அன்பரே..!
நான் திடுக்குற்றுப் பார்த்தேன்.
என்ன அதிசயம் இது..!
பல்கோடி மாந்தர்
அல்லும் பகலுமாய்
தேடுதேடெனத் தேடியும்
எவருக்குமே கிடைக்காத கடவுள்
என்னெதிரே நின்றார் சற்று முன்பு.
நம்பவே முடியவில்லை என்னால்
ஆனாலும் நம்பிப் பார்த்தேன்.
என்னென்னதான் வேண்டும் உனக்கு ..?
கேள்.. கேள்..
நீயே கேள் என்றார்.
எதை.. எதை..
எதனைக் கேட்க என
மலைக்கின்றேன் கடவுளே..!
உந்தன் விருப்பப்படி
உலகிற்கு உன்னால் பொருட்களை
உற்பத்தியாக்கிக் கொடுக்க முடிந்தால்
அவற்றைத்தாரும் ஐயனே என்றேன்.
கடவுள் என்னிடம்
ஒரு பெரிய பொதியை
தூக்கித்தந்தார்.
அன்பொடு அதனை
அள்ளி எடுத்தேன்.
ஆசையுடன் அதனை
பிரித்துப்பார்த்தேன்.
அவை அத்தனையும்
மின்னித் துலங்கித் தமை
என் விரல்களினால் அழுத்து
எனும் சமிஞ்ஞைப் பொத்தான்கள்..!?
அவை ஒவ்வொன்றின் மீதும்
அதிகார நாடுகளின் பெயர்களை
அழகு மிகப் பொறித்திருந்தார் கடவுள்.
யு.எஸ்.ஏ - ரஷ்யா - யு.கே - இஸ்ரேல்
பிரான்ஸ் - சைனா - இந்தியா
பாக்கிஸ்த்தான் - தென்னாபிரிக்கா
கொரியா - ஈரான் இப்படி..,
அவற்றின் பெயர்கள்
இப்போதைக்கு நீண்டிருந்தன.
கடவுளே இவை என்ன
எனக்குப் புரியவில்லையே என்றேன்..!?
ம்.., இவைதான்
இன்றைய புதிய வரம்.
நீ.., விரும்பிய போது
இந்தப் பொத்தான்களை
அழுத்தி விளையாடு.
இவற்றை நீ அழுத்தும் போது
உனது இனமும்
உனை எதிர்க்கும் இனங்களும்
இனங்களை வெறுக்கும் அரசியல்களும்
துடி துடிக்கத் தனக்கு
இரத்த மடை போடும்
என்றார் அந்தக் கடவுள்.
-மாணிக்கம்
24.04.2013