தாஜ்மகால்
செருக்கிய சிற்பிகள் வாழ்வை
யாரும் சிந்திக்கப்போவதில்லை,
காதலுக்கு நினைவுச்சின்னங்கள்
யார் எழுப்பினர்
தமிழினமே தமிழகமே !
இன்று பன்நாட்டு நிறுவனங்களின்
பணவெறிக்கு,
இடிந்துவிழும் கட்டிடங்கட்குள்
சிதைக்கப்படும் இளம் காதலர்களும்,
கூடிவாழ்ந்த கூடுகள்
பிய்த்தெறியப்பட்டு திக்கொன்றாய்
கொட்டிய குண்டில் சிதறிச்
சிதைந்தவலி இன்னம் ஈழவன்னிமண்ணில்,
நீ ஈழத் தமிழனுக்காய்
உணர்ச்சிபொங்குவதை நிறுத்திக்கொள்
வாழத்துடிக்கும் உயிர்களுக்கு
உரக்கக் குரல்கொடு பார்க்கலாம்!
ஊரையே
எரிப்பதற்காயல்ல வாழப்போனார்கள்
கொழுத்திப்போட்ட
குடிசைகள் என்னையா கேட்டது
இந்தச் சாம்பலை திரு நீறெனத்தந்தால்
சிவ சிவயென்று
நெற்றியில் பட்டையிடுவீர்கள் தெரியும்
கண்ணகிக்கு சிலையும்
காற்சிலம்பு வரலாறும்
பாடப்புத்தகத்தில்
எண்ணற்ற கற்பனைக் காவியங்களுமாய்,
தொப்புள்கொடி உறவு
கூட இருப்பவருக்கு மறுக்கப்பட்டால்,
நாம் தமிழரென
உறுமுவது வெட்கக்கேடு
இளவரசன், திவ்யா
வாழ்வை உடைத்துப்பார்ப்பதுதான்
இனமான உணர்வென்றால்
இராஜபக்சக்களை இனப்படுகொலையாளராய்
சுட்டுவதற்கு முன்பாய்
மனிதராய் எழுவோமா தமிழினம்!!