கொள்வதற்குப் பல சமூகக் காரணங்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால், காசுமீரிலோ இவற்றையெல்லாம்விட, இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளால் விசாரணை, தேடுதல் வேட்டை என்ற பெயரில் பொதுமக்கள் அவமானப்படுத்தப்படுவதுதான் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ""எல்லை கடந்த மருத்துவர்கள் சங்கம்'' என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு எடுத்த ஓர் ஆய்வில், ""இந்த அவமானப்படுத்துதல் தங்களின் மன அமைதியைக் குலைத்து விடுவதாக'' காசுமீர் மக்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
தினந்தோறும் இப்படிப்பட்ட அவமானங்களைச் சந்தித்து வந்த, வடக்கு காசுமீர் கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் அகமது, ஒருநாள் இந்த மன அழுத்தத்தைப் பொறுக்க முடியாமல், விஷத்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்; இறுதியில், சாவின் பிடியில் இருந்து அகமது காப்பாற்றப்பட்டுவிட்ட போதிலும், அவர் மன நோய்க்கானச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு காசுமீர் முசுலீமும் அகமது மன்சூரைப் போல, இந்த அவமானப்படுத்துதலை நேரடியாக அனுபவிக்க வேண்டும் என்பதில்லை. வீட்டை விட்டுத் தெருவில் இறங்கி நடந்து செல்லும் பொழுது, துப்பாக்கி முனைகளை வெறித்துப் பார்த்தபடிதான் நடந்து செல்ல வேண்டும் என்றால், உங்கள் மனநிலை அமைதியாக இருக்க முடியுமா? எந்நேரமும் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு இராணுவம் உள்ளே வரலாம்; யாரையாவது இழுத்துக் கொண்டு போகலாம் என்ற நிலையில், பாதுகாப்பான வாழ்க்கை என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
கடந்த ஆண்டு காசுமீர் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்ட மாதிரி ஆய்வொன்றில், ""காசுமீர் நிலைமை'' பற்றி 510 பேரிடம் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களுள் பாதிப்பேர் தாங்கள் பாதுகாப்பற்ற தன்மையில் வாழ்வதாகக் கூறியிருந்தனர். மூன்றில் ஒரு பங்கு பேரிடம் தற்கொலை செய்து கொள்ளும் மன ஓட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.
""காசுமீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவருக்கு மனப்பதற்றம், மன அழுத்தம், எதையோ பறி கொடுத்த உணர்வு போன்ற மனநோய்களில் ஏதாவது ஒன்று இருப்பதைக் காண முடியும்'' என காசுமீர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் பஷீர் கூறுகிறார்.
""விசாரணை, கைது, தேடுதல் வேட்டை, போலி மோதல் கொலை, கொட்டடிச் சாவுகள், மானபங்கப்படுத்துவது, பாலியல் வன்முறையை ஏவிவிடுவது'' என இந்த அவமானப்படுத்தும் குற்றச் செயல்கள் அனைத்தும் தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுவதுதான் மிகவும் அபாயகரமானதாகவும், அவமானமிக்கதாகவும் இருக்கிறது.
சமீபத்தில், வடக்கு காசுமீரில் உள்ள பந்திபுர் நகரைச் சேர்ந்த 17 வயதான ரஃபீக் கோஜ்ரி என்ற இளம் பெண்ணை, இரண்டு இராணுவ அதிகாரிகள், அவரது வீட்டிற்குள் ""தீவிரவாதிகள்'' போல வேடமிட்டுக் கொண்டு நுழைந்து பாலியல் பலாத்காரப்படுத்த முயன்றனர். இந்தக் குற்றவாளிகளைக் கையோடு பிடித்த பொதுமக்கள், அவர்களை போலீசிடம் ஒப்படைப்பதற்காக, அவர்களின் ஆடைகளைக் களைந்துவிட்டு ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசோ, அதற்கு மாறாக, பொதுமக்களின் மீது தடியடி நடத்தியதோடு, அவர்களைச் சிறையிலும் அடைத்து அவமானப்படுத்தியது. இராணுவமோ, ""தங்களின் அதிகாரிகள் உளவறியச் சென்ற தேசபக்தர்கள்'' என இந்தக் கற்பழிப்பு முயற்சியை நியாயப்படுத்தியிருக்கிறது.
காசுமீர் வன்முறைக் களமாக மாறிப் போனதற்கு முசுலீம் தீவிரவாதிகள் தான் பொறுப்பு என ஒட்டு மொத்த பழியையும் பிறர் மீது போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள பார்க்கிறது, இந்திய அரசு. ""தீவிரவாதி''களை எதிர்த்துப் போராடுவதாகக் கூறும் இந்திய இராணுவம், காசுமீரில் புத்தனின் கொல்லாமை தத்துவத்தையா போதித்துக் கொண்டிருக்கிறது? காசுமீர் மக்களின் நியாயமான சுயநிர்ணய உரிமை கோரிக்கைக்குத் தீர்வு காணாமல் இழுத்தடிப்பதன் மூலம், அம்மாநிலத்தை வன்முறைக் களமாக மட்டுமல்ல; திறந்தவெளி பைத்தியக்கார விடுதியாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது, இந்திய அரசு.
· ரஹீம்