருடன் கதைக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அச்சிறுமியின் தந்தை இறக்குவானை நகரத்தில் பொதி சுமக்கும் தொழிலாளியாக வேலை செய்கின்றார். அச்சிறுமிக்கு சகோதரிகள் மூவரும் ஒரு சகோதரனும் உள்ளனர்.
சம்பவம் பற்றி சிறுமியின் தாய் விபரிக்கையில் சம்பவத்தினத்தன்று காலை 11.00 மணியளவில் டெல்வின் “A” பிரிவில் வசிக்கும் ஒன்றுவிட்ட மகனிடம் சீட்டு பணத்தினை கொடுத்து வரும்படி தனது மகளை அனுப்பியதாகவும் சீட்டு பணம் கொடுக்கச் சென்ற மகள் வரத்தாமதமாகவே தான் டெல்வின் “A” பிரிவிற்குச் சென்றதாகவும் கூறினார். டெல்வின் “B” பிரிவிலிருந்து டெல்வின் “A” பிரிவுக்குச் செல்ல இரு வழிகள் உள்ளன. டெல்வின் “A” பிரிவிலிருந்து பிரதான பாதை வழியே இச்சிறுமியை பின் தொடர்ந்த காமுகன் ஆள் அரவமற்ற பகுதியிலிருந்த பாழடைந்த வீட்டுக்கு சிறுமியை இழுத்துச்சென்று பாலியல் வல்லுறவு புரிந்துள்ளான். டெல்வின் “A” பிரிவிற்கு சென்று திரும்பிய தாய் சம்பவத்தின் பின் தனது வீட்டை நோக்கி தலைவிரி கோலமாக ஓடி வந்த மகளைக் கண்டதும் பக்கத்து வீட்டு பெண்ணை அழைத்து நடந்த சம்பவம் பற்றி அறிந்துள்ளார்.
அதன்பின் இறக்குவானை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்பாடு செய்துள்ளார். அப்போது சிறுமியின் உடையில் பாலியல் வல்லுறவு நடந்ததற்கான தடயங்கள் தெளிவாக இருந்துள்ளன. காவல் நிலையத்தில் வைத்து சிறுமியின் உடை மாற்றப்பட்டு பாலியல் வல்லுறவின் போது சிறுமி அணிந்திருந்த உடை மேலதிக பரிசோதனைக்காக பொலிசாரினால் கையேற்கப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவு இடம்பெற்ற இடத்தில் சிறுமியின் உடைந்த வலையல்கள் மற்றும் ஆதாரங்கள் பொலிசாரால் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதன்பின் பொலிசாரினால் சிறுமி நேரடியாக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்த சிறுமி உடல் உபாதை, நோவு என்பன தனக்கிருப்பதாக அறிவித்த பின்னும் வைத்தியர்களால் 48 மணி நேரத்திற்கு முன்னரே மேலிட உத்தரவின்படி வெளியேற்ற வேண்டியிருப்பதாக அச்சிறுமியின் தாயாரிடம் அறிவித்துள்ளனர். மேலும் அவரிடம் இரு ஆவணங்களில் கையொப்பம் பெற்றதாகவும் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரியாத தன்னிடம் சிங்களத்தில் எழுதப்பட்ட ஆவணங்களைக் காட்டி வாசித்து கையொப்பம் இடுமாறு கூறியதாக கூறினார்.
பொலிசாரின் செயற்பாடுகளும் வைத்தியர்களின் செயற்பாடுகளும் தமக்கு திருப்தியையோ நம்பிக்கையையோ அளிக்கவில்லையென தெரிவித்த அவர், தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி இப்பிரதேசத்திலிருக்கும் இன்னொரு பெண்ணுக்கு நிகழக்கூடாது என கண்ணீர் மல்கக் கூறினார். இச்செயற்பாட்டிற்கு கல்வியறிவற்ற பணபலமற்ற தங்களுக்கு முடிந்தவர்கள் உதவ முன்வரவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். அத்தாயின் மன வேதனையை எம்மால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இச்செய்தியினை எழுதும் இச்சந்தர்ப்பத்தில் இறக்குவானை சுற்றுவட்டத்திற்கு அருகில் இறக்குவானை பொலிசாருக்கு ஆதரவாக சிங்கள, முஸ்லிம் மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அறியக்கிடைத்தது.
இச்சம்பவம் தொடர்பில் எமக்கு எழும் கேள்விகள் வருமாறு:
01. இப்பாதகச் செயலைச் செய்த காமுகன் உக்குவத்தைப் பகுதியில் தலைமறைவாய் இருந்ததை அறிந்தும் இறக்குவானை பொலிசார் கைது செய்யாததது ஏன்?
02. இச்சம்பவத்தில் தலையிட்ட தொழிற்சங்கங்கள் அநீதி இழைக்கப்பட்ட சிறுமிக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன?
03. இரத்தினபுரி வைத்தியசாலையில் பக்கச்சார்பாக நடப்பதான தோற்றப்பாடுடைய வைத்தியர்கள் சரியான மருத்துவ பரிசோதனை அறிக்கையை அளிப்பார்களா?
04. இதன் பின்னணியில் உள்ள கஞ்சா, போதைப்பொருள் வியாபாரம் எந்த அரசியல்வாதியினால் இயக்கப்படுகின்றது? இச்சிறுமிக்கு நீதி நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதில் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது?
05. இச்சம்பவம் தொடர்பில் நீதி நியாயத்தை விரும்பும் முஸ்லிம் சகோதரர்கள், மலையக மக்கள் ஆகியோரின் நிலைப்பாடு என்ன?
071 625 825 1
Peoples Organization Social Justice