யாரது என்னைத்
தொந்தரவு செய்வது
மண்ணுக்குள் ஆவது
நிம்மதியாய் இருப்போமேன்றால்
விடமாட்டீர் போலத் தெரிகிறது!
ஐயோ ஐயோ ஐயோ
யாரது என்னைக் கொத்துவது
யாரது என்னைத் தோண்டுவது
அங்கே யார் தெரிவது ஐயோ
மீண்டும் காக்கிச்சட்டைக் காரரா ?
அடப்பாவிகளா எங்களை
நிம்மதியாகவே இருக்க விட மாட்டீங்களா?
நாம செய்த தப்பென்ன சொல்லு
தமிழனாய் பிறந்ததை விட வேறென்ன
பாவம் தான் செய்து தொலைச்சோம் ?
ஐயோ என்னில் பலமாக குத்தாதே
உயிரோடு வைத்தே நீங்கள் செய்த
கொடுமையும் சித்திர வதையும் இன்னும்
வலிக்கிறது போதாதென்றா தேடிப்பிடித்து
மறுபடியும் மறுபடியும் தொந்தரவு செய்கிறீர்?
யாரங்கே என்கூட இருந்தவரை
வெளியே இழுப்பது அவனை விடு
அடுத்தது யார் என் குழந்தையை தூக்குவது
விட்டு விடுங்கள் அவனை விடுங்கள் அட
வெறி பிடித்த மனித மிருகங்களே விலகுங்கள்!
யாரிப்ப ஜனாதிபதி,பாதுகாப்பு மந்திரி
எல்லாமே எமக்குதெரியும் முள்ளி வாய்க்காலிலும்
புது மாத்தளனிலும் என்னென்ன நடந்ததென்றும்
எம்மைபோல எங்கெல்லாம் எம்போன்றோர்
இருக்கிறோம் என்றும் எமக்குதெரியும் -இருந்தாலும்
நாம் பேசவிரும்பவில்லை ஐ நாவில்
பேசியே முடியாத போது நாம் பேசி எப்படி?
எங்களை தோண்டி எடுத்து எங்கு கொண்டு போனாலும்
எமக்குத்தெரிந்த உண்மைகளை நாம் சொல்ல மாட்டோம்
உயிரோடிருந்த போதும் இப்போதும் அதையே சொல்வோம்!
பேய்கள் ஆட்சி செய்தால்
பிணம் தானே மீதமாகும் சொல்கிறோம்
இன்றில்லா விடினும் என்றோ ஒருநாள்
நீங்களும் வருவீர்கள் மண்ணுக்குள் -அதுவரைக்கும்
நாங்கள் பேசமாட்டோம் மௌனமாகவே இருப்போம்!
காலம் எமக்காகவும் காத்திருக்கும்
சிவனுக்கும் மாதாவுக்கும் தெரிந்த நிஜங்கள்
அப்போது தான் உங்களுக்கும் தெரியவரும்
அது வரையும் பேசுங்கள் உத்தேசியுங்கள்
நாம் யாராக இருப்போமென்று
முடிவாக ஒரு உண்மையை
சொல்லி நிறைவு பெறுகிறேன்
ஆம் நானும் ஒரு இலங்கையன்
*சந்துரு*