இராக்களில் இருளடித்து மீண்டாலும்
ஊர்களில் நோய்நொடிகள் தீண்டாமல்
தெருமுனையில் காவல் நிற்கும்
சண்டிச் சாமி சிலைகளைப் போல்..,
கரைகளில் அலையடித்து மீண்டாலும்
திடுமென சீற்றங்கள் தீண்டாமல்
தடுமென காவல் நிற்கும்
ஈஸ்ட்டர்தீவு ரப்பாநூயி சிலைகளைப் போல்..,
அரச அட்டூழியத்திலிருந்து - மக்கள்
தமைக் காக்கும் சிலைகளாக
எவர்களாவது போர்ப் படையாகி
தமை மீட்டுத் தருமாறு
பொது வெளியில் தாமாக
எவரையும் கேட்கவேயில்லை.#
ஆனால்..,
மக்கள் நலம் கொண்டு - எமை..,
தமை எதிர்த்துப் போராடுமாறு
எப்போதும் கூவி அழைக்கின்றது
அரசின் அன்றாட அடக்குமுறை.
எமைப் பெற்றாரும் உற்றாரும்
அரச அடக்குமுறையில் மாரடிக்க - அந்த
ஓலத்துக் குரல்களினை அமுக்கி
அடக்கி அறுக்கும் அநியாயங்கள்
உலகத் தேசத்தின் தேகமொன்றில்
நியாயமெனும் அரச அடக்குமுறையால்..,
அதன் அப்பட்டமான அரசியற் தவறுகளால்..,
இனங்களாய்ப் பிரிப்புகளும்
மனங்களின் வதைப்புகளும்
உயிருடற் புதைப்புகளும்
என்புக் கோர்வை மீட்புகளுமாய்..,
அரசின் மறு உற்பத்தி அரசியல்
தனை எதிர்த்துப் போராடு என
அறைகூவி அழைக்கின்றது.
இதில் இங்கு..,
இன மத பேதங்கள் களைந்து
மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து
அனைத்து அடக்குமுறைகளையும்
அனைத்து அநியாயங்களையும்
எம் மெய்யிடும் போரினால்
எதிர்த்துத் தகர்க்கும்
புரட்சிகள் பூர்த்து
மக்களின் வாழ்வை
மக்களே தேடுவோம்.
- மாணிக்கம்.
08.03.2014