கபடம் செய்யும் காகக் கூட்டத்திற்கு
புறங்கையால் கொடுக்கின்ற மதிப்புக் கூட
தனை வருத்தி உழைக்கின்ற
அன்றாடங் காச்சி மனிதருக்கு
இல்லையே..! என்பதையும் விட..,
பிற நாட்டாண்மைத் தேசங்கள்
தினமும் திருடுகின்ற எம் மண்ணில்
துணை நின்று கொள்ளையிடும்
உண்ணாட்டு நவகாலனிச் சேவகரின்
வாழ்வும் வளமும் மதிப்பும் மரியாதையும்
ம்..! பெரிதிலும் பெரிதுதான் போ..,
அடக்குமுறையாளரின் காலனியத்தில்
அக் கூட்டம் தினமும் கொள்ளையிட்ட
எம் தேசத் துண்டங்களைச் சுகமாய்
தம் தேசம் அள்ளிச் செல்ல - அவர்
தாரூற்றிப் போட்ட நீள் தெருக்களை
கரையோரம் கல்லணைத்த துறைமுகங்களை
வானறுக்கும் விமானத் தளங்களை
இரும்பிறுக்கிய தண்டவாளங்களை என..,
சில தெருப் பொறிக்கிகள்
தம் குடும்ப உறவுகளை ஏய்ப்புக் காட்டி
தொகை தேடும் விபச்சாரத்தில் விட்டுவாங்கி
தம் ஈன வயிற்றால் ஏப்பம் விடுவது போல்..,
ஜனநாயக உரிமையுடன் வாழ்வதாகச் சொல்லும்
எம் தேச மக்களின் ஒருவீத அனுமதியுமின்றி..,
நவதாராளப் பொருளெனும் கொள்கையின் கீழ்
அத்தனை மக்களையும் அப்படியே அடகுவைத்து
எடுத்த பணப் பொருளின் வட்டி அறவீடுகளை
அவரவர் தம் எண்ணப்படி வந்து அறுத்துப் பொசிக்க..,
கருப்பிழந்த காலனியத் தெருக்களை
கரை உடைத்த துறைமுகங்களை
போர் தின்ற தண்டவாளங்களை
இந்தியச் சீன துடப்பங்களால் மீசிமினிக்கி
எம் தேச மக்கள் உழைப்பதில் லாயக்கற்ற
தெருப் பொறுக்கி நாய்கள் என
உலகிலே நிறுவுகின்றது இலங்கை அரசு.
இதில்..!
பசி பட்டினியால்..,
ஆசை விருப்பங்களால்..,
அறியாத புரியாத தன்மைகளால்..,
சமூக அரசியல் நிலைப்பாடுகளால்..,
இல்லாமை என்பதன் வறுமைகளால்..,
ஏதேதோ வக்கிர முரண்பாடுகளால்..,
இவை அனைத்தின் உளவியல் நிலைகளால் என..,
எவரெவரோ அல்லது ஒருவரோ
மற்றவர் பொருளைத் திருடி
அல்லது திருடியதாய் அகப்பட்டால்
தண்டனை.., தண்டனை.., தண்டனை..,
ஆனால்..,
எம் தேச விளை நிலத்தை
எம் தேச மக்களின் முழு வாழ்வை
ஆண்டை நாடுகளிடம் அடகு வைத்து
திருடி - களவெடுத்து - கொள்ளையடித்து
அரசியல் ஜெப்படி வித்தை காட்டும்
அரசுக்கு என்ன தண்டனை..?
- மாணிக்கம்
06.02.2014