நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாக வேண்டுமா? அதற்கு அன்னிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு! வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? அதற்கும் அன்னிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு! தொழில் நுட்பம், தரமான உற்பத்திப் பொருட்கள், உயரிய சேவை, நிர்வாகத் திறன், ஏற்றுமதிக்கான வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என அனைத்திற்கும் ஒரே சர்வரோக நிவாரணியாகச் சித்தரிக்கப்படுகிறது அன்னிய நேரடி முதலீடு.
ஒரு அன்னிய நிறுவனம், நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெருமுதலாளிகளைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்கினால், அது அன்னிய நேரடி முதலீடு (ஊஈஐ) எனப்படுகிறது. இதற்கு அந்த அன்னிய நிறுவனம் தனது சொந்தப் பணத்தை மொத்தமாக முதலீடு செய்வதில்லை. இந்திய வங்கிகள் மூலம் அன்னிய நிறுவனங்கள் இதற்கான நிதியைப் பெற்றுக் கொள்கின்றன.
""பிரிட்ஜ் ஸ்டோன்'' என்ற ஜப்பானிய டயர் கம்பெனி, அமெரிக்காவின் ""ஃபயர் ஸ்டோன்'' டயர் கம்பெனியை 1988இல் கைப்பற்ற அமெரிக்க நிதி நிறுவனங்கள் உதவின. இதேபோலத்தான், அமெரிக்க என்ரான் நிறுவனம் மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையம் தொடங்க இந்திய வங்கிகள் 40%க்கு மேல் நிதியுதவி செய்தன. சிறிது காலத்திற்குள் என்ரான் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் நடத்திய மோசடியின் காரணமாக திவாலாகி விடவே, அதன் துணை நிறுவனமான தபோல் மின் உற்பத்தி நிலையமும் இழுத்து மூடப்பட்டது. என்ரானுக்கு நிதியளித்த இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட கடன் சுமை, இந்திய மக்களின் தலையில் சுமத்தப்பட்டது.
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, இந்திய வங்கிகளிடமிருந்து நிதியைப் பெற்று இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரால் சூறையாடியது என்ரான். இப்படித்தான் பல அன்னிய நிறுவனங்கள் இந்திய வங்கிகளிடமிருந்து நிதியைப் பெற்று இந்தியாவில் முதலீடு செய்கின்றனவே தவிர, அன்னிய நாட்டிலிருந்து கோடி கோடியாய் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து இங்கு முதலீடு செய்து தொழில் தொடங்குவதில்லை. ஆனாலும் இந்தப் பித்தலாட்டத்தை மூடி மறைத்துவிட்டு இதுவும் அன்னிய நேரடி முதலீடுதான் என்று தாராளமய தாசர்கள் துதிபாடி வரவேற்கின்றனர்.
""உலக வங்கியிடம் கடன் வாங்கினால் நாம் வட்டியோடு அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது; ஆனால், அன்னிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை நாம் அசலையோ, வட்டியையோ திருப்பிச் செலுத்தப் போவதில்லை. அப்படியிருக்க, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ள அன்னிய நேரடி முதலீட்டை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?'' என்று ஏகாதிபத்திய எடுபிடிகள் நியாயவாதம் பேசுகின்றனர்.
ஆனால், ஒரு தொழிலில் நுழையும் அன்னிய நேரடி முதலீடானது காப்புரிமைத் தொகை, இலாப ஈட்டுத் தொகை, தொழில்நுட்பக் கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் எனப் பல்வேறு வடிவங்களில் உள்நாட்டுச் செல்வத்தை உறிஞ்சிக் கொழுக்கிறது. மகாராஷ்டிராவில் என்ரான் நிறுவனம் தபோல் மின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்பே திறன் கட்டணம் என்ற பெயரில் மாதமாதம் ரூ. 95 கோடி வீதம் விழுங்கியது. இப்படி பல்வேறு அன்னிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் பல வடிவங்களில் உறிஞ்சுவதால் உள்நாட்டின் கையிருப்பான அன்னியச் செலாவணி வெகு விரைவில் கரைந்து விடுகிறது. இவ்வாறு காலியாக்கப்படும் அன்னியச் செலாவணியின் மதிப்பு, அன்னிய நேரடி முதலீட்டை விட அதிகமாக இருந்தால், அது நாட்டின் வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா?
ஆப்பிரிக்க நாடுகளில் நுழைந்த அன்னிய நேரடி முதலீடு இதைத்தான் செய்துள்ளது. போஸ்ட்வானா நாட்டில் 19952003 காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 4243 கோடி ரூபாய். ஆனால் இலாப ஈட்டுத் தொகை, தொழில் நுட்பக் கட்டணம், ஆதாயப் பங்கு முதலான வடிவங்களில் வெளியேறிய உள்நாட்டு மூலதனமோ ஏறத்தாழ 25,294 கோடி ரூபாய்! காங்கோ நாட்டில் அதே காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 7,303 கோடி ரூபாய். வெளியேறிய மூலதனமோ 12,478 கோடி ரூபாய். ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல; தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள பிரேசில் நாட்டிலும் இதுதான் நடந்தது. அந்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு பெருகப் பெருக, அந்நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பும் கரைந்து கொண்டே போனது. 1993இல் பிரேசிலை விட்டு வெளியேறிய உள்நாட்டு மூலதனம் ஏறத்தாழ ரூ. 148 கோடியாக இருந்தது. 1998இலோ இது ரூ. 28,000 கோடியாக உயர்ந்தது. (ஆதாரம்: க்Nஇகூஅஈ அறிக்கை, 2005)
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின்படி, ஏறத்தாழ 300 அன்னிய நேரடி முதலீட்டு நிறுவனங்களால் இந்திய அரசுக்குக் கிடைத்த வருவாயை விட, அந்நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டணம், மூலப்பொருள் இறக்குமதி முதலானவற்றுக்காகச் செலவிடப்பட்ட அந்நியச் செலாவணியே அதிகமாக உள்ளது. இவ்வாறு நாட்டின் செலாவணி இருப்பைக் கரைக்கும் நிதிச்சேவை, தொலைத் தொடர்பு, அடிக்கட்டுமான துறை, மின்சக்தி, சில்லறை வணிகம் முதலான துறைகளிலேயே பெருமளவு அன்னிய மூலதனம் நுழைகிறது.
அன்னியச் செலாவணி இருப்பைப் பலவழிகளில் அபகரிப்பதோடு அன்னிய நேரடி முதலீடுகள் நின்று விடுவதில்லை. மோசடிக் கணக்கு வழக்குகள் மூலம் ஒரு நாட்டில் முதலீடு செய்த மூலதனத்தையே அவை படிப்படியாகக் கடத்திச் சென்று விடுகின்றன. மேலும், இத்தகைய மோசடி கணக்கு வழக்குகளால் உலகெங்கும் பல நாடுகளில் கோடிகோடியாய் வரி இழப்பையும் ஏற்படுத்துகின்றன. பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளின் மோசடி தில்லுமுல்லு கணக்கு வழக்குகளால் அமெரிக்காவுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 1,20,000 கோடிக்கு மேல் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு புலம்புகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் எந்த நாட்டில் முதலீடு செய்தாலும், அந்நாட்டு அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைக் குறைக்கவும் ஏய்க்கவும் தாங்கள் அடைந்த இலாபத்தைக் குறைத்துக் காட்டுவதென்பது இன்னுமொரு மோசடி உத்தி. உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏகபோக நிறுவனமான எக்சான், தென்னமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வரியே செலுத்தியதில்லை. ஏனென்றால், அந்நிறுவனத்துக்கு அங்கே சல்லிக் காசு கூட இலாபம் கிடைக்கவில்லையாம்! அப்புறம் எதற்காக எக்சான் நிறுவனம் பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி தொழில் நடத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கக் கூடாது. அது, சிலி நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாவதைத் தடுத்து விடும்!
இவை ஒருபுறமிருக்கட்டும். நேரடி அன்னிய முதலீடுகள் புதிதாக எந்தத் தொழிலையும் உருவாக்காமல், ஏற்கெனவே ஒருநாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்றி பெயரை மட்டும் மாற்றிக் கொள்கின்றன. அல்லது ஒரு நாட்டில் ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களை முற்றாக அழித்து விட்டு தனது தொழில் ஆதிக்கத்தை நிறுவுகின்றன. தமிழகத்தில் காளிமார்க், மாப்பிள்ளை விநாயகர் முதலான உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை ஒழித்துக் கட்டிவிட்டு ஆதிக்கம் செய்யும் கோக்கும் பெப்சியுமே இதற்குச் சான்று கூறப் போதுமானது.
அன்னிய முதலீடுகளால் வேலை வாய்ப்புப் பெருகும் என்பது அப்பட்டமான புளுகைத் தவிர வேறில்லை. ஏனெனில், இவ்வகை முதலீடுகள் பெரும்பாலும் நிதி நிறுவன முதலீடுகளாக பங்குச் சந்தை சூதாட்ட முதலீடுகளாகவே இருப்பதால், பெருமளவில் வேலைவாய்ப்பை உருவாக்க அடிப்படையே இல்லை. அடுத்து, சேவைத் துறையிலும் உற்பத்தித் துறையிலும் கணிசமாக நுழைந்துள்ள அன்னிய முதலீடுகள் நேரடி வேலைவாய்ப்பை உருவாக்காமல், ஒப்பந்தக்காரர்கள் மூலமே வேலைகளை முடித்துக் கொள்கின்றன. வேலை வாய்ப்பை உருவாக்குவதைவிட, தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றியும் கைமாற்றியும், ஆட்குறைப்பு செய்தும் இலாபத்தைச் சுருட்டுவதிலேயே அன்னிய நிறுவனங்கள் குறியாக உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையால், பல்லாயிரம் கோடிக்கும் மேல் அன்னிய முதலீடுகள் வெள்ளமெனப் பாய்ந்தும் கூட, அவை உருவாக்கியுள்ள வேலை வாய்ப்பு மிக அற்பமானதுதான் என்ற நடைமுறை உண்மையே இதை நிரூபித்துக் காட்டுகிறது.
""அதெல்லாம் இருக்கட்டும்; மும்பை பங்குச் சந்தை 15,000 புள்ளிகளைத் தாண்டி புதிய உயரத்துக்குத் தாவுகிறது பாருங்கள். அன்னிய முதலீடுகளால் இந்தியப் பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகிறது பாருங்கள்'' என்று ஏகாதிபத்திய எடுபிடிகள் உபதேசிக்கின்றனர்.
ஆனால், அதே மும்பை நகர் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்திலும் ஆந்திராவிலும் கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்ட சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 500ஐத் தாண்டிக் கொண்டிருக்கிறது. மும்பை நகரில் மூடப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 3000க்கும் மேல் சென்றுவிட்டது.
இந்த உண்மை நிலவரங்களையெல்லாம் மூடிமறைத்துவிட்டு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு எல்லா ஓட்டுப் பொறுக்கி அரசாங்கங்களும் அன்னிய முதலீடுகளை போட்டி போட்டுக் கொண்டு வரவேற்கின்றன. அன்னிய முதலீடுகளால் வளர்ச்சி பெருகிறது; கேழ்வரகில் நெய் வடிகிறது என்று கோயபல்சு பாணியில் புளுகி வருகின்றன. நாட்டைப் பேரழிவுக்குள் தள்ளி விட்டுள்ள அன்னிய முதலீடுகளையும் அதன் எடுபிடி ஆட்சியாளர்களையும் இன்னமும் சகித்துக் கொண்டிருந்தால், நாளைய வரலாறு நம்மைத்தான் இகழும்.
· தனபால்