aug_2007.jpg

மரங்களை எளிதில் வெட்டி வீழ்த்த உதவும் கருவியான கோடரியின் காம்பும் மரத்தால்தான் ஆனது என்பது எத்தனை பெரிய சோகம்! தனது சொந்த இனத்தையே எதிரியிடம் காட்டிக் கொடுக்கும் நபர்களையும் கோடரிக்காம்பு என்றுதான் அழைக்கிறார்கள். அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், நமக்குக் கோடரிக் காம்பைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகிறது.

 

""மதுரை மீனாட்சி கோவில் நுழைவுக்கு உறுதுணையாய் நின்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, தேவர் ஜெயந்தி விழாவை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்'' என்பதுதான் சிறுத்தைகளின் தீர்மானம்.

 

ஆதிக்க சாதிக்கு அடங்க மறுக்கச் சொன்ன இயக்கம், திடீரென ஆதிக்க சாதியின் குல தெய்வத்துக்கு மணியாட்டத் தொடங்கியிருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.

 

முதலில், தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்த வரலாறையும் அதில் தேவர் ஆற்றிய பங்கையும் பார்ப்போம்.

 

காங்கிரசுக் கட்சியின் ராஜாஜி ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்த மதுரை வைத்தியநாதய்யர், 1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் நாள், தும்பைப்பட்டி கக்கன் (பின்னாளில் காமராஜின் அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர்) உள்ளிட்ட தாழ்த்தப்பட்டோர்கள் 5 பேரையும், விருதுநகர் சண்முக நாடாரையும் அழைத்துக்கொண்டு, அதுவரை தாழ்த்தப்பட்டோர்களுக்கும், நாடார் உள்ளிட்ட சாதியினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்தார். இக்கோவில் நுழைவுக்கு அன்றைய கோவில் அறங்காவல் அதிகாரியான ஆர்.எஸ்.நாயுடு உறுதுணையாக இருந்தார்.

 

1939இலோ, அதற்கு முன்னரோ மீனாட்சி கோவிலுக்குள் நுழையும் உரிமை கோரி தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஏதேனும் போராட்டம் நடத்தப்பட்டதா, அக்கோவில் நுழைவில் பெருந்திரளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கெடுத்தனரா என்றால் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 1920களிலும் கோவில் நுழைவு உரிமை கோரி நாடார்களாலும், சுயமரியாதை இயக்கத்தாலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அந்தக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பாகத் திரண்டு அப்போது போராடியதில்லை.

 

1932ஆம் ஆண்டில் சென்னையில் ஜெ.சிவசண்முகம் (பிள்ளை) தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டோர் மாநாடு கூட ""கோவில் நுழைவு அவ்வளவு அவசியம் இல்லை என்று கருதி'' தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. (""பண்பாட்டு அசைவுகள்'', தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், பக்.188).

 

1934ஆம் ஆண்டில் டாக்டர் சுப்பராயனின் தலைமையிலான சென்னை மாகாண அரசு கொண்டுவர இருந்த கோவில்நுழைவு மசோதாவை ஆதரிக்கச் சொல்லி காந்தி கேட்டுக்கொண்டபோது , டாக்டர் அம்பேத்கர் அதனை ஆதரிக்க மறுத்துள்ளார். ""கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும்போது ஆலய நுழைவு தானாகவே நிகழும்'' என்று காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பட்டிருந்தார். (""சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர்'', தமிழவேள், பண்பாட்டு ஆய்வகம், பக். 89)

 

ஆக, தாழ்த்தப்பட்ட மக்களே இக்கோரிக்கையை முன்வைத்துப் போராடாத நிலையில், இதற்காகப் பேரளவில் திரளாத நிலையில், மதுரை மீனாட்சி கோவில் நுழைவை காங்கிரசு கட்சியினர் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

 

அன்றைக்கு காங்கிரசுக்குள் இருந்த சத்தியமூர்த்திராஜாஜி கோஷ்டிப்பூசலில், சத்தியமூர்த்தி கோஷ்டிக்கு இணையாகத் தமக்கு ஆதரவாளர்களை திரட்டவும், கட்டாய இந்தியைத் திணித்து பொதுமக்களிடம் சம்பாதித்திருந்த வெறுப்பைத் தணிக்கவும் ராஜாஜி கோஷ்டி கண்டுபிடித்த தந்திரமே கோவில் நுழைவு.

 

கோவில் நுழைவில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?

 

ராஜாஜி கோஷ்டியால் கோவில் நுழைவு நடக்க இருப்பதை அறிந்திருந்த மீனாட்சி கோவில் பட்டர்கள், ராஜாஜியின் எதிரணியைச் சேர்ந்த முத்துராமலிங்கத் தேவரை அணுகி, கோவில் நுழைவை அடியாட்கள் வைத்து அடித்து, தடுத்து நிறுத்த வேண்டினார்கள். தேவரால் அதற்கு உதவ முடியவில்லை. காரணம், கோவில் நுழைவு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், அவரின் தூண்டுதலால் மதுரை பின்னலாடைத் தொழிற்சாலை, சிந்தாமணி திரையரங்கம் ஆகியவற்றில் சாதி ரீதியான வன்முறை நடைபெற்றிருந்ததால், அவர் எந்நேரமும் கைதாகக் கூடிய சூழ்நிலையில் இருந்தார். எனவே, தேவரால் பட்டர்கள் வேண்டுகோளின்படி அடியாட்களை அனுப்பி வைக்க முடியவில்லை. (மேற்கூறிய நூல், பக். 4748 மற்றும் ""முதுகுளத்தூர் கலவரம்'', தினகரன், யாழ்மை வெளியீடு, பக். 106).

 

தேவரின் எதிர்ப்பில்லாமல் கோவில் நுழைவு நடந்தது. இதுதான் முத்துராமலிங்கத் தேவரின் கோவில் நுழைவு பங்களிப்பு!

 

தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவைப் பெறாத, தேவரின் "பங்களிப்பு' ஏதும் இல்லாத கோவில் நுழைவு நாடகத்தைத் திரித்து சிறுத்தைகள் தீர்மானமாய்ப் போடுவது ஏன்?

 

முத்துராமலிங்கத் தேவர் எங்காவது தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காகப் போராடியிருக்கிறாரா?

 

தனது மாற்றாந்தாயின் விளைநிலங்களில் விளைச்சலைக் கொள்ளையடிக்கவும், அதைத் தடுக்க முயன்ற தாசில்தாரின் காலை வெட்டவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சோலைக்குடும்பன் போன்ற அடியாட்களை தயார் செய்து அடிமைகளாக வைத்திருந்தவர்தான், தேவர். (""சமூக உரிமைப் போராளி....'', பக். 9598 மற்றும் ""முதுகுளத்தூர் கலவரம்'', பக். 102)

 

தேர்தல் பிரச்சாரத்தில் ""ஓட்டு இல்லையானால் வேட்டு'' என மிரட்டியே தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கைப்பற்றிய தேவர், தான் பதவியில் இருந்தவரைக்கும் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சிக்குப் பெரும் தடையாகவே இருந்திருக்கிறார். (""முதுகுளத்தூர் கலவரம்'', பக். 54; ""சமூக உரிமைப் போராளி...'', பக். 205). சாலை வசதிகள் வந்து விட்டால், தேவர்களைக் கைது செய்ய காவல் துறை எளிதில் ஊருக்குள் வந்து விடும் என்றும் பயமுறுத்தி, அடிப்படை வசதிகளை வரவிடாமல் தடுத்து வந்தவர்தான் அவர். (""சமூக உரிமைப் போராளி....'', பக். 205 மற்றும் ஆர்.சிதம்பரபாரதியின் சட்டமன்ற உரை, 30.10.1957; ""சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு'', ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், பக். 163).

 

முதுகுளத்தூரில் தனக்கு வாக்களிக்காத ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொலை வெறியைத் தூண்டி விட்டு தேவேந்திரர்கள் 17 பேரின் உயிரைக் குடித்த சாதிவெறித் தலைவரின் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை கேட்பதுதான் ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் கடமையா?

 

தேவேந்திரர்கள் உழைத்து சேகரித்து வைத்திருந்த உணவு தானியங்களை எரியும் வைக்கோல் படப்புகளுடன் சேர்த்து எரித்தும், பெண்களைப் பலாத்காரம் செய்தும், தாழ்த்தப்பட்டோரின் குடிநீர் கிணறுகளில் மலத்தையும், மண்ணெண்ணெய்யையும் ஊற்றி கோரத்தாண்டவம் ஆடிய சாதிவெறிக் கும்பலை உசுப்பேற்றிவிட்ட மனிதரை ஆதரிப்பதென்பது, தாழ்த்தப்பட்டோர் விடுதலையின் செயல் திட்டமா?

 

முதுகுளத்தூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடந்த சமாதானக் கூட்டத்தில், தாழ்த்தப்பட்டோரின் தலைவரான இம்மானுவேல் சேகரன் கையெழுத்திட்ட சமாதான ஒப்பந்தத்தில் சமமாகக் கையெழுத்திட மறுத்தும், ""என்னை எதிர்த்துப் பேசுமளவுக்கு ஒரு பள்ளப்பயலை வளர்த்து விட்டிருக்கிறீர்கள். நீங்களும் மறவர்களா?'' எனக் கேட்டு தன் அடியாட்களைக் கொம்பு சீவி விட்டும், இம்மானுவேலின் படுகொலைக்குக் காரணமாய் இருந்தவர்தானே தேவர்? (""சட்டப் பேரவையில்...'' பக். 1718 மற்றும் உள்துறை அமைச்சர் எம்.பக்தவச்சலம் சட்டசபையில் தாக்கல் செய்த அறிக்கை 26.10.1957; ""சமூக உரிமைப் போராளி...'', பக். 139)

 

தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த சுவாமி சகஜானந்தா எனும் தலைவர் பலமுறை காங்கிரசு சார்பில் சட்டசபையில் உறுப்பனராக இருந்துள்ளார். சிதம்பரம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காகக் கல்வி நிலையம் நிறுவியவர் இவர். இவரின் தொண்டைப் பாராட்டிப் பல கட்டுரைகள் எழுதினார், விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ.வான ரவிக்குமார். திருமாவளவனும் சகஜானந்தரின் பள்ளி விழாக்களில் கலந்து கொள்பவர்.

 

முதுகுளத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது, சட்டசபையில் சுவாமி சகஜானந்தா ""ஒருவன் கொலை செய்தால் அவனைத் தூக்கிலிடுவது வழக்கம்.

 

ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் செய்துள்ள பெரும் பிழைக்கு அவரை எந்தத் தூக்கில் போடுவது?... சர்க்கார் கொஞ்சம்கூடப் பார்க்காமல் அவரைத் தூக்கிலிட வேண்டும்'' எனப் பேசியுள்ளார். (""சட்டப் பேரவையில்...'', பக். 225)

 

விடுதலைச் சிறுத்தைகள் கொண்டாடும் சகஜானந்தாவோ, தேவருக்குத் தூக்குத் தண்டனை தரச்சொல்லியிருக்கிறார். ஆனால் சிறுத்தைகளோ, தேவர் ஜெயந்திக்கு விடுமுறை கேட்கின்றனர். இதற்கு பெயர் விடுதலை அரசியலா? சந்தர்ப்பவாதமா?

 

தாழ்த்தப்பட்டோர் மீது தீண்டாமையைக் கடைபிடித்து வரும் ஜெயேந்திரனுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் ""தடா'' பெரியசாமி போன்ற கோடரிக்காம்புகளுக்கும், தாழ்த்தப்பட்டோர்கள் மீது தன் வாழ்நாள் முழுக்க வன்கொடுமையை ஏவிய தேவர் மீது பாசம் பொழியும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?

 

யார் யாரை எல்லாம் செருப்பால் அடிப்போம் என்று சொன்னார்களோ, அவர்களுடன் எல்லாம் கூட்டு சேர்ந்து அம்பேத்கரை பலி கொடுத்து உ.பி.யில் ஆட்சியைப் பிடித்திருப்பது பகுஜன் சமாஜ் கட்சி என்றால், சாதி வெறியை வளர்த்து வந்த தேவருக்கு வெண்சாமரம் வீசக் கிளம்பியிருக்கிறது, "அடங்க மறுப்போம்' என்று சொல்லி இயக்கம் வளர்த்த சிறுத்தைகள் கட்சி.

 

இனி, மேலவளவு முருகேசனைக் கொன்றவர்களுக்குப் பொது மன்னிப்பு கோரி கையெழுத்து இயக்கம் நடத்தவும், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டோரை மலம் திண்ண வைத்த சாதி வெறியினரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தவும் கூடத் தயாராவார்கள்.

 

ஏற்கெனவே இராமதாசுடன் "தமிழ்ப் பாதுகாப்பு' கூட்டணி அமைத்து வன்னியர்களின் சாதிப்பகையில் இருந்து தாழ்த்தப்பட்டோரைக் "காப்பாற்றி' விட்டார்கள். இப்போது தேவர்களின் சாதிப்பகையில் இருந்து தாழ்த்தப்பட்டோரைக் "காப்பாற்ற' போர்த்தந்திரம் வகுக்கிறார்கள் போலும். நல்ல முன்னேற்றம்தான்!


· இரணியன்