அப்பப்பா என்னமா புழு(ங்)குது
யுத்தம் முடிந்தது சத்யம் ஜெயித்தது
புத்த பகவானின் கருணையோ கருணை
பிதற்றித்திரியும் பக்ச நாடு நா(யா )டாய் !
வாய் திறந்தால் அபிவிருத்தி
வயிற்றுப் பசியாலோ மக்கள் அவதி
மந்திரிக்கும் தொண்டர்களுக்கும் சலுகை
வகை தொகை இன்றி மக்கள் பஞ்சத்தால் அழுகை!
வடக்கென்ன தெற்கென்ன
கிழக்கென்ன மேற்கென்ன
கூடிக் கூத்தாடும் அரச அராஜகம்
உயிரைப் பறித்தெடுக்கும் பயங்கரவாதம்
கஞ்சாவும் கெரொயினும்
வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி
களவும் கொள்ளையும் கற்பழிப்பும்
காலையும் மாலையும் இரவும் பகலும்-என்று
மாறி நிற்குது சிறிலங்கா
மானம் கெட்ட பிழைப்பா? ஆசியாவின் ஆச்சர்யம்
ஏக்கத்திற்கும் கண்ணீருக்கும் நடுவில் மக்கள் - இதை
மீறிக்கேட்டா கேட்பவர் கதை கேள்வி ?யாக
அத்து மீறி ஆளுக்காள் அரசியல் நாட்டாமை
ஆடி அடங்கிப்போகும் அன்றாட மக்களின் இயலாமை
இத்தனைக்கும் காரணம் மூடர்களின் அரசு ஆளுமை
ஈடு கொடுக்க இயலாது வளரும் கடன் பளுச்சுமை!
உலகுக்கு காட்டிநிற்கும் உல்லாச உவமை
ஊதிப்பெருத்திருக்கும் சிறிலங்கா ஊழல்
எல்லார் மனதிலும் எழுகின்ற கேள்விக்கணை
ஏலாததை பெற்றுக்கொள்ள இப்போதே வேள்வி சமை!
ஐயம் தவிர் ஆதிக்கத்தை அகற்ற வினவு
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வெற்றி காணும் கனவு
ஓலமிட எண்ணாதே! மாறாய் ஒன்றாகி போராடக் கூவு!
கஞ்சிக்கும் கூழுக்கும் கையேந்த வைத்து நிற்கும்
கனவான் ஜனாதிபதி
கூறி நிற்பதெல்லாம்
இதுவரையும் தான் கண்ட
இந்த ஆசியாவின் ஆச்சர்யம்!
*சந்துரு*