Language Selection

ஜெகதீசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மகிந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் நான்கு நாள் விசாரணைகளை வெள்ளியன்று ஆரம்பித்து திங்களன்று நிறைவு செய்துள்ளது.

இந்த விசாரணைகளுக்கு சமூகமளித்திருந்தவர்கள் பலரும் தமது துயரங்களையும், நிலைமைகளையும் ஆணைக்குழுவினருக்கு கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர். சிலர் ஆவேசம் கொண்டிருந்தார்கள்.

அரச படைகளின் மிரட்டல்கள், அச்சுறுத்தல்களையும் மீறி மக்கள் அரச படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்து துணிந்து முறைப்பாடு செய்ததுடன், சர்வதேச மக்களிற்கு வன்னி இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதனையும் தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் காணாமல் போதல் தொடர்வதனையும் அரசின் தொடரும் இனவாத அடக்குமுறையையும் அம்பலப்படுத்த இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தியுள்ளனர்.

"எனது மகன் காணாமல் போகவில்லை! இராணுவத்தினர் தான் கைது செய்தனர்"

"எனது அண்ணாவை இராணுவமே கடத்தியது!"

"கத்தோலிக்க மதகுரு பிரான்ஸிஸ் ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் எனது கணவர் உட்பட பல போராளிகள் சரணடைந்தனர்" - புலிகளின் முக்கிய தளபதியான யோகியின் மனைவி சாட்சியம். இப்படி பல உண்மைகள் பகிரங்கத்துக்கு வந்தன.

மேலும் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்தும், இந்த விசாரணையின் பலன் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறும் வகையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைவாக உள்நாட்டிலேயே விசாரணைகளை நடத்துவதற்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

இருப்பினும் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் நம்பிக்கையற்ற நிலையிலேயே பாதிக்கப்பட்ட பலரும் விசாரணைகளில் கலந்து கொண்டதாக அறியகிடக்கின்றது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் வரும் போதெல்லாம் விசாரணை என்ற இந்த நாடகம் சில நாட்கள் இடம்பெறும் பின்னர் அவை கிடப்பில் போடப்படும். கடந்த முறை ஜெனீவாவில் இலங்கை பற்றி விவாதம் நடந்த போதும் இப்படியான ஒரு நாடகம் ஆடி மகிந்த அரசு உங்கள் கோரிக்கைக்கு அமைய நான் விசாரித்துக் கொண்டிருக்கின்றேன் என தன் மீதான நெருக்கடிகளை குறைத்தது.

அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தங்களது நவதாராளவாத பொருளாதார கொள்ளையினை இலங்கையில் சீனாவை ஓரம் கட்டி முழு அளவில் முன்னெடுக்க எமது அவலத்தையும் அழிவையும் வைத்து பேரம் பேசுகின்றதே ஒழிய, தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக நீதியைப் பெற ஜெனீவாவில் கூடி தேர் இழுத்துக் கொண்டிருக்கின்றது என்று நம்பிக் கொண்டிருப்போமேயானால் எம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம் என்பது தான் உண்மை