Language Selection

புதிய ஜனநாயகம் 2008

04_2008.jpg

இந்தியாபாக். இடையேயான உறவு சாண் ஏறினால் முழம் வழுக்கும் வழுக்குப்பாறை போன்றது. உப்புப் பெறாத விசயத்தைக்கூட ஊதிப் பெருக்கி, முட்டல்மோதல் நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்துவதில் இரு நாட்டு ஆளும் கும்பலும் கை தேர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ""செண்டிமென்டை''த் தூண்டிவிடக் கூடிய பிரச்சினை கிடைத்தால், சும்மா விட்டு விடுவார்களா?

 

சரப்ஜித் சிங் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 17 ஆண்டுகளாக பாக்.சிறையில் தூக்குத் தண்டனைக் கைதியாக அடைபட்டுக் கிடக்கிறார். பாக்.இல் உள்ள லாகூர், ஃபைசலாபாத், கஸுர் ஆகிய மூன்று நகரங்களில் 1990 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புகளில் 14 பேர் கொல்லப்பட்டனர். சரப்ஜித் சிங்கை பாக். எல்லைக்குள் வைத்துக் கைது செய்த போலீசார், அவருக்கும் இந்தக் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சுமத்தி, இந்த வழக்கில் அவருக்குத் தூக்குத் தண்டனையும் வாங்கிக் கொடுத்தனர். சரப்ஜித் சிங்கின் மீதான குற்றச்சாட்டு பாக். உச்சநீதி மன்றத்திலும் "நிரூபிக்கப்பட்டு', தூக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. பாக். அதிபரால் அவரது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு, ஏப்ரல் 1அன்று அவரது தண்டனையை நிறைவேற்றப் போவதாக அறிவிக்கப்பட்டது.


சரப்ஜித் சிங்கைத் தூக்கிலிடும் தேதி திடீரென முடிவு செய்யப்பட்டதற்கு பின்னே, சில வக்கிரமான உண்மைகள் உண்டு. பாக். சிறையில் தூக்கு தண்டனைக் கைதியாக அடைபட்டுக் கிடந்த, இந்தியாவைச் சேர்ந்த காஷ்மீர் சிங்கை மன்னித்து, விடுதலை செய்து, கடந்த மார்ச் 3 அன்று இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது, பாக்.அரசு. காஷ்மீர் சிங் 35 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைபட்டுக் கிடந்ததால், அவரின் விடுதலையை இரண்டு தரப்புமே, நல்லெண்ணத்தின் அடையாளமாகத் தூக்கி வைத்துக் கொண்டாடின. காஷ்மீர் சிங் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த மறுநாளே, தான் பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இந்தியாவிற்காக உளவு பார்த்த உண்மையைப் போட்டு உடைத்தார். இது, இந்தியாவிற்கு தர்ம சங்கடத்தையும், பாகிஸ்தானுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியது.


இதே சமயத்தில், அரியானா மாநிலம் குர்கான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலித் முகம்மது என்ற பாகிஸ்தானிய இளைஞர் கடந்த பிப்.12 அன்று இறந்து போன செய்தி பாகிஸ்தானில் வெளியானது. கிரிக்கெட் ரசிகரான காலித் முகம்மது, கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்காக இந்தியாவிற்கு வந்திருந்த பொழுது, விசா விதிகளை மீறியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். காலித் முகம்மது, போலீசாரின் சித்திரவதையால் இறந்து போனதாக பாக். குற்றஞ் சுமத்தியது; இந்தியாவோ, அந்த இளைஞர் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்ததாக விளக்கமளித்தது. எனினும், அவரின் சாவு மர்மமாக இருப்பதாக இந்தியப் பத்திரிக்கைகள் கூட எழுதுகின்றன.


காஷ்மீர் சிங் விடுதலை செய்யப்பட்டதற்குக் கைமாறாக இந்தியா ஏதாவது செய்யும் என எதிர்பார்த்திருந்த பாகிஸ்தானில், காலித் முகம்மதுவின் மர்மச்சாவு இந்தியாவுக்கு எதிரான வெறுப்பைக் கிளறிவிடப் பயன்பட்டது. காஷ்மீர் சிங் விடுதலையின் மூலம், தான் இந்தியாவிற்கு எந்தச் சலுகையும் காட்டவில்லை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த முஷாரப், காலித் முகம்மதுவின் சாவிற்குப் பதிலடியாக, சரப்ஜித் சிங்குக்குத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடாலடியாக உத்திரவிட்டார்.


""இந்தியாபாக். எல்லையையொட்டிய கிராமத்தைச் சேர்ந்த சரப்ஜித் சிங்குக்கும் குண்டு வைப்புக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது; அவர் ஒருநாள் குடிபோதையில் பாக்.எல்லைக்குள் அறியாத்தனமாக நுழைந்து சுற்றிக் கொண்டிருந்த பொழுது பாக். போலீசாரால் கைது செய்யப்பட்டார்; மஞ்ஜித் சிங் என்ற உளவாளியைப் பிடிக்க முடியாமல் போனதால், சரப்ஜித் சிங்கைப் பிடித்துக் கொண்டு போய் பாக். போலீசார் ஆள்மாறாட்டம் செய்து விட்டார்கள்'' என சரப்ஜித் சிங்கின் உறவினர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். இந்திய அரசும், ஓட்டுக்கட்சிகளும் இதன் அடிப்படையில் சரப்ஜித் சிங்கைத் தூக்கிலிடக் கூடாது எனக்கோரி வருகின்றன.


பாக்.எல்லையொட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழைகளைக் காசுக்கு மயக்கி, அதிகாரப்பூர்வமற்ற உளவாளிகளாக இந்திய அரசு பயன்படுத்தி வருவதால், சரப்ஜித் சிங் குறித்து இந்தியத் தரப்பு கூறுவதை முற்றிலுமாக நம்பிவிட முடியாது; அதே சமயம், சரப்ஜித் சிங் மீதான குற்ற்றச்சாட்டு குறித்த விசாரணை, பாக். நீதிமன்றங்களில் நீதிவழுவாத முறையில் நடந்திருக்கும் என்றும் கூற முடியாது. பாகிஸ்தானோடு தொடர்புடைய தீவிரவாதி என இந்திய போலீசாரால் குற்றஞ்சுமத்தப்பட்டவரின் வழக்கு, இந்திய நீதிமன்றங்களில் ""சட்டப்படி'' நடந்து விடுகிறதா என்ன?


சரப்ஜித் சிங்கின் விவகாரம் ஏதோ அதி முக்கியமான தேசியப் பிரச்சினை போல இந்திய நாடாளுமன்றத்திலும், பத்திரிகைகளிலும் விவாதிக்கப்பட்டது. ""எனது கணவருக்காக தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டாம்'' என சரப்ஜித் சிங்கின் மனைவி அறிக்கை கொடுத்து, பரபரப்பூட்டினார், கள்ள நோட்டை புழங்கவிட்டார் என்ற குற்றச் சாட்டின் கீழ் இந்தியச் சிறையில் அடைபட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமால் குரேஷி என்பவரை இந்தியா விடுதலை செய்ய, அதற்கு கைமாறாக பாக்.,சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை ஏப்ரல் 30 வரை நிறைவேற்ற வேண்டாம் என தற்பொழுது உத்தரவிட்டுள்ளது.


இந்திய நாட்டைச் சேர்ந்த 575 பேர் பாக். சிறையிலும்; பாகிஸ்தானைச் சேர்ந்த 200 பேர் இந்தியச் சிறைச்சாலையிலும் அடைபட்டுக் கிடப்பதாக இரு நாட்டு அரசுகளுமே ஒத்துக் கொண்டுள்ளன. எனினும், இந்தியாவும், பாகிஸ்தானும் ""உளவு குட்டு உடைந்து விடும்'' என்ற காரணத்தினால், இவர்களின் விடுதலை பற்றி பெரிதாக அக்கறை காட்டுவது கிடையாது. ""தனது கணவர் 35 ஆண்டுகளாக பாக். சிறையில் அடைபட்டுக் கிடந்த நேரத்தில், தனக்கு ஒரு ஆறுதல் வார்த்தையோ, நிவாரண உதவியோ இந்திய அரசு செய்ததில்லை'' எனக் கூறி, இந்திய அரசின் மனிதாபிமானத்தைப்போட்டு உடைத்துள்ளார், காஷ்மீர் சிங்கின் மனைவி. இரு நாடுகளுமே, தங்களின் தூதரக அதிகாரிகளைக்கூட உளவாளிகளாகப் பயன்படுத்தும் அடிவெட்டு வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.


பாக். நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை நிறுத்திவிடக் கோருவது மனிதாபிமானம் என்றால், இதே அடிப்படையில், இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அப்சல் குருவின் தூக்கு தண்டனையையும் நிறுத்தக் கோர வேண்டும். ஆனால், போலி கம்யூனிஸ்டுகள் கூட அப்சல் குரு பிரச்சினையில் வாயை இறுக மூடிக் கொள்கின்றனர். சரப்ஜித் சிங்குக்காகக் கிளர்ந்து எழுந்த இந்திய நாடாளுமன்றம், சிங்கள இனவெறி இராணுவத்தால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் பொழுதும்,சுட்டுக் கொல்லப்படும் பொழுதும் சம்பிரதாய எதிர்ப்புக் கூடத் தெரிவிப்பதில்லை; தேசியக் கட்சிகள் சிங்கள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், யாகம், பிரார்த்தனை என அளப்பரி பண்ணியதுமில்லை. அப்சல் குரு மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினையில் காட்டப்படாத அக்கறை, சரப்ஜித் சிங் பிரச்சினையில் மட்டும் பொங்கி வழிவதற்குக் காரணம், பாக். எதிர்ப்பு இந்து மதவெறி அரசியல் தானேயொழிய, மனிதாபிமானமோ, சக குடிமகன் என்ற பாசமோ கிடையாது!


· மணி