Language Selection

sep_2007.jpg

சில்லறை வணிகத்தில் நுழைந்து நாடெங்கும் நாலு கோடிக்கும் மேலான உழைக்கும் மக்களின் வாழ்வைப் பறிக்க வந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. முதலான ஆளும் வர்க்கக் கட்சிகள் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் ரிலையன்சுக்கு எதிராக வீரவசனம் பேசிக் கொண்டே, ரிலையன்சு கடைகளுக்குக் குத்துவிளக்கேற்றி திறப்பு விழா நடத்துபவர்களைத் துரோகிகள் என்பதா, அல்லது மக்களின் எதிரிகள் என்பதா?

இவர்கள் வேறு யாருமல்ல, ரிலையன்சுக்கு எதிராக வீரதீரமாக வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சியினர்தான் கடந்த ஜூலை மாதத்தில், கேரளத்தில் இந்த அயோக்கியத்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.

 

கொச்சி நகரத் துணைமேயரும், சி.பி.எம். கட்சியின் எர்ணாகுளம் மாவட்டக் கமிட்டி உறுப்பினருமான சி.கே. மணிசங்கர், லெமக்காரா எனுமிடத்தில் ரிலையன்ஸ் பிரஷ் காய்கறிக் கடையைத் தொடங்கி வைத்து, தமது கட்சியின் துரோகத்தனத்தை அம்மாநிலமெங்கும் பறைசாற்றியுள்ளார். துணை மேயரே இந்த வேகத்தில் செல்லும்போது சி.பி.எம். கட்சியின் கொச்சி எம்.எல்.ஏ. சும்மாயிருப்பாரா? மாநிலக் கமிட்டி உறுப்பினரும் கொச்சியின் எம்.எல்.ஏ.வுமான தினேஷ் மணி, தேவாரா எனுமிடத்தில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டைத் திறந்து வைத்து அசத்தியுள்ளார்.

 

சில்லறை வணிகத்தில் நுழைந்துள்ள ரிலையன்சுக்கு எதிராக சி.பி.எம். கட்சி வீரவசனம் பேசி வரும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி அரசு, ரிலையன்சை அனுமதிப்பது ஏன்? அதிலும் சி.பி.எம். பிரமுகர்களே கடையைத் திறந்து வைக்கிறார்கள் என்றால், சி.பி.எம். கட்சி ரிலையன்சை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்று கேட்டு கேரள மாநிலமெங்கும் மக்கள் காறி உமிழத் தொடங்கியதும் சி.பி.எம். கட்சித் தலைமை பீதியடைந்தது. தனது துரோகத்தனத்தை மறைக்க, இப்பிரமுகர்களிடம் ரிலையன்ஸ் கடை திறப்பு பற்றி விளக்கம் கோரும் நாடகமாடியது.

 

இதைத் தொடர்ந்து இப்பிரமுகர்கள் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டனர். தங்களது நெருங்கிய நண்பர்களின் வற்புறுத்தலால் ரிலையன்ஸ் கடைகளைத் திறந்து வைத்ததாக விளக்கம் அளித்தனர்.

 

இப்"பாட்டாளி' வர்க்கப் பிரமுகர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் முதலாளித்துவவாதிகள்தான் என்பதையும், நாளை இந்த "நண்பர்கள்' வற்புறுத்தினால் உழைக்கும் மக்களுக்கு எதிராக எதையும் செய்யத் துணியும் துரோகிகள்தான் இப்பிரமுகர்கள் என்பதையும், இவர்களது தன்னிலை விளக்கமே நிரூபித்துக் காட்டியது. ஆனாலும் இப்பிரமுகர்கள்மீது கட்சித் தலைமை பாரதூரமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயரளவுக்கு எடுத்த நடவடிக்கையிலும் இரட்டை அளவுகோல்களைப் பின்பற்றியுள்ளது.

 

எர்ணாகுளம் மாவட்டக் கமிட்டி மணிசங்கரின் விளக்கத்தைப் பரிசீலித்து, அவருக்கு "எச்சரிக்கை' விடுப்பதாக அறிவித்தது. இம்மாவட்டக் கமிட்டி, கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான கோஷ்டியின் ஆதிக்கத்தில் உள்ளது.

 

மறுபுறம், தினேஷ்மணியின் விளக்கத்தை மாநிலக் கமிட்டி பரிசீலித்து, அவரை மன்னிப்பதாக அறிவித்துள்ளது. மாநிலக் கமிட்டியோ, மாநிலச் செயலாளர் பினாரயி விஜயன் தலைமையிலான கோஷ்டியின் ஆதிக்கத்தில் உள்ளது. அச்சுதானந்தன் கோஷ்டியிலிருந்து விலகி விஜயன் கோஷ்டிக்கு தினேஷ் மணி வந்துள்ளதால், அவருக்குச் சாதகமாக இந்த "நடவடிக்கையை' மாநிலக் கமிட்டி எடுத்துள்ளது.

 

ஒரே வகையிலான துரோகத்துக்கு, மாவட்டக் கமிட்டியில் எச்சரிக்கை; மாநிலக் கமிட்டியில் மன்னிப்பு என இரட்டை அளவுகோல்களுடன் சி.பி.எம். கட்சி எடுத்துள்ள இந்நடவடிக்கைகளைப் பார்த்து கேரள மக்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். கட்சியின் கொள்கைபடி தாங்கள் செயல்படுவதாகவும், ஆனால் விஜயன் கோஷ்டி சமரசப் பாதையில் செல்வதாகவும் புலம்பும் அச்சு கோஷ்டி, இந்த இரட்டை அளவுகோல் விவகாரத்தை வைத்து உட்கட்சித் தேர்தலில் ஆதாயமடைய முயற்சிக்கிறது. துரோகிகளுக்கிடையே கோஷ்டிச் சண்டை புழுத்து நாறும் அதேநேரத்தில், ரிலையன்ஸ் நிறுவனமோ புதிய பேரங்காடிகளைத் திறந்து, சில்லறை வியாபாரிகளின் வாழ்வைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது.


· அழகு