aug_2007.jpg

ஓட்டுக்கட்சி அரசியல் தலைவர்களும் மாயத் தோற்றங்களைக் காட்டி மக்களை ஏய்க்கிறார்கள். சினிமாக்காரர்களும் இதே வேலையைத்தான் செய்கிறார்கள். இரண்டு வகையினரும் கள்ளப் பணத்தை கருப்புப் பணத்தைக் குவிப்பதற்குத்தான் இதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.

 

இதில் ஒரு நல்ல வேடிக்கை என்னவென்றால், மற்றவர்களை ஏய்ப்பதற்காக இவர்கள் தங்களைப் பற்றி ஏற்படுத்தி வைத்திருக்கும் மாயத்தோற்றத்தைப் பல சமயம் உண்மையானதென்று இவர்களே நம்பி ஏமாந்து விடுவதுண்டு. இதனால் சினிமாவில் கதாநாயகர்களாகத் தோன்றுபவர்கள் நிஜத்தில் ""காமெடியன்''களாகி விடுகிறார்கள். அரசியலில் தலைவர்களாக பாவணை செய்பவர்கள் நிஜத்தில் பிழைப்புவாத கழிசடைகளாக, மக்களிடம் நகைப்புக்குரிய கோமாளிகளாகி விடுகிறார்கள்.

 

அதேசமயம், சினிமாக்காரர்களுக்குக் கொஞ்சமாவது சொந்த முதலீடு தேவை; வட்டிக்காவது பணம் வாங்கி கோடிக்கணக்கில் மூலதனம் போட்டுத் தொழில் செய்கிறார்கள். ஆனால், ஓட்டுக் கட்சி அரசியல் தலைவர்களோ வெறும் சவடாலையே மூலதனமாகப் போட்டு தொழில் செய்கிறார்கள், இல்லை, இல்லை ""அரசியல் பண்ணுகிறார்கள்.''

 

இப்படி வெறும் சவடாலை மட்டுமே மூலதனமாகப் போட்டு குறுகிய காலத்தில் பல கோடி ரூபாய் அள்ளிவிட்ட சமீபகாலத் திடீர் அரசியல்வாதிகளுள் முன்னிலையில் நிற்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாசு. மருத்துவத் தொழிலை விட அரசியல் தொழிலில் குறுகிய காலத்தில் பல மடங்கு சம்பாதித்து விட்ட இராமதாசு, இந்த வளர்ச்சி கண்டு தானே பிரமித்துப் போய்விட்டார் போலும். அரசியலிலும் இதேபோன்ற கிடுகிடு வளர்ச்சி அடைந்துவிடலாம் என்று கனவுக்கோட்டை கட்டுகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பே புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்துவிடப் போவதாக இலக்கு வைத்துக் கூட்டணி பேரங்கள் நடத்திக் குப்புற விழுந்தார். இருந்தாலும், இராமதாசு தனது எதிர்பார்ப்பையும் சவடாலையும் விடுவதாக இல்லை.

 

தனித்துப் போட்டியிட்டால், ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளுக்கு மேல் இதுவரை பா.ம.க. வெற்றி பெற்றதில்லை. வன்னியர் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில்கூட அக்கட்சி தோல்வி அடைவதுதான் வழக்கமாக உள்ளது. தேர்தலுக்குத் தேர்தல் பா.ம.க. பெறும் வாக்குகளின் சதவீதம் குறைந்து கொண்டே போகிறது. ஐந்து சதவீதம் என்ற அளவில்தான் அக்கட்சி இதுவரை வாக்குகளைப் பெற முடிந்திருக்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ம.கவுக்கு என்று சில நகராட்சி மற்றும் உள்ளூராட்சிகளில் தலைவர் பதவிகளைப் பெறுமளவுக்கு பெரும்பான்மை வட்டங்கள் (வார்டுகள்) கூட்டணிக் கட்சிகளால் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒதுக்கிய இடங்களில் பெரும்பான்மை பெற முடியாமல், தலைவர் பதவியைப் பிடிக்க முடியாமற் போனது. பா.ம.க.வைவிடக் கூடுதலான இடங்களில் வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சிகள் தலைவர் பதவியைப் பிடித்தபோது, துரோகமிழைத்து விட்டதாக ஆத்திரத்தில் வெடித்தார் இராமதாசு.

 

தற்போது பா.ம.க.வுக்கு மத்தியில் 4 எம்.பி.கள், 2 மந்திரிகள், மாநிலத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ""லாட்டரி'' குலுக்கலில் பரிசு விழுந்ததும், அது ஏதோ தனது நல்வினைப் பயனால் விளைந்தது என்று ஒருவன் மிதப்பில் திளைப்பதைப் போல, பா.ம.க. தலைமைக்கு பிரமை தட்டிப் போயிருக்கிறது. தற்போது பா.ம.க.விற்கு வாய்த்திருக்கும் பதவிகள் எல்லாம் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் நிலவும் உண்மையான ஆதரவைக் காட்டுவதாக இராமதாசு நம்பச் சொல்கிறார்.

 

ஓட்டுக்கட்சி அரசியல் ஒட்டுமொத்தமாகத் திவாலாகிப் போன சூழலில் பல அரசியல் அனாம÷தயங்கள் கூட உயர் பதவிக்கு வந்துவிட முடிகிறது. வாழப்பாடி ராமமூர்த்தியும் சுப்பிரமணிய சுவாமியும் மத்திய அமைச்சர்களாகி விட்டார்கள்; சந்திரசேகர், ஐ.கே. குஜ்ரால், தேவ கவுடா போன்றவர்கள் பிரதமர்களாகி விட்டார்கள். அப்துல் கலாம் அரசுத் தலைவராகி விட்டார். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும், அதிகரித்து வரும் தோல்வி பயம்; காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் இருக்கும் எப்படியாவது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுவிடும் பதவி ஆசை ஆகியவற்றை வைத்து, தக்க சமயங்கள் பார்த்து மாறி மாறி கூட்டுக்களும் பேரங்களும் நடத்திக் கூடுதலான தொகுதிகளைப் பெற்று, கூட்டணிக் கட்சிகளின் தயவில் பா.ம.க. தனது உண்மையான மக்கள் ஆதரவுக்கு மீறிய இடங்களைச் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பெற முடிகிறது.

 

இந்த நிலையை அடையும் வழியில் இராமதாசு ஒரு அரசியல் பச்சோந்தி என்றும் பா.ம.க. ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதக் கட்சி என்றும் பெயரெடுத்துள்ளார்கள். பொதுமக்கள் மட்டுமல்ல, சந்தர்ப்பவாத அரசியல் சகதியில் மூழ்கிக் கிடக்கும் கூட்டணி அரசியல் கட்சிகளே கூட, பா.ம.க. இராமதாசு நம்பிக்கைக்கு உகந்தவர் அல்லர் என்றே கருதுகின்றனர். இதை இராமதாசே ஒப்புக் கொண்டு, ""எங்களது ஆதரவை எல்லா விஷயங்களிலும் எதிர்பார்க்கும் கூட்டணிக் கட்சிகள் விஷயம் என்று வந்தால் எட்டி நின்று வேடிக்கை பார்ப்பது வழக்கமாகி விட்டது'' ஆத்திரமாக வெடிக்கிறார்.

 

கூட்டணிக் கட்சிகளுக்கும் பா.ம.கவுக்கும் உள்ள உறவு இத்தகையதுதான் என்று நன்கு தெரிந்தும், ""வருங்காலத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றுதான் சொல்ல வேண்டும். 2011இல் அப்படி அமையும் கூட்டணி ஆட்சியில் பா.ம.க. பங்குபெறும்'' என்றும் அடித்துச் சொல்கிறார். அதேசமயம், 2011இல் தமிழகத்தில் தனித்து ஆட்சியைப் பிடிப்பதுதான் இலக்கு; எங்கள் கனவு என்று தனது கட்சி கூட்டத்தில் பேசுகிறார். இனி தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் கூட்டணி ஆட்சிதான் என்று ஒருபுறம் மதிப்பீடு செய்துவிட்டு, பா.ம.க.வே தனித்து ஆட்சியைப் பிடிப்பதுதான் தமது இலக்கு, கனவு என்று பகல் கனவு காண்பதுதான் ஒரு அரசியல் தலைமைக்கு அழகா? அறிவா?

 

பா.ம.க இராமதாசைப் பொறுத்தவரை சந்தர்ப்பவாதக் கூட்டணி, சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசில் பங்கேற்பது என்பதுதான் இலக்கு, கனவு. மற்றபடி இலட்சியம், கொள்கை என்பதெல்லாம் கிடையாது. இதிலிருந்தே தெரியவில்லையா? பதவிதான் முக்கியம்; ஜெயலலிதாபா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ். கூட்டணி அரசானாலும் சரிதான்; கருணாநிதிகாங்கிரசுகம்யூனிஸ்டு கூட்டணி அரசானாலும் சரிதான். எதிலும் பங்கேற்க பா.ம.க. தயார். மக்கள் நலன், பொறுப்புடன் இயங்கும் அரசியல் இயக்கம் என்பதெல்லாம் வெறும் சவடால்தான்! இதை ஏற்கெனவே நிரூபித்து விட்டார்; வெற்றிக் கூட்டணி என்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்று புதிய அரசியல் இலக்கணத்தை உருவாக்கியவர் அல்லவா இராமதாசு!

 

காங்கிரசு, பா.ஜ.க. ஆகிய இரு தேசியக் கட்சிகளும் சரி, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியவர்களின் மாநிலக் கட்சிகளும் சரி தனித்து ஆட்சியைப் பிடிக்கும் சக்தியை இழந்துவிட்டன; இனி பா.ம.க.வுக்குத்தான் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று இராமதாசு நம்பச் சொல்கிறார். ஆனால், இதே அரசியல் தர்க்கவாதம் புரியும் நடிகர் விஜயகாந்த் கட்சியோ கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடிப்பதில் பா.ம.க.வை முந்திக் கொண்டு முன்னேறுகின்றது. காங்கிரசும், வைகோ கட்சியும் கூட பா.ம.க.வைவிடக் கூடுதலான வாக்கு சதவீதத்தைப் பெற்று வருவதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டி வருகின்றன. இராமதாசின் அரசியல் ஆரூடங்களை அரசியல் முட்டாள்கள் கூட நம்பமாட்டார்கள். ஆனால், பகலோ, இரவோ கனவு காணும் உரிமையை யார் மறுக்க முடியும், தடுக்க முடியும்!

 

""ஆண்ட, ஆளும் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் மக்களின் செல்வாக்கை இழந்து வருகின்றன; மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பா.ம.க.வை ஒரு ஜாதிக் கட்சி என்று மக்கள் நினைக்கவில்லை. ஒரு நல்ல பொறுப்புள்ள அரசியல் கட்சியாகவே மக்கள் நம்புகிறார்கள். தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு உறுப்பினர்களும் கிளைகளும் உள்ளன; அதன் வளர்ச்சியை மக்கள் வரவேற்கிறார்கள். எப்போதும் எந்தவொரு மக்கள் பிரச்சினையானாலும் பா.ம.க. மட்டும்தான் போராடுகிறது; எந்தவொரு பிரச்சினையானாலும் அதில் பா.ம.க.வின் கருத்தை மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அதன் செயல்பாடுகள் இருக்கின்றன. இதை அங்கீகரிக்க மறுத்து ஊடகங்கள் தாம் பா.ம.க.வுக்கு ஜாதி முத்திரை குத்தி, அதன் வளர்ச்சியைத் தடுப்பதிலேயே முனைப்பாக உள்ளன'' என்று அடுக்கடுக்காக புளுகித் தள்ளுகிறார், இராமதாசு.

 

எப்படியாவது தி.மு.க. கூட்டணியை உடைத்துவிட வேண்டும் என்று கங்கணங்கட்டிக் கொண்டுள்ள ஜெயலலிதாபா.ஜ.க. ஆதரவு பார்ப்பனச் செய்தி ஊடகங்களும், பிழைப்புக்காக பரபரப்புச் செய்திகளைத் தேடி அலையும் ஊடகங்களும்தாம் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன; அவை இராமதாசின் அறிக்கை அரசியலுக்கும், வெறும் அடையாளப் போராட்டங்களுக்கும் அளவுக்கு மீறியே முக்கியத்துவம் கொடுத்துப் பரப்பி வருகின்றன என்பதுதான் உண்மை.

 

சிறப்புப் பொருளாதார மண்டலம், விமான நிலையம் விரிவாக்கம், துணை நகரங்கள் அமைப்பு, முல்லைப் பெரியாறு காவிரி பாலாறு விவகாரங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் கொள்ளை, சில்லறை வணிகத்தில் ஏகபோக பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவு போன்றவற்றை பல்வேறு ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளும் கையிலெடுத்துப் போராடி வருகின்றன. இவையெல்லாம் பா.ம.க. பங்கேற்கும் ஆளும் கூட்டணி அரசுகளின் தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கக் கொள்கையின் நேரடி விளைவுதான். இராமதாசின் அன்புமணி மத்திய அமைச்சகத்தில் உட்கார்ந்து கொண்டு பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கும், பெப்சிகோக்குக்கும் பல்லக்குத் தூக்கியதைப் போல, மேற்படி பிரச்சினைகளில் மன்மோகன் சிங் மாண்டேக் சிங் அலுவாலியா சிதம்பரம் கும்பலுக்கு எல்லா வகையிலும் துணை போகிறார். இந்த உண்மைகளையெல்லாம் இருட்டடிப்பு செய்து பா.ம.க. ராமதாசின் அறிக்கைகளையும் அடையாளப் போராட்டங்களையும் செய்தி ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன. ஊடகங்களுக்கு கவர் கொடுத்தே ""கவர்'' பண்ணும் பா.ம.க. இராமதாசு, மற்ற இயக்கங்களின் கொள்கைகள், முழக்கங்களைத் திருடி முற்போக்கு நாடகமாடி ஏய்ப்பதையே ஆரம்பம் முதல் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 

அரசியல் கொள்கைகள், முழக்கங்கள், போராட்டங்கள் சந்தர்ப்பவாத கூட்டணி சேர்க்கைகளில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் பா.ம.க. இராமதாசு நம்பத் தகுந்தவர் அல்ல என்று வன்னிய மக்கள் பலருக்கும் நன்கு தெரியும். ""என் சொந்தக் காசை வைத்துத்தான் இயக்க வேலை செய்வேன்; அமைப்பிடமிருந்து ஒரு சல்லிக்காசு கூட வாங்க மாட்டேன். நானோ எனது குடும்பத்தினரோ எந்தவொரு பதவியையும் ஏற்க மாட்டோம்; அப்படிச் செய்தால் என் கையை வெட்டுங்கள்'' என்றெல்லாம் ஆரம்ப காலத்தில் சவடாலடித்த இராமதாசு, தனது மகன், மனைவி, மருமகள், பேத்தியைக் கூட கட்சி மற்றும் துணை அமைப்புகளின் பொறுப்புகளில் இருத்திக் கொண்டார். இலஞ்ச ஊழல் செய்து கருப்புப் பணம் கள்ளப் பணத்தைக் குவிப்பதில் வாழப்பாடி இராமமூர்த்தியோடு அவர் பங்காளிச் சண்டை போட்டு நாடே நாறியது. கருணாநிதி, ஜெயலலிதா கட்சிகளைப் பல பிரச்சினைகளிலும் விமர்சனம் செய்தபோதும், அவர்களது குடும்ப அரசியலை மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே, ஏன்? பா.ம.க.வே இராமதாசின் குடும்ப அரசியல் நலனுக்காகத்தான் நடத்தப்படுகிறது; அதற்காகத்தான் அவரது வன்னிய சொந்தகளாகிய தீரன் போன்றவர்கள் கூடத் தூக்கியெறியப்பட்டார்கள் என்பதை இன்னும் பா.ம.க.வில் உள்ள பிழைப்புவாதிகள் தவிர, அனைவரும் அறிவர்!


· ஆர்.கே.