உலகத்தமிழர் பேரவையின் முதலாவது தலைவரும், நிறுவன உறுப்பினருமான கலாநிதி எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாண ஆளுனர் மேஜர்.ஜெனரல் சந்திரசிறீயின் ஆலோசகராகப் பதவியேற்றுள்ளார். அன்று இனத்தின் விடுதலை குறித்து பேசிய கயவர்கள் தமது உண்மை ரூபத்தை மக்களுக்கு அம்பலப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறான மக்கள் விரோதிகள் இன்னும் மறைந்து இருக்கின்றார்கள். இவர்கள் அமெரிக்க, ஐரோப்பிய, நோர்வே, இந்திய அரசுகளின் நலன்களின் பின்னால் செயற்படுகின்றார்கள்.
போராட்டத்திற்கு அணிதிரண்ட போராளிகளினதும், இறந்த மக்களின் தியாகம் வீணாகக் கூடாது. மக்களின் உரிமைக்கான போராட்டம் தொடரப்பட வேண்டும். போராட்டத்தின் வடிவம் மாற்றம் பெற்றுள்ளது. மாற்றம் பெற்ற போராட்டம் எவ்வித மாற்றுதலுக்கும் உள்ளாக்காது பழைய பாதையில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறுவோர் சரியான பாதையை தெரிவு செய்ய தயாரில்லை என்பதையும் அவர்களது வர்க்க நலனும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.
எந்த சக்திகளை எமது போராட்டத்தினை அழிந்தனவோ, அந்த சக்திகளான இந்திய, மேற்கு தேசங்களின் தயவை நாடும் அரசியலை தொடர்கின்றனர். புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் மேற்கு தேசங்களை அணுகும் நோக்குடன் கனவான் (லொபி) அரசியலாகவும், அன்னிய தேசங்களின் வெளிநாட்டமைச்சுகளை நோக்கியும், உளவு நிறுவனங்களின் சொற்படி நடப்பதற்கும் ஏகபோக தமிழ் தலைமைகள் எப்போதும் தயாராகவே இருக்கின்றது.
ஏகாதிபத்திய நோர்வே:
பல ஆயிரக்கணக்கான மக்களின், போராளிகளின் உயிராலும் வளர்ந்த தமிழ் மக்களின் போராட்டம், தவறான அரசியல் பாதையாலும், வழிமுறைகளாலும், எதிரிகளாலும் வீழ்த்தப்பட்டது. வீழ்த்தப்பட்ட போராட்டம் தளத்தில் (ஈழ மண்ணில்) தொடர்ந்தும் போராடக் கூடிய வேரைக் கூட விட்டு வைக்கவில்லை. முழுமையாக ஆணிவேரையே தளத்தில் இருந்து அகற்றிவிட்டுள்ளது. தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டத்தினையோ, தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தையே நடத்த முடியாதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. எமது போராட்டத்தின் சிதைவிற்கு போராட்டத்தின் அரசியல் தெரிவும், புலிகள் அரசியல் நடத்தைகளும் பிரதான காரணமாகும். அரசியல் நடத்தை என்கின்ற போது பல விடயங்களை உள்ளடக்கின்றது. இதில் பிரதானமாக அரசியல் எதிரிகளின் பற்றிய போதிய அரசியல் பார்வை பற்றாக்குறை இருந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏகாதிபத்திய நாடான நோர்வே 1992களில் இருந்து புலிகளுடன் உறவை வைத்துக் கொண்டு வந்துள்ளது. நோர்வேக்கும் புலிகளுக்குமான உறவானது அகதி அந்தஸ்து கோரி நோர்வேயில் தஞ்சமடைந்தவர்களின் உண்மையான குடும்ப, பெயர் விபரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு தொடரப்பட்ட உறவாகும். புலிகளே அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்தவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு தூதரக ஊழியர்களை அழைத்துச் சென்று விபரங்களை திரட்ட உதவி செய்தனர்.
இந்த தொடர்புகளின் தொடர்ச்சியாக ஒஸ்லோ-பலஸ்தீன ஒப்பந்தத்தின் மூலம் பிரபல்யமாகவிருந்த நோர்வே, பேச்சுவார்த்தையில் புலிகளினாலும், ஐரோப்பிய ஒன்றியத்தினாலும் வரவேற்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்வுப்பிரேரணைகளை கொண்டு கிட்டு தளத்திற்கு சென்றார். கிட்டு (16.01.93) எடுத்துச் சென்றபோது நடுக்கடலில் கைது செய்யப்பட்டு தற்கொலையில் இறந்த போதும் முற்றுப்பெறவில்லை. தொடர்ந்தும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து வந்திருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் மத்தியத்துவம் வகித்த சமாதானப் பிரியர்கள் யுக்கோஸ்வாவியா, ஈராக் மீது குண்டுமழை பொழிவதற்கு உதவியாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று ஆப்கான், லிபியா, மாலி என்று ஆக்கிரமிப்பிற்கு துணைபோகின்றவர்கள் தான் இவர்கள்.
உதவி செய்வது- ஊதாரியாக்குவது- அழிப்பது:
பேச்சுவார்த்தைக்கு வருபவர்களை விலைக்கு வாங்கவும் தயங்கமாட்டார்கள் என்பதும் பலஸ்தீன அனுபவங்களில் இருந்து பெறமுடிகின்றது. பலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆனார்கள் என்பதையும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். இரண்டு மக்கள் குழுக்களின் பிரதிநிதி தலைவர்கள் உறுப்பினர்கள் குடும்ப நண்பர்கள் ஆனார்கள். ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாகி அவ்வவ் இனங்களின் உயர் குடி அந்தஸ்துக்கு ஏற்றவாறாக நடந்து கொள்கின்றனர். இவர்கள் இனம், மொழி, மதம் என்ற பேதங்களை விட்டுவிட்டு தொழில் கூட்டாளிகள் ஆகினர்.
இதே போலதான் தாய்லாந்து சென்ற புலிகளின் பிரதிநிதிகளை ஊதாரிகளாக்கினர். பேச்சுவார்த்தையில் கலந்த கொண்டவர்களுக்கு கைநிறைய பணமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனையே திரு பாலசிங்கம் அவர்கள் மாவீரர் தினத்தில் அம்பலப்படுத்தியிருந்தார். திரு பாலசிங்கம் அம்பலப்படுதியதை இன்று அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இதேபோல் மேற்குலகம் கொடுக்கின்ற அழுத்தங்களுக்கு இசைந்து கொடுக்காத பட்சத்தில், எல்லாவிதமான மாற்று நடவடிக்கையையும் எடுப்பார்கள் என்பதினை விடுதலைப்புலிகளை தடைசெய்ததில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
தமிழ் அமைப்புக்கள்:
அரசிற்கு எதிரான போராட்டங்களை நடத்துவது எவ்வாறு என்று தெரியாது இருக்கின்றனர் என்று சொல்ல முடியாது. இன்றைய அரசியல் சக்திகள் ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டே எதிர்ப்பு அரசியலை மேற்கொள்கின்றனர். புலிகளும், புலிகளின் போராட்ட வடிவமும் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது புலிக்கொடிகளை தூக்கிப் பிடிப்பதற்கு செலவிட்ட சக்தியை அரசியலை முன்வைப்பதில் தவற விட்டார்கள். போராட்டத்தின் போது புலிக்கொடி எங்கும் இருந்து என்பது அகவிருப்பின் காரணியாக இருந்தது. அரசியல் கோரிக்கைகளும், நியாயங்களும் சர்வதேச பொதுசனங்கள் முன் கொடிகளை மாத்திரம் முன்னிறுத்துவதன் ஊடாக மறைக்கப்பட்டன, மறைக்கப்படுகின்றன. இந்த அவலம் ஒரு புறமிருக்க
1.தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பிற்கு யார் தலைவராவது என்ற பிரச்சனை
2. சொத்துக்களை யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சனை
இவற்றிற்கு நடுவே மக்களின் உரிமைக்காக போராடுவதாக பாசாங்கு செய்யும் அரசியல் இருக்கின்றது. இந்த அரசியல் சதிராட்டத்தில் மழுங்கடிக்கப்படுவது மக்களின் உரிமைப் போராட்டமே.
எல்லாளன் படை எச்சரிக்கை:
எல்லாளன் படைப்பிரிவு புலிகளின் முக்கிய செயற்பாட்டாளர்களை ஒதுங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. “இதன் முதல் கட்டமாக தன்னை விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொள்ளும் இரும்பொறை, குழப்பங்களின் காரணியாக கருதப்படும் குட்டி என்கிற விடுதலை, நிதிப்பொறுப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தி உள்ள ஈரோஸ் முரளி, ரூட் ரவி, தனம் ஆகிய ஐவரையும், ஆலோசகராக இருந்து குழப்பங்களை விளைவிக்கும் தமிழ்நெட் ஜெயச்சந்திரனையும் தேசியச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். (http://nerudal.com/nerudal.54214.html")
இவர்கள் நீங்கள் நினைக்கும் போல் சாதாரணமானவர்கள் அல்ல. மேற்கு நாட்டு குடியுரிமை பெற்றவர்களாகவும், மொழிவளமும், சொத்துவளமும், அன்னிய உளவு நிறுவனங்களின் பின்புலம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவை மாத்திரம் இல்லை இவர்கள் தாயகத்தில் எவ்விதத்திலும் தமது காலை பதிக்கும் தேவையும் அற்றவர்கள்.
கடந்த காலத்தில் மூழ்கிக்கிடப்பதை விடுத்து, அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு அவசியமானது. துரோகத்தனங்களை அம்பலப்படுத்துவது, பாடங்களை கற்றுக் கொள்வது, தவறுகளை திருத்திக் கொள்வது, புதிய தேடலிலைக் கொண்ட பாதையில் பயணிப்பதாகும்.
நீங்கள் எத்தனை படைகளையும் உருவாக்கலாம். ஆனால் மக்களை அவர்களின் சொந்த காலில் நின்று தமக்காக போராட வழி காட்டாவிடின், நீங்களும் தலைவர் போல துரோகக் கூட்டத்தால் கொல்லப்படுவீர்கள்.
முள்ளிவாய்காலின் பின்னர் சொத்துக்களுக்கும், புதிய தலைமைப் போட்டிக்கும் பருதியைப் போட்டுத்தள்ளினார்கள். வினாயகத்தை பருதியின் கொலையுடன் சம்பந்தப்படுத்தினார்கள். புலிகள் பழைய பாணியில் தமக்கு எதிராக வருபவர்களை அழிப்பதில் தயங்கம் காட்டப்போவதில்லை என்பதனை தொடரும் படுகொலைகளும், மோதல்களும் பறைசாற்றுகின்றன.
இவர்கள் மேற்குலக பிரஜைகளாக இருப்பதனால், இவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு உள்ளது. இதனை விட ரோவின் கைவினையை எதிர்க்கொள்ள, இந்த எல்லாளன் படையினால் முடியுமா? இந்த எல்லாளன் படை ரோவை வெற்றி கொள்ளுமா??
இவற்றிற்கு ஒரே வழி மக்களை நம்புங்கள். அவர்களின் வாழ்வின் விடிவிற்க்கான அரசியல் பாதையை தெரிவு செய்யுங்கள்.
முள்ளிவாய்க்கால் சதிக்கு துணையாக புலம்பெயர் தேசத்தில் புலிகளின் உள்ளே இருந்த அன்னிய உளவாளிகளை கண்டுபிடியுங்கள், அம்பலப்படுத்துங்கள்.
காட்டுப் பகுதிக்கு நகர்வதே கெரில்லா குழுவிற்கு பாதுகாப்பான இடம். இதனைவிடுத்து கடலுக்கு நகர்த்திய உளவுகளின் சதியை வெளிக் கொண்டு வாருங்கள். அன்னிய தேசங்களின் சதியினை ஏன் முன்னமே கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மக்கள்சார் நலன் அரசியலில் இருந்து அம்பலப்படுத்துங்கள்.
-கௌரிபாலன் 18/01/2013