Language Selection

sep_2007.jpg

ஆகஸ்ட்15: போலி சுதந்திரத்தின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஆட்சியாளர்களும் ஓட்டுப் பொறுக்கிகளும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், 1947இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அதிகார மாற்றம்தான் என்பதை விளக்கியும், அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் நாட்டை அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் துரோகத்தனத்தைத் திரைகிழித்தும், மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராட உழைக்கும் மக்களை அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரம் சுவரொட்டிகள் மூலம் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.

திருச்சியில், இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து 14.8.07 அன்று மாலை திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, இந்தியாவை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பு.மா.இ.மு. மாவட்டச் செயலர் தோழர் தண்டபாணி தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களோடு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் நாட்டை அடிமைப்படுத்தியுள்ள ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தியும், மீண்டும் ஒரு சுதந்திரப் போருக்கு அணிதிரள உழைக்கும் மக்களை அறைகூவியும் முன்னணியாளர்கள் உரையாற்றினர்.

 

உசிலம்பட்டியில், ஆகஸ்ட் 15 அன்று மாலை முருகன் கோவில் அருகே ""காலனியாதிக்கத்துக்கு எதிரான விடுதலைப் போரின் வீரமரபைப் பின் தொடர்வோம்! மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான போரை முன்னெடுப்போம்!'' என்ற முழக்கத்துடன் இப்பகுதியில் இயங்கும் வி.வி.மு. பொதுக்கட்டம் கலைநிகழ்ச்சியை நடத்தியது. தோழர் சந்திரபோஸ் தலைமையில் நடந்த இப்பொதுக்கூட்டத்தில் தோழர் நடராஜ், தோழர் நாகராசன், தோழர் மோகன், தோழர் காளியப்பன் ஆகியோர் போலி சுதந்திரத்தைத் திரைகிழித்தும் நாட்டைப் பேரழிவுக்குள் தள்ளிவிட்டுள்ள சர்வகட்சி ஆட்சியாளர்களின் துரோகத்தை அம்பலப்படுத்தியும் சிறப்புரையாற்றினர்.

இறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழு நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சியும் குறிப்பாக, ""செட்டிநாட்டு சிதம்பரம், பட்டினிதாண்டா நிரந்தரம்'' என்ற பாடலும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

 

நாட்டை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழகமெங்கும் இப்புரட்சிகர அமைப்புகள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன.


— பு.ஜ. செய்தியாளர்கள்.