உடலெங்கும் காயங்கள்; சீழ்பிடித்து புரையோடிவிட்ட தீப்புண்கள், அழுக்கடைந்து கிழிந்து தொங்கும் ஆடைகள், துயரத்தை நெஞ்சிலே தாங்கி உருக்குலைந்து நிற்கும் தொழிலாளர்கள்... சீனாவின் செங்கற்சூளைகள்நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டுள்ள இக்கொத்தடிமைகளைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
ஒருவரல்ல, இருவரல்ல; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கொத்தடிமைக் கொடூரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் சிறுவர்கள்; மற்றவர்கள் கிராமப்புற விவசாயிகள்.
ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணிநேர ஓய்வில்லாத வேலை; சோர்ந்து உட்கார்ந்தால் கங்காணிகளின் சவுக்கடி; வேலை செய்ய மறுத்தால் சம்மட்டி அடி அல்லது பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு போடப்படும். அங்கிருந்து யாரும் தப்பச் செல்ல முடியாதபடி வேட்டை நாய்களும் துப்பாக்கி ஏந்திய கங்காணிகளும் காவலுக்கு நிற்பர். வெற்றுக் கால்களுடன் பாதுகாப்புச் சாதனங்கள் ஏதுமின்றி வேலை செய்யும் இக்கொத்தடிமைகளுக்கு ஏற்பட்ட விபத்துகள் ஏராளம். ஆனாலும் எந்த மருத்துவ சிகிச்சையும் கிடையாது. படுகாயமடைந்தோ, நோய்வாய்ப்பட்டோ ஒரு தொழிலாளி மரணமடைந்தால், அவர் அங்கேயே புதைக்கப்படுவார். சீனாவின் ஷான்சி, ஹோனான் மாநிலங்களிலுள்ள செங்கற் சூளைகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அளித்த சாட்சியங்களைக் கண்டு அந்நாட்டு மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.
சீனாவின் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள், சோசலிச விவசாயக் கூட்டுப் பண்ணைகளைத் தகர்த்து தனியாருக்கு நிலத்தைச் சொந்தமாக்கி, முதலாளித்துவத்தை நிலைநாட்டியதைத் தொடர்ந்து, இலட்சக்கணக்கான விவசாயிகள் வேலையிழந்து வாழ்விழந்து நிற்கின்றனர். நகரங்களுக்கு நாடோடிகளாக ஓடி, அங்கும் பிழைக்க வழியின்றி செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாகி உழல்கின்றனர்.
இக்கொத்தடிமைத் தொழிலில் கொழுத்த ஆதாயம் கிடைப்பதால், சமூக விரோத கும்பல்களால் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டு செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளனர். தமது அன்புக் குழந்தைகளைக் காணவில்லை என்று துடிக்கும் பலநூறு பெற்றோர்களின் கண்ணீர் கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு பத்திரிகைகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டிய பிறகு, அதிகார வர்க்கமும் போலீசும் வேறுவழியின்றி நடவடிக்கைகளை மேற்கொண்டபோதுதான், இக்கொத்தடிமைக் கூடாரங்கள் பற்றிய உண்மைகள் வெளிவந்துள்ளன.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடெங்கும் இத்தகைய கொத்தடிமைக் கூடாரங்கள் அதிகார வர்க்கம்போலீசின் ஆதரவோடு நடந்து வந்துள்ளன என்றும், உள்ளூர் போலி கம்யூனிஸ்டு தலைவர்களின் பினாமிகளே இவற்றை நடத்தி வந்துள்ளனர் என்றும் பத்திரிகைகள் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி வருகின்றன. பெய்ஜிங்கிலுள்ள சீன மக்கள் பல்கலைக் கழக சமூகவியலாளரான சௌ ஷியோ ஜெங், ""சீனாவில் ஏறத்தாழ 2 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்; அமைப்பு ரீதியில் திரண்டுள்ள புதுப்பணக்கார குற்றக் கும்பல்களே நாட்டை வழிநடத்துகின்றன'' என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார். சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள், நாட்டில் கொத்தடிமைக் கொடூரங்கள் நீடிப்பதை வேறுவழியின்றி ஒப்புக்கொண்டு, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், இது வெறும் காகித அறிவிப்பாகவே முடிந்து போய்விட்டது. கொத்தடிமைக் கூடாரங்கனை நடத்தி வந்த புதுப்பணக்கார குற்றக் கும்பல்களில் ஒரு சிலரைப் போலீசார் கைது செய்த போதிலும், அவர்கள் அனைவரும் விரைவிலேயே விடுதலையாகி விட்டனர். அவர்கள் மீது பெயரளவுக்குக்கூட வழக்குகள் போடப்படவில்லை. காரணம், இக்குற்றக் கும்பல்களின் கூட்டாளிகளான போலி கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருப்பதுதான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, சீன போலி கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் அங்கம் வகித்த முக்கிய புள்ளியான லீ பெங்கும் அவரது குடும்பமும் வீட்டுமனை ஊழல் மற்றும் நிதி மோசடிகளில் கோடி கோடியாய் சுருட்டிய விவகாரம் நாடெங்கும் நாறியது. அந்த விவகாரம் அடங்குவதற்குள் சியாமென் துறைமுக நகரைச் சேர்ந்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஊழல்கடத்தல் மோசடிகளில் சிக்கினார். அதைத் தொடர்ந்து பல போலி கம்யூனிஸ்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட விவகாரம் சந்தி சிரித்தது. சீன போலி கம்யூனிஸ்டு அரசாங்கம் ஊழல் அதிகாரிகள் சிலரைக் கைது செய்து சிறையிலடைத்ததோடு, சிலருக்குத் தூக்குத் தண்டனை விதித்து, இத்தகைய ஊழல்மோசடிகளை ஒடுக்க முயற்சித்தது.
ஆனால், அதற்குப் பின்னரும் ஷாங்காய் நகர போலி கம்யூனிஸ்டுத் தலைவர் சென் லியாங் யூ, காண்டன் நகர செயலாளர், வூஹான் மாநிலச் செயலர் எனப் பலரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட விவகாரம் அம்பலமானது. இப்போது, குற்றக் கும்பல்களோடு கூட்டுச் சேர்ந்து போலி கம்யூனிஸ்டு பிரமுகர்கள் கொத்தடிமைக் கூடாரங்களை நடத்தி வந்த விவகாரம் வெளிவந்துள்ளது.
செங்கற் சூளைகள், சுரங்கங்கள் மட்டுமல்ல; நகரங்களில் கட்டுமானத் தொழில், ஆயத்த ஆடை தயாரிப் புக் கூடங்கள், ஏற்றுமதிக்கான விளையாட்டு பொம்மை தயாரிப்பு, நெசவு மற் றும் காலணி தயாரிப்பு நிலையங்களிலும் அறிவிக்கப்படாத கொத்தடிமைத்தனம் கொடிகட்டிப் பறக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்று கூறி, சீன ஆட்சியாளர்கள் இத்தகைய தொழிற்கூடங்களில் தொழிலாளர்கள் சங்கமாகத் திரளவும் தடை விதித்துள்ளனர். இதைச் சாதகமாக்கிக் கொண்டு சீனா வின் முதலாளிகள், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு சம்ப ளம் கூட கொடுக்காமல் ஏய்க்கின்றனர்.
பெய்ஜிங் நகரில் ஓராண்டு காலமாக சம்பளம் தராமல் ஏய்த்த அன்னிய கட்டுமான நிறுவன முதலாளிகளின் பங்களாக்களை முற்றுகையிட்டு, தடுப்பரண்களை எழுப்பி 2003ஆம் ஆண்டில் சீனத் தொழிலாளிகள் போராடினர். ஷென்சென் நகரில் சம்பளம் தராமல் ஏய்த்த முதலாளிகளின் கார்களை சாலைப் பணியாளர்கள் அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதே போல தெற்கே ஃபூஷன் நகரில் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களும், வட கிழக்கே டா குயிங் எண்ணெய் துரப்பணத் தொழிலாளர்களும், ஜியாங்ஷி மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும் சம்பள பாக்கிக்காகவும் பென்ஷன் தொகை முடக்கப்பட்டதை எதிர்த்தும் போராடினர்.
முறையாக சம்பளப் பாக்கியைக் கொடுக்காவிடில் உரிமத்தை ரத்து செய்து விடுவோம் என்று சீன ஆட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்த போதிலும் எந்த முதலாளியும் அதைப் பொருட்படுத்துவதில்லை. முதலாளிகளின் சட்டைப் பையிலுள்ள சீன அரசாங்கம் அதற்கு மேல் ஒன்றும் செய்யவும் முடியவில்லை. தீவிரமாகிவிட்ட வேலையின்மையைச் சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கி முதலாளிகள் சுரண்டுவதும், சம்பளம் கூடத் தராமல் ஏய்ப்பதும் நாடெங்கும் தீவிரமாகிவிட்டது. சீனாவின் நகர்ப்புற வேலையின்மை 7%க்கும் மேலாக அதிகரித்துக் கொண்டே போகிறது. இது 9%க்கு எட்டிவிட்டால் சமூகக் கொந்தளிப்புகள் தீவிரமாகிவிடும் என்று சீனாவின் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், சீனாவின் யதார்த்த நிலைமைகளை மூடிமறைத்துவிட்டு, சீனா பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டிவிட்டதாகவும், வல்லரசாகப் பரிணமித்து வருவதாகவும் ஏகாதிபத்தியவாதிகள் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றனர். உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பு நாடாகச் சேர்ந்து, அன்னிய மூலதனத்தைத் தாராளமாக அனுமதித்து, பொருளாதார வளர்ச்சியில் புதிய சாதனை படைத்துள்ளதாக ஏற்றிப் போற்றுகின்றனர். வரைமுறையற்ற சுரண்டல்சூறையாடலுக்கு கதவை அகலத் திறந்து விட்டுள்ள ""சீனாவைப் பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று இங்குள்ள போலி கம்யூனிசத் துரோகிகளுக்கு உபதேசிக்கின்றனர். சீன போலி கம்யூனிச ஆட்சியாளர்களின் ஏகாதிபத்திய தனியார் முதலாளித்துவ சேவையை, சோசலிசத்தை நோக்கிய வளர்ச்சியாகச் சித்தரித்து இங்குள்ள இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள் துதிபாடுகின்றனர்.
ஆனால், சோசலிசம் பூத்துக் குலுங்கிய சீனாவோ, இன்று கொத்தடிமைத்தனத்திலும் கொடூர சுரண்டலிலும் சிக்கிக் குமுறிக் கொண்டிருக்கிறது. சீன மக்களோ, புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியின் தலை மையை எதிர்நோக்கி மீண்டும் ஒரு சோசலிசப் புரட்சிக்காகக் காத்திருக்கிறார்கள்.
· குமார்