கல்லூரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் இரத்து, தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வு இரத்து, ""ஷிப்டு'' முறை கல்லூரி, இலவச பஸ் பாஸ் என அடுக்கடுக்கான அறிவிப்புகளை தி.மு.க. அரசு வெளியிட்டுள்ளதோடு, உயர்கல்வி அமைச்சர் சுயநிதிக் கல்லூரிகளுக்கு எதிராக வீர வசனமும் பேசி வருகிறார்.
ஆனால், கல்விக் கட்டணம் இரத்து என்பதே வடிகட்டிய பொய். ரூ. 100 முதல் ரூ. 200 வரையிலான தொகைதான் குறைக்கப்பட்டுள்ளதே தவிர, மொத்தக் கல்விக் கட்டணமும் இரத்து செய்யப்படவில்லை. தமிழகத்திலுள்ள 67 அரசுக் கல்லூரிகளில் 2500 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை; 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர்களே கிடையாது. ""ஷிப்டு'' முறையைச் செயல்படுத்த மேலும் 4000 பேராசிரியர்களை நியமித்தாக வேண்டும். அது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. பஸ் பாஸ் அறிவிப்பானது, சட்டமன்றம் எழுப்பிய கரவொலியோடு கரைந்து விட்டது. மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் ரூ. 3 இலட்சம் வரை வசூலித்துக் கொள்ள தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. காசு உள்ளவனுக்கே கல்வி எனும் புது மனுநீதியைச் செயல்படுத்திவரும் சிறுபான்மையினர் கல்லூரிகளும் தனியார் கல்லூரிகளும் நீதிமன்றத்தில் அரசின் உத்தரவுகளுக்கு எதிராகத் தடையாணை பெற்று கொக்கரிக்கின்றன.
கல்வியைக் கடைச்சரக்காக்கி, தனியார் கல்விக் கொள்ளையருக்குக் கதவை அகலத் திறந்து விட்டுள்ள தி.மு.க. அரசை எதிர்த்தும், தனது கையாலாகாத்தனத்தை மறைத்துக் கொண்டு கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு ஏய்க்கும் அரசின் பித்தலாட்டத்தைத் திரைகிழித்தும், தனியார்மயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைக்கு எதிராகப் போராட மாணவர்கள் பெற்றோர்களை அறைகூவியும் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி தமிழகமெங்கும் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, 29.6.07 அன்று தஞ்சையில் ரயிலடி அருகிலும் 18.7.07 அன்று சென்னையில் மெமோரியல் ஹால் அருகிலும், 24.7.07 அன்று திருச்சியில் பாலக்கரைபிரபாத் திரையரங்கம் அருகிலும் திரளான மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களின் பங்கேற்போடு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டங்களின் தாக்கத்தால் உந்தப்பட்ட சென்னைநந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள், பஸ் பாஸ், ஷிப்டு முறை நேர மாற்றம் உள்ளிட்டு பல கோரிக்கைகளை முன்வைத்து, பு.மா.இ.மு.வின் வழிகாட்டுதலில் 19.7.07 அன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தி முதற்கட்ட வெற்றியைச் சாதித்துள்னர்.
பு.மா.இ.மு.வின் ஆர்ப்பாட்டங்களும் அதைத் தொடர்ந்து நடந்த போராட்டமும் மாணவர்கள் மத்தியில் இவ்வமைப்பின் மீது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
பு.ஜ. செய்தியாளர்கள்