Language Selection

புதிய ஜனநாயகம் 2008

04_2008.jpgமோடி ராஜ்ஜியத்தில் 'இந்த"ப் பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது என்பதை குஜராத்தில் நடந்துவரும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நிரூபிக்கின்றன.


இந்துவெறி பாசிச பயங்கரவாதி மோடியின் ராமராஜ்ஜிய பேயாட்சிக்கு பாசிச ""துக்ளக்'' சோ விழா எடுத்துப் பாராட்டுகிறார் என்றால், அக்ரஹாரப் பத்திரிகையான ""கல்கி''யோ, தொடர்ச்சியாக மோடி சிறப்பிதழ் வெளியிட்டுத் துதிபாடுகிறது.

மோடி என்றாலே குஜராத்தில் நிலவும் பாசிச பயங்கரவாத ஆட்சியும், முஸ்லீம் இனப்படுகொலையும்தான் நாட்டு மக்களுக்கு நினைவுக்கு வரும். இவற்றை மூடி மறைத்துவிட்டு, அந்நிய முதலீட்டைப் பெறுவதிலும் தொழில் வளர்ச்சியிலும் அம்மாநிலம் முன்னோடியாகத் திகழ்ந்து, மோடியின் ஆட்சியில் ""ஊக்கமிகு குஜராத்''தாக மாறிவிட்டதென்று அப்பத்திரிகைகள் ஏற்றிப் போற்றுகின்றன. ஆனால், பார்ப்பனப் பத்திரிகைகளால் ஏற்றிப் போற்றப்படும் குஜராத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட மாணவி மீது நடத்தப்பட்ட வன்புணர்ச்சிக் கொடூரத்துக்கு எதிராக அம்மாநில மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களைத் தொடுத்து, மோடி ராஜ்ஜியத்தின் யோக்கியதையை நாடெங்கும் திரைகிழித்துக் காட்டியுள்ளனர்.


வட குஜராத்தில் உள்ள பதான் நகரின் அரசு ஆசிரியைப் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்த தாழ்த்தப்பட்ட மாணவி ஒருவரை (எதிர்கால நலன் கருதி அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை), அக்கல்லூரியின் பேராசிரியர்கள் 6 பேர் அவரை மிரட்டிக் கூட்டாகப் பாலியல் வன்புணர்ச்சி செய்து வந்திருக்கின்றனர். ""தேர்வுகளில் அகமதிப்பீட்டு மதிப்பெண்களைக் குறைத்து விடுவோம்'' என்று மிரட்டியே கடந்த 6 மாதங்களில் 14 முறை அக்கல்லூரியின் கணினிக் கூடத்திலும், ஆய்வுக் கூடத்திலும் வைத்து வன்புணர்ச்சியை ஏவியுள்ளனர்.


அக்கல்லூரியோ பெண்கள் மட்டும் பயிலும் கல்லூரி இருப்பினும் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை அக்கல்லூரிக்குப் பெண் பேராசிரியர்களே நியமிக்கப்பட்டதில்லை. நியமிக்கப்பட்ட பாரதிபென் பட்டேல் என்ற அப்பெண் பேராசிரியர், மாணவிகளிடம் ஆண் பேராசிரியர்கள் தவறாக நடந்து கொள்வதைப் பற்றி மேலதிகாரிகளிடம் புகார் செய்ததால், அவரும் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார். இதனைச் சாதகமாக்கிக் கொண்டு காமவெறிப் பிடித்த இப்பேராசிரியர்கள் கொட்டமடித்து வந்தனர். கடந்த ஜனவரி 31ஆம் தேதியன்று அக்கல்லூரியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் அம்மாணவி மயக்கமடைந்து விழுந்து, அவர் கருவுற்றிருப்பது தெரிய வந்தது. அதன்பிறகு அம்மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இப்பேராசிரியர்கள் கருவைக் கலைக்க முயற்சித்துள்ளனர். அம்மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அவரிடம் விசாரித்தபோதுதான் பேராசிரியர்களின் காமவெறியாட்டம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது.


பாதிக்கப்பட்டிருப்பது இந்த ஒரு மாணவி மட்டுமல்ல; இன்னும் பல மாணவிகள் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ள விசயம், அம்மாணவிகள் மூலம் அவர்களது பெற்றோருக்குத் தெரிய வந்து, கொதித்தெழுந்த அவர்கள் பதான் நகர மக்களையும் திரட்டிக் கொண்டு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று அப்பேராசிரியர்களைத் தெருவில் போட்டு அடித்து உதைத்தனர். பின்னர் போலீசு தலையிட்டுக் காமவெறி பேராசிரியர்கள் 8 பேரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது.


ஆனாலும், பதான் நகர மக்களின் கோபம் தணியவில்லை. குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி பதான் நகரில் தொடர்ச்சியாக இரு நாட்களுக்குக் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக ஏறத்தாழ 25,000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்திக் குற்றவாளிகளை உடனடியாகத் தண்டிக்கக் கோரினர். பதான் நகர் மட்டுமின்றி, குஜராத்தின் இதர பெருநகரங்களிலும் இதுபோன்ற ஆர்ப்பாட்டப் பேரணிகள் தொடர்ந்து நடந்தன. மோடியின் ராமராஜ்ஜியத்தில் இதுவரை இப்படியொரு வீச்சான தொடர்போராட்டம் நடந்ததேயில்லை எனுமளவுக்கு உழைக்கும் மக்களின் கோபாவேசம் அம்மாநிலமெங்கும் சுழன்று வீசியது.


காமவெறி பேராசிரியர்களால் சீரழிக்கப்பட்ட அந்த தலித் மாணவி, மெக்சனா மாவட்டம் ஜேட்டல் வசனா கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தையான பாபுபாய் கூலித் தொழிலாளி. பத்தாம் வகுப்பிலும் +2 வகுப்பிலும் இம்மாணவி பள்ளியிலேயே முதன்மையாக வந்து படிப்பில் தேர்ச்சி பெற்றவர். ஆசிரியைப் பயிற்சிக் கல்லூரியிலும் அவர் எளிதில் தேர்ச்சி பெற்றுவிட முடியும். எனினும், அவர் தாழ்த்தப்பட்ட மாணவி என்பதாலேயே அகமதிப்பீட்டு மதிப்பெண்களைக் குறைத்து விடுவோம் என்று மிரட்டி இக்காமவெறியர்கள் பாலியல் வன்முறையை ஏவியுள்ளனர். ஆனால், மோடி அரசோ குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்யாமல், சாதாரண வன்புணர்ச்சிக் குற்றத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்து தனது சாதியப் பாசத்தை நிரூபித்துக் காட்டியுள்ளது.


மேலும், குற்றவாளிகளில் 6 பேர் பதான் தொகுதி எம்.எல்.ஏ.வும் வருவாய்த்துறை அமைச்சருமான திருமதி ஆனந்திபென் பட்டேலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவருக்குத் தேர்தல் ஏஜெண்டுகளாக வேலை செய்தவர்கள். பதான் நகரிலுள்ள ஆசிரியை பயிற்சிக் கல்லூரி முதல்வரோ, இதற்கு முன்பு பணியாற்றிய கல்லூரியில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர். ஆனந்தி பென்னின் அதிகாரத்தால் நடவடிக்கை ஏதுமின்றி இக்கல்லூரிக்கு மாற்றப்பட்டவர். இதுவொருபுறமிருக்க, அமைச்சர் ஆனந்திபென்னிடம் இக்கல்லூரியில் தொடரும் பாலியல் கொடுமைகளைப் பற்றி மாணவிகள் ஏற்கெனவே முறையிட்டிருக்கின்றனர். ஆனாலும், தனது விசுவாசிகளான காமவெறியர்கள் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


குஜராத்தில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண்பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் 1000க்கு 883 என்ற அளவில் குறைந்துள்ளதால், ""பெண் குழந்தைகளைக் காப்போம்'' எனும் இயக்கத்தை மோடி அரசு கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து கோலாகலமாக நடத்தி வருகிறது. ஆனால், தாழ்த்தப்பட்ட மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான கொடூரம் குஜராத்தையே உலுக்கிய போதிலும், முதல்வர் மோடி அப்பெண்ணை நேரில் சந்திக்கவோ, குற்றவாளியைத் தண்டிக்க உறுதியளிக்கவோ இதுவரை முன்வரவில்லை.
முதல்வர் மோடியே இந்த விவகாரத்தில் அக்கறை காட்டாதபோது, இக்கொடூரத்துக்கு எதிரான வழக்கும் விசாரணையும் ராமராஜ்ஜியத்தில் எப்படி இருக்கும்? ""போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்'' என்கிறார், உள்துறை அமைச்சர் அமித்ஷா. நீதித்துறை விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த வழக்கு தொடர்பான எந்த வரையறையும் விதியும் இதுவரை வகுக்கப்படவில்லை. மாநில அரசின் விதிப்படி மாவட்ட ஆட்சியர் மட்டுமே தற்போதைக்கு விசாரணை நடத்த முடியும். இந்நிலையில் ராமராஜ்ஜிய விசாரணை எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.


மதவெறி மூடத்தனத்திலும் ஆணாதிக்க வெறியிலும் திளைத்திருக்கும் குஜராத்தில் பெண் குழந்தைகளைப் பிறந்தவுடனேயே கொன்றுவிடும் கொடூர பழக்கம் பரவலாக உள்ளது. குறிப்பாக, பட்டேல் ஆதிக்க சாதியினரிடம் இது அதிகமாக உள்ளது. இதனால் திருமணம் செய்து கொள்ள பெண்கள் கிடைக்காமல், பட்டேல்கள் பணம் கொடுத்து பழங்குடியினப் பெண்களை விலைக்கு வாங்கி மணமுடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விலைக்கு வாங்கப்படும் பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். பட்டேல் எஜமானர்களின் கொடுமையிலிருந்து மீள அப்பழங்குடியினப் பெண்கள் தற்கொலைப் பாதையையே தேர்ந்தெடுக்கின்றனர். வாரத்துக்கு 2,3 பெண்கள் என்ற விகிதத்தில் மோடி ராஜ்ஜியத்தில் பழங்குடியினப் பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர். இதே குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் வறுமையின் காரணமாக, உள்நாட்டு வெளிநாட்டு பணக்கார வர்க்கத்தினருக்காகக் கருவைச் சுமக்கும் வாடகைத் தாய்கள் அதிகரித்து வருகின்றனர்.


ஆசிரியைப் பயிற்சிக் கல்லூரி மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம் குஜராத்தை உலுக்கிக் கொண்டிருந்த அதேநேரத்தில், கடந்த பிப்ரவரியில் அகமதாபாத்தில் ஒரு இளஞ்சிறுமி பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் குற்றுயிராய் மருத்துவமனையில் கிடக்கிறார். விதவைப் பெண்ணிடம் ஆபாசமாகக் கேலி செய்த காமவெறிக் கும்பலைத் தட்டிக் கேட்ட நபர், அக்கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது உறவினராலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவையெல்லாம் ஒரே வாரத்தில் நடந்துள்ள கொடுமைகள்.


பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரம் என்பார்கள். பயங்கரவாத மோடி ஆட்சி செய்தால் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல; குஜராத்தின் ஒட்டுமொத்த பெண்களுக்குமே பாதுகாப்பில்லை என்பது நிரூபணமாகி விட்டது.

 

· செங்கதிர்