திரை மறைவில்
இது வரை நடந்தேறிய
அரசியல் நாடகங்கள் முதல் முறையாக
மக்கள் முன்னிலையில் காட்டப்படுகிறது.......
களைகட்டியிருந்த
ஆடித்திருவிழாவோடு ஆரம்பித்துள்ள
தேர்தல் திருவிழாக்கள் ரொம்பவும் தான்
கலஸ் புள் காட்சிகளாக காட்டப்படுகிறது........
நடந்து முடிந்த யுத்தத்தின்
காய வடுக்கள் காயுமுன்
புற்றீசல்கள் போல் வடக்கு முழுக்க
பறந்து திரியும் வர்ணக்கொடி வாகனங்கள்.........
சொல்லி முடிந்த கதை பாதி
சொல்ல மறந்த கதை பாதியாக
கிழிந்துபோன வாழ்வு பாதி
உருக்குலைந்த உருவங்கள் பாதியாக
தொலைந்து போனவர்களை
தேடித்தேடி அலுத்துப்போனவர்கள் பாதி
சிறைக்குள்ளே வாழ்பவர்கள் வருகையை
வழி பார்த்து காத்துக்கிடப்பவர் மீதியாக
ஓட்டமும் நடையுமாக
ஓலமும் அவலமுமாக
கடிகார முட்கள் போல
நிற்காது ஓடிக்கொண்டிருக்கும்
நம்மவர் முன்னால் நடைபயிலும்
நாடகக்காரர்களின் விளக்கங்களும் பரிந்துரைகளும்
தேர்தல் படம் ஓட்ட ஒத்திகைகளும்
ஓரம் கட்டலுமாக அமோகமான ஆர்ப்பரிப்புக்கள்........
ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை
ஆளுமென்ற முழக்கம் ஒருபுறம்
ஆளும் அரச (ராஜ)பக்ஸ பரம்பரை
வடக்கையும் தாமே ஆளுமென்று மறுபுறம்........
கண்ணாமூச்சி ஆட்டத்தோடு
கூட்டம் கூட்டமாக வீதி வலம்
பட்டுவேட்டிகளின் படையெடுப்பு
பகுதி பகுதியாக வயல்களில் கிரி வலம் .............
ஜோரான கைதட்டல்கள்
ஆடுரா ராமா ஆடுரா ராமா
ஏமாந்து பழக்கப்பட்டுப்போன நம்மவர்க்கு
ராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டலென்ன?
மாற்றம் ஒன்றுமில்லை
மறுபடியும் மறுபடியும் அடிமைகளாய்
புதிய எஜமானர்களுக்கு நாங்கள் தயார்
என்று காத்திருக்கிறார்கள் மக்கள்................
*சந்துரு*