sep_2007.jpg

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் மறுகாலனியக் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் ஆட்சியாளர்கள், இதற்கு சீனாவை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள். சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த சீனாவின் ஷென்சென் இன்று ஆலைகள், அலுவலகங்கள், அடுக்குமாடிக் கட்டிடங்கள் வர்த்தக நிறுவனங்கள் என பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றதற்கு அங்கு நிறுவப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம்தான் காரணம்

 என்று விளக்கமளிக்கிறார்கள். முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளோ, சீனாவைப் போல வளர்ச்சியைச் சாதிக்க வேண்டுமானால் இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரிவாகக் கட்டியமைக்க வேண்டியது அவசியம் என்று வாதிடுகின்றனர்.

 

""சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் மாபெரும் வளர்ச்சியைச் சாதிப்பதில் சீனா ஒளிரும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. பல்வேறு சலுகைகளை அளிப்பதன் மூலம் அன்னிய மூலதனத்தைக் கவர்ந்திழுத்து, தனது பொருளாதாரத்தை மிகப் பெருமளவுக்கு சீனா வளர்த்தெடுத்துள்ளது'' என்று 2005ஆம் ஆண்டில் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தின் போது, புதுச்சேரி பா.ம.க எம்.பி.யான இராமதாசு புகழ் பாடினார். சீனாவில் நிறுவப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சலைத் தோற்றுவித்துள்ளதோடு, அந்நாடு ஆசியாவின் புதிய வல்லரசாகப் பரிணமித்து வருகிறது என்று ஏகாதிபத்தியவாதிகள் சீனாவின் புகழ் பாடுகின்றனர். போதாக்குறைக்கு, போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம். கட்சியினரும், ""சீன அரசின் தெளிவான சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கை, பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது'' என்று தமது "மார்க்சிஸ்ட்' மாத இதழில் (பிப்.07) பூஜிக்கின்றனர்.

 

இப்படி ஏகாதிபத்தியவாதிகளாலும், அவர்களின் கைக்கூலி ஆட்சியாளர்களாலும், சர்வகட்சி ஓட்டுப் பொறுக்கிகளாலும் துதிக்கப்படும் சீன சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் யோக்கியதை என்ன?

 

ஏழை நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்ட ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலங்களின் (உகஙூ) புதிய பரிமாணம்தான் 1980களில் சீனாவில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். அன்னிய முதலீட்டாளர்களுக்கு இதர நாடுகள் கணக்கற்ற சலுகைகளை அளித்து வந்தபோது, அவர்களுக்குத் தனியே ஒரு சமஸ்தானத்தை அமைத்துக் கொடுத்த சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள், இதையே சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று குறிப்பிட்டனர். ஏகாதிபத்தியச் சூறையாடலுக்குக் கதவை அகலத் திறந்துவிடும் இக்கேடுகெட்ட கொள்கையை ""சந்தை சோசலிசம்'' என்றும் ""முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதை'' என்றும் கயிறு திரித்தனர்.

 

சீனாவில் 6 பெரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்படுவதாகக் கூறப்பட்டாலும், பல்லாயிரக்கணக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் அன்னிய முதலீடுகள் வெள்ளமெனப் பாயும் என்ற சீன ஆட்சியாளர்களின் கனவு புஸ்வாணமாகிப் போனது. குவாங்டாங் மாநிலத்திலுள்ள ஷென்சென் மண்டலம் தவிர, இதர சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் எதிர்பார்த்த அளவிற்கு அன்னிய முதலீடுகள் வரவில்லை. குறிப்பாக, ஷாண்டூவ் மண்டலத்துக்கு அன்னிய முதலீடாக சல்லிக் காசு கூட வரவில்லை.

 

அமெரிக்க, ஐரோப்பிய முதலீடுகளை எதிர்பார்த்து பல சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், அந்நாடுகளிலிருந்து மிக அற்பமான அளவுக்கே முதலீடுகள் வந்தன. ஹாங்காங், தைவான் ஆகியவற்றிலிருந்தே பெருமளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டன. ஒட்டு மொத்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஹாங்காங், தைவான் முதலாளிகளின் முதலீட்டு பங்கு 88%க்கு மேலாக இருந்தது. பீற்றிக் கொள்ளப்படும் ஷென்சென் மண்டலத்தின் ஜவுளி உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு முதலானவற்றில் ஹாங்காங் முதலாளிகளின் பங்கு 95%க்கு மேலானதாக இருந்தது. ஏகாதிபத்திய நாடுகளின் முதலீடு மிகமிகக் குறைவானதாகவே இருந்தது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தால் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மூலதனமும் தொழில்நுட்பமும் குவியும் என்ற மாயை ஷென்சென் மண்டலத்திலேயே தகர்ந்து போய் விட்டது.

 

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும் வீட்டுமனை கட்டுமானத் தொழில் வளர்ச்சிக்காகவும் 199293இல் சீன அரசு 1,27,000 ஹெக்டேர் விளைநிலங்களை முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது. இருப்பினும் இன்றுவரை இவற்றில் 46.5% நிலங்கள் மட்டுமே உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான சலுகைகளோடு நிலங்களை ஒப்படைத்தால், இடையூறின்றி முதலாளிகள் தொழில் தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு கேழ்வரகில் நெய் வடிந்த கதையாகி விட்டது. இம்மண்டலங்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதிக்கும் மேலான நிலங்கள் இன்று தரிசாகக் கிடக்கின்றன.

 

சீன மைய அரசு உருவாக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஒருபுறமிருக்க, இன்னும் ஏராளமான சலுகைகளுடன் மாநில அரசுகள் 6000 முதல் 8500 வரையிலான சிறிய அளவிலான சிறப்புப் பொருளாதார மண்டலங்களை "90களில் உருவாக்கின. இவற்றின் மொத்தப் பரப்பளவு 15,000 சதுர கி.மீ.க்கும் மேலாகும். இது சீனாவில் தற்போதுள்ள நகரங்களின் பரப்பளவை விட அதிகமாகும். இப்படி வெறிபிடித்த வேகத்தில் தொடங்கப்பட்ட மண்டலங்களில் பாதியளவுக்குக் கூட செயல்படவில்லை. பின்னர், மைய அரசு இவற்றில் 2000க்கும் மேற்பட்ட மண்டலங்களை ரத்து செய்து பழைய நிலைக்குத் திரும்ப முயற்சித்து வருகிறது.

 

1986லிருந்து 1996 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக சீன அரசு ஏறத்தாழ 50 லட்சம் ஹெக்டர் விளைநிலங்களைப் பறித்தெடுத்தது. குறிப்பாக, ஃபூஜியன் மாநிலத்தில் உள்ள சியாமென் மண்டலத்திற்காக ஏறத்தாழ 4 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பறிக்கப்பட்டன. இந்நிலங்களில் ஓட்டல்கள், உல்லாச விடுதிகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி வீட்டுமனைத் தொழில் முதலாளிகள் ஆதாயமடைந்தனரே தவிர, புதிதாக தொழிற்சாலைகள் எதுவும் உருவாகவில்லை. வேலை வாய்ப்பும் பெருகவில்லை. வேறிடத்திலுள்ள சில வர்த்தக நிறுவனங்கள் இம்மண்டலங்களுக்கு இடம் பெயர்ந்ததைத் தவிர, புதிய நிறுவனங்கள் எவையும் உருவாகி வளரவில்லை. ஏற்றுமதிக்கான தொழில் நிறுவனங்களை உருவாக்காமல் வெறுமனே உல்லாச விடுதிகள், குடியிருப்புகள் உருவாக்குவதற்கு இப்போது சீன அரசு கட்டுப்பாடு விதிக்குமளவுக்கு நிலைமை விபரீதமாகிவிட்டது.

 

""உலகின் மிகப் பெரிய ஊகவணிக நீர்க்குமிழி'' என்று "எக்னாமிஸ்ட்' எனும் ஆங்கில வார ஏடு சித்தரித்த øஹானான் சிறப்புப் பொருளாதார மண்டலம், சீனாவின் அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் யோக்கியதைக்கு எடுப்பான சான்றாகத் திகழ்கிறது. அங்கு 30 மாடிக்கும் உயரமான பெரும் வர்த்தக கட்டடங்கள் காலியாகிக் கிடக்கின்றன. பெருமுதலாளிகள் குடியேறுவதற்காகக் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாக்களில் எதிர்பார்த்தபடி அன்னிய முதலாளிகள் முதலீடு செய்ய வராததால், அவற்றில் கோட்டான்களே குடியிருக்கின்றன. தொழில்நுட்ப ஊழியர்கள் குடியிருப்பதற்காகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஊக வணிகம், வரி ஏய்ப்பின் மூலம் வீட்டுமனைத் தொழில் முதலாளிகள் கொழுப்பதற்காகவே உருவாக்கப்பட்டு ஊதிப் பெருத்த அந்த மண்டலம், முதலாளித்துவச் சூறையாடலின் நினைவுச் சின்னமாக நிற்கிறது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கென உருவாக்கப்பட்ட ஹைனான் வளர்ச்சி வங்கி திவாலாகி மூடிக் கிடக்கிறது.

 

திவாலானது இந்த ஒரு வங்கி மட்டுமல்ல; இதற்கு முன்பாகவே குவாங்டாங் அனைத்துலக டிரஸ்ட் மற்றும் குவாங்டாங் முதலீட்டு கார்ப்பரேசன் ஆகிய வங்கிகள் திவாலாகி விட்டன. வேடிக்கை என்னவென்றால் இந்த குவாங்டாங் மாநிலத்தில்தான் "மாபெரும் வளர்ச்சியை' எட்டியதாகக் கூறப்படும் ஷென்சென் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைந்துள்ளது.

 

இந்த ஷென்சென் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்தான் ஆலைத் தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்கி பெருமளவில் மரணமடைந்துள்ளனர். இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததாலேயே விபத்துகளும் மரணங்களும் தொடர்கின்றன. இத்தொழிலாளர்களுக்குச் சட்ட ரீதியாகவோ சமூக ரீதியாகவோ எவ்வித பாதுகாப்பும் கிடையாது. இத்தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ளவும் உரிமை கிடையாது. இம்மண்டலத்தில் மட்டும், ஏறத்தாழ 5 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக உழல்கின்றனர். இம்மண்டலத்தில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் தராமல் கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ளன. இம்மண்டலத்திலும் இதர பகுதிகளிலும் சேர்த்து நாடெங்கும் கடந்த 2006ஆம் ஆண்டில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட தன்னெழுச்சியான தொழிலாளர் போராட்டங்கள் நடந்துள்ளன.

 

இவை எல்லாவற்றையும் விட, எல்லா வகையான சமூக சீரழிவுகளின் மையமாக இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் திகழ்கின்றன. விபச்சாரத்துக்கும் பெண் கடத்தலுக்கும் பெயர் பெற்றுள்ள ஷாங்காய் நகரத்தைவிட, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைந்துள்ள ஷென்சென்னில் 9 மடங்கு அதிகமாகக் குற்றங்கள் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன. ஷான்டோவ், ஷியாமென் ஆகிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வரிஏய்ப்பு மோசடிகளும் கடத்தலும் பெருமளவில் நடந்துள்ளதாக சீன அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இத்தகைய மண்டலங்களால் அன்னியச் செலாவணி இழப்பு ஏற்பட்டு, பண வீக்கம் பெருகியது.

 

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் பறிக்கப்பட்டு, விவசாயம் புறக்கணிக்கப்பட்டதால் விவசாயிகள் பிழைக்க வழியின்றி நகரங்களை ஓடி வருகின்றனர். இதனால் நகர்ப்புற மேட்டுக்குடியினரின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுவதாகக் குற்றம் சாட்டி அம்மக்களை சீன அரசு நகர்ப்புறங்களிலிருந்து விரட்டியடிப்பதோடு, நகரங்களின் எல்லைகளில் தடுப்பரண்களை எழுப்பி அவர்கள் நகரினுள் நுழையாமல் தடுத்து வருகிறது. வாழவழியின்றி நாடோடிகளாக அலையும் விவசாயிகள் பிச்சை எடுக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் விளைந்த பேரழிவுகளை அனுபவ ரீதியாக உணர்ந்த சீன அரசு திட்டக் குழுவின் முன்னாள் ஆலோசகராக இருந்த சாவோசியோ, ""சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பாதை முடிவுக்கு வந்து முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டு விட்டது. சீழ்பிடித்து நாறும் இரணங்களை அன்னிய முதலீடு எனும் பட்டுத் துணியால் இனிமேலும் மூடிமறைக்க முடியாது'' என்று 2006ஆம் ஆண்டில் சாடினார்.

 

சீன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வளர்ச்சிக்கான முன்னுதாரணம் அல்ல; பேரழிவுக்கான முன்னெச்சரிக்கை என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

 

ங்இக்கட்டுரைக்கான ஆதாரங்கள் ""எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி'' எனும் ஆங்கில வார இதழிலிருந்து (ஏப்ரல் 28 மே 4, 2007) எடுக்கப்பட்டுள்ளனசி.


· குமார்