கொதிக்கும் உலையில் பிளம்பான இரும்பை
அடித்து நிமிர்த்திய தோள்கள்
உயர்த்திக் கையை
அகில உழைப்பவர் உறுதியை- உணர்த்திய தினம்!
ஆலைச்சங்கொலி அதிரமுதல்
துடித்தெழுந்து உழைப்பினை விற்பதே
வாழ்வல்லயென்று-செங்கொடி ஏந்தி
சிக்காக்கோ- விழிப்புறவைத்த தினம்!
உரிமையை பறித்தெடுத்து
மாடாய் வறுமையில் துவழென
ஏழை வியர்வையில் கொழுத்தவர்
நெஞ்சம் பதறிட- எழுச்சிகொண்ட தினம்!
மலைகளைப் பிளந்து
சுரங்கக் கனிமங்கள் குவித்தபோதும்
வேளை உணவுக்கே தவிப்பதோ ?
பார் எழுந்தோமென- முரசறைந்த தினம்!
நேரவரையறையற்று, நிரந்தர ஊதியமற்று
வேலையிழந்தால் வீதியிலெறிவதும்
அடிமையாய் மடிவதும் ஏனோ?
கூடியெழுவோம்!
நீட்டிய துப்பாக்கிகளும்
நிறுத்தென ஆணையிடும் நீதிமன்றும்
மதவெறியை ஊதிப்பெருக்கி
இனங்களைப் பிளப்பதை தகர்ப்போம்!
வாழ்ந்த நிலமும்
வளமாக்கிய மண்ணும் இராணுவப்பிடிக்குள்,
வாழும் உரிமைக்காய்
வீதியில் இறங்கி ஆர்ப்பரிப்போம்!
சிங்களம், தமிழ, முஸ்லிம்
மலையகத்தமிழர்
இனவாத சரித்திரம் உடைத்தெறித்து
மேதினத்தில், எம் செங்கொடி ஏற்றுவோம்!
இரும்புப் பிடிக்குள் சிறைப்பட்டாலும்
அடங்கிப்போகாது,
மேதின தொழிலாளர் கோசத்தின் -மூச்சில்
செங்கொடி அசைந்தாடிப் பறக்கும்!!