ஈராண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து, தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை எதிர்த்து நெல்லையில் நடத்திய மறியல் போராட்டத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சந்தைப் பகுதியில் சுவரெழுத்து விளம்பரம் செய்த வி.வி.மு.வைச் சேர்ந்த 4 தோழர்கள் தருமபுரிஅதியமான் கோட்டை போலீசாரால் 24.6.05 அன்று கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
""சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு டவாலி; அப்துல் கலாம் அரசவைக் கோமாளி; சட்டமன்றம், நாடாளுமன்றம் ஏமாற்று; நக்சல்பாரியே ஒரே மாற்று'' என்று சுவரில் எழுதியதுதான் அவர்கள் செய்த "குற்றம்'. இதற்காக, அரசைக் கவிழ்க்கச் சதி, நாசவேலையில் ஈடுபட சதித் திட்டம் என்றெல்லாம் இட்டுக் கட்டி, கொடிய கிரிமினல் சட்டப் பிரிவுகளின்படி தருமபுரி போலீசு இத்தோழர்கள் மீது பொய்வழக்கு சோடித்தது. கீழமை நீதிமன்றங்களில் பிணை மறுக்கப்பட்டு, 56 நாட்களுக்குப் பிறகு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனையுடன் பிணை வழங்கியது. வி.வி.மு.வின் செயல்பாடுகளை முடக்கி ஒடுக்கத் துடித்த தருமுபுரி நகர போலீசு, இவ்வழக்கினை விரைவு நீதிமன்றத்தில் தொடுத்து வெகு விரைவில் தண்டனை கொடுக்க எத்தணித்தது.
ஈராண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையில் வி.வி.மு. தோழர்கள் நால்வர் மீதும் குற்றம் புரிந்ததற்கான எந்த ஆதாரத்தையும் போலீசாரால் காட்ட முடியவில்லை. தோழர்கள் சார்பில் வாதாடிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலசுப்ரமணியத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் போலீசு கும்பல் திக்குமுக்காடியது. இறுதியில், இது வி.வி.மு.வினர் மீது வேண்டுமென்றே புனையப்பட்ட பொய்வழக்கு என்று தீர்ப்பளித்து விரைவு நீதிமன்றம் 18.6.07 அன்று தோழர்களை விடுதலை செய்துள்ளது. பயங்கரவாதப் பீதியூட்டி, தருமபுரி மாவட்டத்தில் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரத்தைக் கூட ஒடுக்கத் துடிக்கும் போலீசின் முகத்தில் இத்தீர்ப்பு கரியைப் பூசியுள்ளது.
விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம் வட்டம்.