வேலூர் நகரின் மத்திய பேருந்து நிலையம் ""எக்ஸ்னோரா'' என்ற தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் ஒப்படைத்தால் நிர்வாகம், பராமரிப்பு, சேவை என அனைத்துமே மேம்பட்டு சிறப்படையும் என்று கருதும் மேதாவிகள் இப்பேருந்து நிலையத்துக்கு வந்தால், மூக்கைப் பிடித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள்.
இப்பேருந்து நிலையத்தினுள்ளே வந்து செல்ல சாலை வசதியில்லை. பயணிகளுக்கு நிழற்குடை இல்லை. ஆட்டோ நிறுத்தம்கூட இல்லாததால் மூட்டை முடிச்சுகளோடு பயணிகள் அவதிப்படுகின்றனர். கிட்ட நெருங்கவே முடியாதபடி முடைநாற்றமடிக்கின்றன கழிப்பறைகள்; அவற்றில் சிறுநீர் கழிக்க கட்டணமாக இரண்டு ரூபாயை வழிப்பறி செய்கிறது எக்ஸ்னோரா.
பேருந்து நிலையத்தின் யோக்கியதை இப்படியிருக்க, வேலூர் நகரமோ சேறும் சகதியுமான சாலைகள், கழிவுநீர் தேங்கி பன்றிகள் உருளும் சாக்கடைகள், அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் என குடலைப் புரட்டும் நாற்றத்தால் திணறுகிறது. பெரும் ஒப்பந்தக்காரர்களும் எக்ஸ்னோரா போன்ற "தொண்டு' நிறுவனங்களும் பகற்கொள்ளையடிக்க, நகராட்சியோ இக்கொள்ளையர்களுக்குத் தொண்டூழியம் செய்து கொண்டிருக்கிறது.
மக்களின் அடிப்படை வசதிகளை அறவே புறக்கணித்துவிட்டு, அவற்றைத் தனியார் கொள்ளைக்குத் திறந்துவிட்டுள்ள நகராட்சியை அம்பலப்படுத்தியும், பேருந்து நிலையத்தை எக்ஸ்னோராவிடமிருந்து பிடுங்குவது உள்ளிட்ட இதர கோரிக்கைகளை வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகம் முன்பாக 20.8.07 அன்று எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை ம.க.இ.க. நடத்தியது. தனியார்மயத்தின் யோக்கியதையை நாறடித்த இந்த ஆர்ப்பாட்டம், வேலூர் நகர மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.