Language Selection

புதிய ஜனநாயகம் 2008

04_2008.jpg

உலகமயத்தால் நாசமாக்கப்பட்ட விவசாயம், வங்கி கடன் தள்ளுபடி என்ற கசர்ச்சியால் சீர்பட்டு விடாது.


அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதால், 200809ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவுசெலவு அறிக்கையும், தமிழக அரசின் வரவுசெலவு அறிக்கையும் விவசாயிகளைக் கவரும் நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 மைய அரசு 60,000/ கோடி ரூபாய் பெறுமான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது; தமிழக அரசின் பட்ஜெட்டில் விவசாயக் கடனுக்கான வட்டி 4 சதவீதமாகக் குறைப்பு; 1,500 கோடி ரூபாய் பெறுமான புதிய விவசாயக் கடன்; பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு எனச் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஐந்து ஏக்கர் வரை விளைநிலங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள சிறு / குறு விவசாயிகள், 31.3.2007 முடிய பொதுத்துறை வங்கிகள் / கிராமப்புற வங்கிகள் / கூட்டுறவு வங்கிகளிடம் வாங்கிய கடன்கள் அல்லது அந்த தேதி வரை நிலுவையாக இருக்கும் அவர்களின் கடன்களை ரத்து செய்ய ரூ.50,000 கோடியும்; ஐந்து ஏக்கருக்கு மேல் நில உடைமை வைத்திருக்கும் விவசாயிகள், தாங்கள் மேற்படி வங்கிகளில் 31.3.2007க்குள் வாங்கிய அல்லது தங்களின் பெயரில் நிலுவையில் உள்ள கடன்களில் 75 சதவீதத்தை ஒரே தவணையில் அடைத்து விட்டால், மீதமுள்ள 25 சதவீதக் கடனை ரத்து செய்ய ரூ. 10,000 கோடியும் ஒதுக்கப் போவதாக மைய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த அளவுகோலுக்குள் வரும் விவசாயக் கடன்கள் அனைத்தையும் 30.06.2008க்குள் ரத்து செய்துவிடுவோம் என்றும் மைய அரசு உறுதியளித்திருக்கிறது.


விவசாயத்தில் உலகமயம் புகுத்தப்பட்ட பிறகுதான் இந்தியாவெங்கும் விவசாயிகள், மீளவே முடியாத கடன் வலைக்குள் சிக்கிக் கொண்டார்கள். அக்கொள்கைப்படி விவசாயிகளுக்கு மானியம்கூடத் தரக்கூடாது என வாதிட்டு வரும் மன்மோகன் சிங் ப.சிதம்பரம் மான்டேக் சிங் அலுவாலியா கும்பலிடமிருந்து இந்தக் கடன் தள்ளுபடியைப் பெறுவதற்கு, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருந்தது.


ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா எனப் பரவிய விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் என்ற சூறாவளி கடந்த மூன்று ஆண்டுகளாக மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில்தான் மையம் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், விதர்பாவைச் சேர்ந்த 1,242 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் (மார்ச் 22 முடிய) 220 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா பருத்தி விவசாயிகளின் இந்தக் ""கலகம்''தான், கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுவதற்குத் தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.


எனினும், விதர்பாவைச் சேர்ந்த 18 இலட்சம் பருத்தி விவசாயிகளுள் பெரும்பாலானோருக்கு இக்கடன் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பேயில்லை. ஏனென்றால் விதர்பாவைப் பொருத்தவரை, இப்பகுதியில் சராசரி நிலஉடைமை 7.5 ஏக்கராக இருப்பதால், அரசின் கடன் தள்ளுபடியில் இருந்து, பருத்தி விவசாயிகள் விலக்கப்பட்டு விடுவார்கள். விதர்பாவைச் சேர்ந்த சிறு விவசாயிகளிடம் கூட ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உடமையாக இருப்பதற்குக் காரணம், இப்பகுதி வானம் பார்த்த பூமி என்பதுதான். அதேசமயம், பாசனவசதி மிக்க மேற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிறு விவசாயிகளின் சராசரி நில உடைமை ஐந்து ஏக்கருக்கும் குறைவாக இருப்பதால், அவர்களுக்குக் கடன் தள்ளுபடியால் பலன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.


""விதர்பாவின் பருத்தி விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் அளவிற்குதான் கடன் தள்ளுபடி சலுகை கிடைக்கும்; அதேசமயம், மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கரும்பு, திராட்சை விவசாயிகளுக்கு இச்சலுகை 6,000 கோடி ரூபாயாக இருக்கும்'' என்கிறார், விதர்பா மக்கள் இயக்கத்தின் தலைவர் கிஷோர் திவாரி. அதனால்தான், விதர்பா பகுதி விவசாயிகள் நஞ்சைபுஞ்சை என்ற நிலவள வேறுபாட்டை கணக்கில் எடுத்துக் கொண்டு, கடன் தள்ளுபடிக்கான அளவுகோலை மாற்ற வேண்டும் எனக் கோரத் தொடங்கியுள்ளனர்.


அதிகாரத்தில் இருக்கும் மெத்த படித்த மேதாவிக் கும்பலோ, ""தான் பிடித்த முயலுக்கு மூணே கால்'' என அடம் பிடித்து, கடன் தள்ளுபடி நிபந்தனையை மாற்ற மறுக்கிறது. அதனால்தான், கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நிற்காமல் தொடர்கிறது. அறுவடைப் பண்டிகையான ஹோலியன்று கூட மூன்று பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பாவில் எட்டு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி என்ற அளவில் தற்கொலைச் சாவுகள் தொடருவதாகக் கூறுகிறார், கிஷோர் திவாரி.


நஞ்சை, புஞ்சை என்ற வேறுபாடு மகாராஷ்டிராவில் மட்டுமின்றி, இந்தியாவெங்கிலும், காணப்படக்கூடியது. மைய அரசின் அளவுகோலின்படி பார்த்தால், ஆந்திராவின் அனந்தப்புர், ராயலசீமா பகுதிகள், தமிழகத்தின் இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள், குஜராத்தின் கட்ச், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான புஞ்சை விவசாயிகளுக்கு, இக்கடன் தள்ளுபடியால் எந்தப் பலனும் கிடைக்காது. இவர்கள் தங்களின் வங்கிக் கடனில் 25 சதவீதம் ரத்து செய்யப்படும் சலுகையைப் பெற வேண்டும் என்றால், 75 சதவீதக் கடனை ஒரே தவணையில் அடைக்க வேண்டும். அந்த அளவிற்கு வசதியிருந்தால், விவசாயி ஏன் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரிப் போராடியிருக்க வேண்டும்? தற்கொலை முடிவை தெரிவு செய்திருக்க வேண்டும்? இதுவொருபுறமிருக்க, ""வங்கிக் கடனை, கந்துவட்டிக்குக் கடன் வாங்கி அடைத்துவிட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு மைய அரசு என்ன நிவாரணம் வழங்கப் போகிறது?'' என்ற கேள்வியை விவசாயிகளே எழுப்பி வருகின்றனர்.


···


தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம், விவசாயிகளின் கடன் பிரச்சினை பற்றி 2003ஆம் ஆண்டு அளித்துள்ள அறிக்கையில், ""இந்தியாவில் 10இல் எட்டு விவசாயக் குடும்பங்களுக்கு ஐந்து ஏக்கர் அல்லது அதற்குக் குறைவான நிலம் சொந்தமாக இருப்பதாகவும்; இதில் 50 சதவீதக் குடும்பங்கள், கந்துவட்டிக்காரர்களிடம் சராசரியாக 9,000 ரூபாய் வரை கடன்பட்டிருப்பதாகவும்'' குறிப்பிட்டுள்ளது.


""இந்திய விவசாயிகளுள் 42.3 சதவீதத்தினருக்கு வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை; அவர்கள் பயிர்க் கடனுக்குக் கந்துவட்டிக் கும்பலைத்தான் நம்பியிருக்கிறார்கள்; 2003ஆம் ஆண்டு நிலவரப்படி விவசாயிகளின் கந்துவட்டிக் கடன் 43,000 கோடி ரூபாயாகும்'' என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குறிப்பிடுகிறார். இப்புள்ளிவிவரங்கள்கூட முழுமையானது; உண்மையானது எனச் சொல்லி விட முடியாது.


கந்துவட்டிக் கும்பலின் அச்சுறுத்தலுக்கும், அவமதிப்புக்கும் பயந்துதான், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளின் நிலங்களைச் சட்டவிரோதமாகப் பறித்துக் கொள்ளும் அளவிற்கு அபாயகரமானதாக கந்துவட்டிக் கும்பல் வளர்ந்து நிற்கிறது. ""கடன் நிவாரண கமிசன் ஒன்றை அமைத்து, அதன் மூலம் தங்களின் கந்துவட்டிக் கடனை அடைப்பதற்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்க வேண்டும்'' என விவசாயிகள் கோரி வருகிறார்கள். ப.சிதம்பரம் இக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதோடு, கந்துவட்டிக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கையை விரித்து விட்டார்.


இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கந்துவட்டிக்கு எதிராகப் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்களைப் பயன்படுத்தி, விவசாயிகள் கந்துவட்டிக் கும்பலிடம் பட்ட கடன்கள் அனைத்தையும் நட்டஈடின்றி ரத்து செய்ய எந்தவொரு மாநில அரசும் தயாராக இல்லை. பஞ்சாப் மாநிலத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் வேளாண் விளைபொருட்களுக்கான கட்டணத்தைக் கொடுக்கும்பொழுது, அதில் 67 சதவீதத்தைப் பணமாக, கந்துவட்டிக்காரர்கள் மூலம் விவசாயிகளுக்குக் கொடுப்பதை சட்டமே அங்கீகரிக்கும் அளவிற்கு, அக்கும்பலின் அரசியல் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது. கந்துவட்டிக் கடன் கொடுமையைக் கண்டு கொள்ளாமல், வங்கிக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தால்கூட, அது பாதிக் கிணறு தாண்டிய கதையாகத்தான் முடியும்.

 

···


""இந்திய வங்கித் துறையின் வளர்ச்சி மற்றும் தற்காலப் போக்கு'' எனும் தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ""2003ஆம் ஆண்டு தொடங்கி 2006 வரையிலும் பொதுத்துறை வங்கிகள், விவசாயிகளுக்குக் கொடுத்த கடனில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான கடன்கள் வசூலிக்கப்பட்டு விட்டதாகவும்; 2006ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி அதற்கு முந்தைய ஆண்டுக் கடன்கள் முழுமையாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும்; 2006ஆம் ஆண்டின்படி, பொதுத்துறை வங்கிகள் / கிராமப்புற வங்கிகள் / கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள மொத்த விவசாயக் கடன்களில் சிறு/குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன் 22,507 கோடி ரூபாய் தான்'' என்றும் குறிப்பிட்டுள்ளது.


இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், வங்கிகளில் சிறு/குறு விவசாயிகள் வாங்கியுள்ள கடனில் 50,000 கோடியை ரத்து செய்யப் போவதாக ப.சிதம்பரம் கூறியிருப்பதை உண்மைக்குப் புறம்பான, ஊதிப் பெருக்கப்பட்ட, ஓட்டுப் பொறுக்குவதற்கான கவர்ச்சி அறிவிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்; இல்லையென்றால், விவசாயிகளின் பெயரைச் சொல்லி, வேறெந்த கும்பலோ கடன் வாங்கி ஏப்பம் விட்ட தொகையை அடைக்கும் திருட்டுத்தனமாக இருக்க வேண்டும்.


இந்தக் கவர்ச்சி வேடம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ப.சிதம்பரம் பொதுத்துறை வங்கிகள் / கூட்டுறவு வங்கிகள் 31.3.2007 முடிய எவ்வளவு விவசாயக் கடன்களை வழங்கியுள்ளன? அதில் சிறு/குறு விவசாயிகளுக்கு எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது? விவசாயக் கடன் தள்ளுபடிக்காக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது? போன்ற விவரங்களை பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிடாமல், ஒதுக்கித் தள்ளிவிட்டார் போலும்.


இன்னும் விளக்கமாகச் சொன்னால், விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வார்த்தை பட்ஜெட் அறிக்கையில் எங்குமே இடம் பெறவில்லை; அதற்காக பட்ஜெட்டில் ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ப.சிதம்பரம் பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் படிக்கும்பொழுது, விவசாயக் கடன் தள்ளுபடியை ஒரு திடீர் அறிவிப்பாகத்தான் வெளியிட்டார்.


மைய அரசால், கூட்டுறவு வங்கிகளைச் சீர்திருத்துவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி, ""கடன் வழங்குவது மற்றும் வசூலிப்பது, கடனைத் தள்ளுபடி செய்வது ஆகிய நிர்வாக நடவடிக்கைகளில் அரசின் தலையீட்டை அறவே ஒழித்து விட வேண்டும்'' என்ற ஆலோசனையை ஏற்கெனவே வழங்கியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நிலுவையாக உள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய ரூ. 18,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு, இப்பரிந்துரையை அமல்படுத்த மைய அரசும், மாநில அரசுகளும் தயாராக இருந்து வந்தன. தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடி என்ற கவர்ச்சியின் பின்னே, கூட்டுறவு வங்கிகளை அரசின் பிடியில் இருந்து விடுவிக்கும் இரகசியத் திட்டம் மறைந்திருக்கக் கூடும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே சந்தேகிக்கின்றனர்.


""நெல், கோதுமை உள்ளிட்ட அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். சர்வதேச விலை ஏற்ற/இறக்கங்கள், உள்ளூர் இடைத்தரகர்களின் ஆதிக்கம் போன்றவற்றால் விவசாயிகளுக்கு நட்டமேற்படுவதைத் தடுக்க, "விலை நிலைப்படுத்தல் நிதியம்' ஒன்றை உருவாக்க வேண்டும்; விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதைத் தடுக்க வேண்டும்; விவசாயிகள் பெயரில் தரப்படும் உர மானியத்தை உரக் கம்பெனி முதலாளிகள் சுருட்டிக் கொள்வதைத் தடுக்க வேண்டும்; பொதுத்துறை வங்கிகள், விவசாயத்திற்குக் கடன் வழங்குவதற்கு முன்னுரிமை தருவதோடு, விவசாயக் கடனுக்கான வட்டியை 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும். கடன் வலையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவிட கடன் நிவாரண கமிசன் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.'' இவைதான், விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள்.


உலகமயம் என்ற பெயரில் விவசாயத் தொழில் சூதாட்டமாக மாறிப் போனதை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் உட்பொருள். ஆனால், ப.சிதம்பரமோ இந்த அடிப்படையான உற்பத்தி சார்ந்த கோரிக்கைகளுள் ஒன்றைக் கூட ஏற்கவில்லை. மாறாக, அழும் குழந்தையை மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல, கடன் தள்ளுபடி என்ற கவர்ச்சிகரமான, அரைவேக்காட்டுத்தனமான திட்டத்தை அறிவித்திருக்கிறார்.


அரசின் வருமானம் கடந்த பட்ஜெட்டை விட இந்த ஆண்டு 15 சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டாலும், உணவு மானியம், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், கல்வி, சுகாதாரம், பாசன வசதி, பயிர்க் காப்பீடு உள்ளிட்டு எந்தவொரு சமூக நலத் திட்டத்திற்கும் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. ப.சிதம்பரத்தைப் பொருத்தவரை, 9 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைக் கட்டிக் காக்க வேண்டும்; பற்றாக்குறையைக் குறைத்து, உலக வங்கியின் பாராட்டைப் பெற வேண்டும் என்பதுதான் குறிக்கோள். தனது முதல் இலக்கை அடைய தரகு முதலாளிகளுக்கும், மேட்டுக்குடி கும்பலுக்கும் வரிச் சலுகைகளை வாரியிறைத்திருக்கும் ப.சிதம்பரம், இரண்டாவது குறிக்கோளை நிறைவேற்ற, மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்.


· ரஹீம்