கத்தர் இயக்கம் தன்னைப்பற்றி இப்படித்தான் சொல்லிக் கொண்டது.
நமது பெயர் புரட்சி !
நமது பணி புரட்சி!
நமது வாழ்க்கை புரட்சி !
எதிலும் புரட்சி !
எங்கும் புரட்சி !
இந்திய வரலாற்றில் புரட்சிகர இயக்கங்களின் முன்னோடிகளில் ஒன்று கத்தர் இயக்கம். இந்த இயக்கம் வட அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய புரட்சியாளர்களால் முதல் உலகப் போர் கால கட்டத்தில், 1913ம் ஆண்டில் துவங்கப்பட்டது. உலகெங்கும் தொடங்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களில் மிக முக்கியமான இயக்கம் இது. அந்த நாட்களில் இந்திய மக்களை உலகப் புரட்சிக்கு அறை கூவி அழைத்தது. ஒழிவும் மறைவும் இன்றி கம்யுனிசம் ஒன்றே தீர்வு என்று பிரகடனம் செய்தது.
பிற தேசிய விடுதலை இயக்கங்களில் இந்த இயக்கம் மிகவும் வேறுபட்டு எதிர்வரும் கம்யுனிச புரட்சியை அறை கூவி அழைத்தது. சொல்லிலும் செயலிலும் புரட்சியைப் பிரகடனம் செய்தது.
வட அமெரிக்காவில் வாழ்ந்த பெருவாரியான பஞ்சாபியர்கள் இந்த இயக்கம் தொடங்கவும் அதனை இந்திய மண்ணில் வேர் ஊன்றவும் பாடுபட்டனர். வட அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்கள், கம்யுனிச புரட்சியாளர்கள், தொழிலாளர்கள், சிப்பாய்கள் இந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட்டனர். பெரும் படைகளையும் திரட்டினர். கட்டுக்கோப்பாக இயங்கிய இந்தக் கட்சியின் கிளை இந்தியாவிலும் தொடங்கப்பட்டு ஆயதப் படைகளையும் ரகசிய இயக்கங்களையும் திரட்டி ஆங்கில படைகள் மீது தாக்குதல் தொடுத்தனர்.
ஆயுதப் புரட்சி மட்டுமே உழைக்கும் மக்களின் விடுதலையை கொண்டு வரும் என்ற கருத்தில் தெளிவாக இருந்த இந்த இயக்கம் பஞ்சாபில் பல ஆயுதம் தாங்கிய எழுச்சிகளை நடத்தியது.
மாவீரன் பகத் சிங்கின் உணர்வும் ஊக்கமும் இந்த அரசியல் இயக்கத்தில் இருந்துதான் தோன்றியது. அவரது உறவினர்கள் பலர் இந்த இயக்கத்தில் செயல் பட்டு வந்தனர். தன்னை ஒரு புரட்சியாளனாக மாற்றியது இந்த கட்சிதான் என்று பகத் சிங் கூறியுள்ளார்.
பின்னாளில், இந்த இயக்கம் கடும் அடக்குமுறைகளின் கீழ் ஒடுக்கப்பட்ட போதிலும் ஒரு முறையான இந்திய கம்யுனிஸ்டு கட்சி தொடங்க ஊக்கம் அளித்ததில் இந்த இயக்கம் மிகவும் முக்கியமானது.
இந்த இயக்கத்தின் நூற்றாண்டு விழா (1913-2013)உலகம் எங்கும் உள்ள நாடு கடந்து வாழும் இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அது முளைவிட்ட அமெரிக்கா, சிறப்புடன் செயல்பட்ட கனடா, பெரும் ஆதரவாளர்களைக் கொண்டிருந்த இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் சிறப்பு மாநாடுகள், நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு வருகின்றன. நாடு கடந்து வாழும் இந்திய தொழிலாளிகள், மாணவர்கள், அறிவாளிகளின் பங்கு என்ன என்று இந்த சிறப்புக் கூட்டங்களில் விவாதித்து வருகின்றனர்.
இந்திய அரசின் கணக்கில் இன்னும் "பகத் சிங் ஒரு கிறிமினல்" என்றுதான் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊக்கம் அளித்த இந்த பெரும் இயக்கத்தை இந்திய அரசு இருட்டடிப்பு செய்வது நாம் எதிர் பார்க்கும் விஷயம் தான்.
துரோகங்களுக்கு பெயர் போன இந்தியாவின் இடது வலது போலிக் கம்யுனிஸ்டு கட்சிகள் இந்த இயக்கத்தின் மாட்சியையும் இந்தியப் புரட்சியின் நீண்ட வரலாற்றையும் எப்போதும் இருட்டடிப்பு செய்து வந்திருக்கின்றன. அது போலவே, இந்த இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையும் புறக்கணித்து விட்டனர்.
புரட்சியின்பால் பற்றும், ஊக்கமும் கொண்ட நாடு கடந்து வாழும் தொழிலாளர்கள், மாணவர்கள், இந்தியப் புரட்சியின் ஒரு நீண்ட பாரம்பரியத்தை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. இங்கிலாந்தில் கத்தர் கட்சி (Ghaddar Party) நூற்றாண்டுவிழாவை இந்திய உழைப்பாளர்கள் சங்கத்தின், பர்மிங்காம், இல்போர்ட், டர்பி கிளைகள் நடத்திவந்தன. கூட்டங்களில் பகத்சிங்கின் சகோதிரி மகனும் பேராசியருமான ஜக்மோகன் சிங், வெஸ்ட்மினிஸ்டர்சட்ட கல்லூரி பேராசியர் ராதா டிசோசா மற்றும் பலர் உரை ஆற்றினார்கள். பகத்சிங் பற்றி பஞ்சாபி மொழியில் நூல்கள் வந்தபிறகு 1931 இல் பகத்சிங் பற்றி தமிழில்தான் பிற மொழிகளில் வந்த முதல் நூல் என பேராசியர் ஜக்மோகன் உரையாடலின் போது குறிபிட்டார். கன்வல்தலிவல் அவர்களின் ஓவிய கண்காட்சியும், கவிதை நிகழ்வுகளும் நடந்தன.