புளியமரம் நிழலுடன் நின்றது
நிழல் தேடும் எனக்கு
அது தேவையாகப்பட்டது.
நடந்தோடிப் போய்
அதன் கீழே அமர்ந்தேன்.
அம்மரம் மேலே அமர்ந்து
தன்னுறவை அழைக்கிறது குயில்.
என்னுறவை நான் மறந்து
நிழலொடு நிழலாகி நெடுநேரமாச்சு.
அரக்கப் பரக்க
கண்விழித்துப் பார்க்கின்றேன்..,
கரடு முரடான ஏதேதோ
என் மூச்சை அழுத்தி அமுக்கி..,
முடியாது முடியாது
என்னாலே முடியாது..,
முதல் சிறு நிழலாகத் தெரிந்த அது
இப்போ இந்தப் புளிய மரமாகத் தெரிகின்றது.
எனை விட்டு நான் எழுந்து
எங்கேயோ செல்கின்றேன் போலவும் தெரிகின்றது.
சிங்களத்தில் கதைப்பதும்
ஆங்கிலத்தில் சொல்லுவதும்
செந்தமிழில் பறைவதும்
மிக நன்றாகக் கேட்கின்றது..,
உயிர் பிரியுமுன்பு
காதுகள் மிக நன்றாகவே கேட்குமாம்.
இந்தாளை காம்பிலை வைச்சு விசாரிக்கோணும்..,
பிராணவாயுவை தொடர்ந்து கொடுக்கவேணும்..,
நல்லாத் தண்ணி அடிச்சுப்போட்டு
இந்தப் பரந்தாமு சாமத்தில வந்திருக்கிறான் போல..,
அந்தப் புளியமரத்திலை முனிவாற நேரம்
இந்தப் பரந்தாமன் மாட்டியிட்டியிட்டான்.
ஆமிக் காம்பில் விசாரணை
மூச்சுத் திணறல்
இரண்டும் சரி.
ஆனால்
புளியமரத்திலை முனிவாற நேரம்
நான் அதிட்டை மாட்டியிருக்கிறனாம், ம்..,
கரியமல வாயுவிற்குக் கீழ்
நெடு நேரம் படுத்த எனக்கு
இதுகும் வேணும் இன்னமும் வேணும்.
நான் இருந்தர்லும் - இறந்தாலும்
பேயடித்த பரந்தாமன்
ஊர் முழுக்கச் சொல்லியாச்சாம்.
- மாணிக்கம்.