Language Selection

புதிய ஜனநாயகம் 2007
aug_2007.jpg

ஆட்டோ திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருச்சி உறையூர் ஆட்டுக்காரத் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவர், போலீசாரால் சித்திரவதை செய்து அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரத்தைக் கண்டு திருச்சி நகரமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

 

உறையூரைச் சேர்ந்த செந்தில் என்பவர், தனது ஆட்டோ காணாமல் போனது பற்றி உறையூர் போலீசு நிலையத்தில் 30.6.07 அன்று ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் தோழர் செல்வராசுவின் உதவியுடன் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் ரசீது தரவில்லை; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இந்நிலையில், அவ்வப்போது சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஆட்டோ ஓட்டுநரான செல்வம் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட, தோழர் செல்வராசும் செந்திலும் அவரிடம் விசாரித்தபோது, அவர் ஆட்டோ திருடியதாக ஒப்புக் கொண்டு, ஆட்டோவைத் தராமல் அலைக்கழித்தார். பின்னர், செல்வராசுவும் செந்திலும் செல்வத்தை உறையூர் போலீசாரிடம் 6.7.07 அன்று ஒப்படைத்து, விசாரணை செய்து ஆட்டோவை மீட்டுத் தருமாறு கோரினர்.


சிறு திருட்டு என்றாலும் கொடூரமாகச் சித்திரவதை செய்யும் போலீசு, திருட்டில் கிடைத்த ஆதாயத்தில் தமக்குரிய பங்கைக் கேட்டு செல்வத்தை மிருகத்தனமாகத் தாக்கியது. குற்றம் சாட்டப்பட்டவரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய சட்டபூர்வ நடைமுறையை மீறி, உறையூர் போலீசார் 3 நாட்கள் செல்வத்தைத் தனியே அடைத்து வைத்து கொடூரமாக வதைத்தனர். 7ஆம் தேதி அன்று உறையூர் ஸ்டார் மேன்ஷனிலும் அடுத்த இரு நாட்களாக பாபுரோடு, சிறீரங்கம், பாலக்கரை முதலான இடங்களிலும் வைத்து காட்டுமிராண்டித்தனமாக அவரை அடித்து நொறுக்கியதால் 9.7.07 அன்று செல்வம் மரணமடைந்தார்.

 

இப்படுகொலையை மூடி மறைக்க பிணத்தை எங்காவது வீசி விடலாம் என்றும் அதற்கு ஒத்துழைக்குமாறும் தலைமைக் காவலரான மருதைராஜ், ஆ.ஓ.பா. சங்கத் தலைவர் செல்வராசிடம் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த செல்வராசு இதற்கு உடன்பட மறுத்து, மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கரைஞர்களின் உதவியோடு போலீசு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

 

ஆனாலும், போலீசு நடத்திய இப்படுகொலையை மூடிமறைக்க ஒத்துழைக்காத "குற்ற'த்திற்காக ஆ.ஓ.பா. சங்கத் தலைவர் செல்வராசை முதன்மைக் குற்றவாளியாகவும் புகார் கொடுத்து செந்திலை இரண்டாவது குற்றவாளியாகவும் கொலைகாரப் போலீசு பொய்வழக்கைச் சோடித்து, அதற்கேற்ப திகில் சினிமா கதை பாணியில் ஒரு கட்டுக் கதையையும் நாளேடுகளில் செய்தியாக வெளியிட்டது. பின்னர், அவசர கோலத்தில் செய்த தகிடுதத்தங்களை மூடி மறைக்க முடியாமல் மருதைராஜ், செல்வராஜ் ஆகிய போலீசுக்காரர்களை பெயருக்கு 6வது குற்றவாளிகளாகச் சேர்த்துள்ளது. கொலைவெறியாட்டத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள செந்தில், பாலாஜி மற்றும் ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோரை வழக்கிலேயே இணைக்கவில்லை. தொடக்கத்திலேயே இவ்வளவு மோசடிகளைச் செய்யும் திருச்சி போலீசு, வழக்கின் போக்கில் இன்னும் எவ்வளவு தில்லுமுல்லுமோசடிகளைச் செய்யும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. சட்டம் என் கையில், நீதி என் பையில் என்று கொக்கரிக்கும் போலீசின் ஆணவத்துக்கும் அடக்குமுறைக்கும் இதைவிட வேறு சான்றும் தேவையில்லை.

 

உறையூர் போலீசின் கொட்டடிக் கொலைக்கெதிராகக் கொதித்தெழுந்த ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கம், ஓட்டல் தொழிலாளர் சங்கம், மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, கொலைகார போலீசைக் கைது செய்யக் கோரி நகரெங்கும் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டன. அதன் தொடர்ச்சியாக 12.7.07 அன்று ஊர்வலமாகச் சென்று திருச்சி மாவட்ட நீதிபதியிடமும் 16.7.07 அன்று மாவட்ட ஆட்சியரிடமும் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தன. 17.7.07 அன்று புத்தூர் நாலுரோட்டில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளன. கொலைகார போலீசாரைத் தண்டிக்கவும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்கவும், கொலை செய்யப்பட்ட செல்வத்தின் குடும்பத்திற்கு உரிய நட்டஈடு கோரியும் இவ்வமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.


பு.ஜ. செய்தியாளர்