Language Selection

04_2008.jpg

திருச்சி, மதுரை, கடலூர், கோவை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மனித உரிமை பாதுகாப்பு மையம் (ஏகீகஇ) தனது சிவகங்கை மாவட்டக் கிளை தொடக்கவிழாவை கடந்த மார்ச் 2ஆம் தேதியன்று செந்திலாண்டவர் திருமண மண்டபத்தில் நடத்தியது.

வழக்குரைஞர் கா.அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ம.க.இ.க. மாவட்ட அமைப்பாளர் தோழர் எழில்மாறன், ம.உ.பா. மையத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலர் வாஞ்சிநாதன், பஞ்சாயத்து செயல் அலுவலர் சங்க மாநிலத் தலைவர் மு.கணேசன், கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலர் சந்திரமோகன், அரசுப் பணியாளர் சங்கத்தின் ஹைதர் அலி மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். ""சட்டத்தில் சமநிலை; சமூகத்தில் இழிநிலை இதுவே மனித உரிமைகளின் நிலை'' என்ற தலைப்பில் மதுரை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் லஜபதிராய் அவர்களும், ""முதுகெலும்பு விவசாயத்தை மோதி முறிக்கும் ஏகாதிபத்திய உலகமயம்'' என்ற தலைப்பில் பெங்களூரு உயர்நீதி மன்ற வழக்குரைஞர் எஸ்.பாலன் அவர்களும் மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகப் போராட அறைகூவிச் சிறப்புரையாற்றினர்.


இத்தொடக்கவிழாவை இளையான்குடி சாலை அண்ணாமலை நகரில் பந்தல்போட்டு நடத்த ஏற்பாடு செய்து வந்த நிலையில், சிவகங்கை போலீசு அதற்குத் திடீர் தடை விதித்தது. அதன்பிறகு பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு நடுவே இவ்விழாவை நடத்திய ம.உ.பா. மையத்தினர், மனித உரிமை அமைப்பினருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை என்று மனித உரிமையின் லட்சணத்தை அம்பலப்படுத்தி விழாவில் உரையாற்றினர். புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். விழாவின் இறுதியில் நடைபெற்ற ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி, போராட்ட உணர்வுக்குப் புது ரத்தம் பாய்ச்சியது.


ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி உழைக்கும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள சிவகங்கை ம.உ.பா.மையம், பாசிச இருள் சூழ்ந்து வரும் இன்றைய நிலையில் மனித உரிமைஜனநாயக உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட இவ்விழாவில் உறுதியேற்றது. திரளான உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் பங்கேற்ற இந்த விழா, சிவகங்கை மாவட்ட மக்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.


பு.ஜ. செய்தியாளர்.