யாழ்ப்பாணம் - வவுனியா மேதினக்கூட்டங்களில் சி.கா.செந்திவேல் ஆற்றிய உரை.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியானது பேரினவாத ஒடுக்குமுறை என்ற மூலதனத்தை முதலிட்டே ஆட்சி அதிகாரம் செலுத்தி வருகிறது. அது பாசிச சர்வாதிகாரமாகவே முன்னெடுக்கப்படுகிறது இத்தகைய ஆட்சியானது தமிழ் முஸ்லீம் மலையக மக்களை மட்டுமன்றி சிங்களத் தொழிலாளி விவசாயி மற்றும் உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கியே வருகிறது பொருட்களின் விலைகள் அதிகரிப்பிலும் கட்டணங்களின் உயர்விலும் சம்பள உயர்வு மறுப்பிலும் ஜனநாயக மனித உரிமை மீறல்களிலும் இதனைக்காண முடிகிறது இச்சூழலில் இலங்கை முன் என்றுமில்லாத அளவிற்கு மோசமான பொருளாதார அரசியல் சமூக நெருக்கடிக்குள் புதையுண்டுவருகிறது. எனவே இந்நாட்டின் அனைத்து மக்களும் வர்க்க - இன அடிப்பபடைகளில் ஒன்றிணைந்து தமது அடிப்படைஉரிமைகளை வென்றெடுப்பதற்கு ராஜபக்ச சகோதரர்களது ஆட்சிக்கு எதிராக வெகுஜனப் போராட்டங்களில் அணிதிரள வேண்டிய அவசியமும் தேவையும் எழுந்துள்ளது இதனை ஒடுக்கப்படும் நிலையில் உள்ள தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
இவ்வாறு யாழ்ப்பாணம் வவுனியா நகரங்களில் இடம்பெற்ற மேதினக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய புதிய - ஜனநாயக மாச்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்றைய நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருந்து வரும் மகிந்த ராஜபக்ச அன்று சந்திரிகா அம்மையாரின் அமைச்சரவையில் தொழில் அமைச்சராக இருந்தபோது தொழிலாளர் சாசனம் என்பதனை சட்டமாக்க முன்வந்தார் ஆனால் உள்நாட்டு வெளிநாட்டுப் பெரும் முதலாளிகளினதும் பல்தேசியக் கம்பனிகளினதும் கடும் எதிர்ப்பால் அதனை சட்டமாக்க முடியவில்லை என்று கூறி அன்று கைவிடப்பட்டது அதே மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரமும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரன்டு பெரும்பான்மையும் பெற்ற பின்பு தொழிலாளர் சாசனத்தை எளிதாகவே சட்டமாக்கி நாட்டின் தொழிலாளி வர்க்கத்திற்கு ஓரளவு தானும் உரிமைகளும் தொழிற்பாதுகாப்பும் ஏனைய சலுகைகளும் வழங்கியிருக்க முடியும் ஆனால் இன்று வரை அவரால் அதனை செய்யமுடியவில்லை. அவரது அரசாங்கத்தில் அங்கம் பெறும் போலி இடதுசாரிகளாலும் அதனை வற்புறுத்த முடியவில்லை ஏனென்று தான் நாம் கேட்கிறோம்
இந்நிலையில் இன்றைய ஆட்சியை எவ்வாறு தொழிலாளர் சார்போடு அரசாங்கம் எனக்கூற முடியும் நாளாந்தம் தொழிலாளர்களினதும் உழைக்கும் மக்கள் அனைவரினதும் வயிற்றில் அடித்து சொத்து அனுபவிப்புகளும் சுகபோகவாழ்வும் நடாத்தும் நூறு வரையான அமைச்சர்களைக் கொண்ட மகிந்த சிந்தனை அரசாங்கமானது அப்பட்டமான தொழிலாளர் விரோத மக்கள் விரோத அரசாங்கமாகவே தன்னை நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. அதனாலேயே இந்நாட்டின் உழைக்கும் மக்களை இன மத பிரதேச வெறிகள் மூலம் பிரித்து ஆள்வதில் அக்கறையுடன் இருந்தும் வருகிறது வர்க்க அடிப்படையில் அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்றுபடுவதைத் தடுக்கவே பேரினவாத ஒடுக்குமுறை தொடர்ந்தும் பல்வேறுவழிகளில் நீடிக்கப்பட்டு வருகிறது இதற்காக தம்மை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் போலவும் நாட்டுப்பற்றாளர்கள் என்பதாகவும் வேடமிட்டு கொள்கிறார்கள் அதேவேளை ஏகாதிபத்திய நிறுவனங்களான சர்வதேச நாணயநிதியம், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிபந்தனைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் கட்டளைகளுக்கும் ஏற்ப கடன்கள் பெற்றுக்கொண்டு நாட்டு மக்களை வாட்டி வதைப்பது தான் இவர்களது சிரிப்பிற்குரிய ஏகாதிபத்திய எதிர்ப்பாகும்.
இத்தகைய ராஜபக்ச சகோதரர்களது ஆட்சியானது ஜக்கிய தேசிய கட்சியினர் முதல் புலிகள் இயக்கத்தவர்வரை, இனவெறி ஜாதிக ஹெல உறுமய முதல் பழைய இடதுசாரிகள் எனப்படுவோர்வரை சகலரையும் இணைத்து வைத்துக்கொண்டே மூன்றில் இரண்டு பெரம்பாண்மை என தம்பட்டமடித்து கொண்டு ஆட்சி நடாத்துகின்றனர். இவர்கள் எல்லோரும் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழகைகும் மக்கள் அனைவருக்கும் எதிராக கைகள் உயர்த்துவதில் ஒன்றுபட்டு நிற்கின்றார்கள். ஆனால் நாட்டின் பிரதான பிரச்சனையாக நீடித்துவரும் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்கு ஆதரவு தெரிவிக்கவோ அதனை வற்புறுத்தவோ தயாராகவில்லை
அதேவேளை பொதுபலசேனா என்ற அடிப்படைவாத பௌத்த அமைப்பு தலைவிரித்தாடுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. காரணம் அந்த அமைப்புக்குப் பின்னால் இந்த அரசாங்கத்தில் செல்வாக்குடையவர்கள் இருந்துவருவதேயாகும். எனவே ராஜபக்ச சகோதரர்களின் பேரினவாத ஒடுக்குமுறையினை பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சகல சக்திகளையும் இணைத்து முன்செல்லத் தயாரில்லாத தமிழ் தரப்புத் தலைமைகள் தங்களுக்குள் முரன்பட்டு தத்தமது பதவிகளுக்கும் ஆதிக்க அரசியலுக்கும் அளவான வழிகளில் தொடர்ந்தும் பிற்போக்குதனமாகவே செயற்பட்டு வருகின்றனர்.
அன்று இந்தியாவை வரவழைத்து மக்களின் அழிவுகளுக்கு வழிவகுத்த தமிழ்த் தலைமைகள் இப்போது அமெரிக்கா வரவேண்டும் எனவும் அதற்கு ஜ.நா.வும் ஜெனிவாவும் உதவவேண்டுமென வழிமேல் விழிவைத்து காத்து நிற்கின்றனர். ஜ.நா.வின் செயற்பாடுகளும் ஜெனிவாவின் தீர்மானங்களும் ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கும் ஏனைய தேசிய இனங்களிற்கும் சாதகமானவை போன்றும் ஆதரவுக்கரங்கள் தருவதாகவும் காட்சிகள் காட்டப்படுகின்றன. ஆனால் இவற்றுக்குப்பின்னால் உலக மக்களின் பொது எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கரங்களும் சதி நோக்கங்களுமே இருந்து வருகின்றன. அதற்காகவே ஆடு நனைகிறது என ஓநாய் அழுவது போன்று இலங்கைத் தழிழர்களுக்காக அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் போலிக் கண்ணீர் வடித்து நிற்கின்றனர்.
இன்று பெருவல்லரசு ஆகிவரும் சீனாவிற்கும் ஜக்கிய அமெரிக்காவிற்குமிடையிலான போட்டியில் மகிந்த ராஜபக்ச சீனாவின் பக்கம் நின்று வருகிறார். அதனால் தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் எனவும் காட்டிக்கொள்ள முன்நிற்கின்றார். உண்மை யென்னவெனில் சீனா இன்று ஒரு சோசலிச நாடாக இல்லையென்பதுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் அது கொண்டிருக்கவில்லை என்பதாகும். இந்நிலையில் ராஜபக்ச அரசாங்கத்தை ஒரு உறுதியான சரியான அரசியல் வேலைத்திட்ட வழிமுறைகளால் எதிர்த்து நிற்பதற்கு வழியின்றி அமெரிக்காவிடமும் ஜ.நாவிடமும் ஜெனிவாவிடமும் தமிழ்த்தரப்புத் தலைமைகள் தஞ்சமடைந்து வருகின்றனர். இது மீண்டும் தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டு செல்வதற்கே வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை ஏனெனில் கடந்த காலங்களின் அரசியல் வரலாற்று அனுபவங்களும் பட்டறிவுகளும் தகுந்த சாட்சியங்களாகும் எனவே சர்வதேசப் போராட்டத் தினமான மேதினத்தில் இன ரீதியிலும் வர்க்க ரீதியிலும் நாட்டின் ஒடுக்கப்படும் அனைத்து உழைக்கும் மக்களும் புதிய அரசியல் மார்க்கப் பாதையில் பயணிப்பது பற்றிச் சிந்திப்பதும் செயல்படுவதும் அவசியமாகும் எனவும் செந்திவேல் கூறினார்.
{jcomments on}