யாழ்மண் வந்த உறவுகளை
அழைத்துக் காலாறியெம்
வாழ்வைக் கதைத்து
ஓரு பிடி சோறுண்ணக்
கேட்கமுடியா பாசிசப்பிடிக்குள் நாம்,
காலமொருநாள்
கூடியிருக்கும் நாளைத்திறக்கும் தோழர்களே!
சம உரிமையென்பது
ஆட்சியாளர் இருப்புக்கே இடியல்லவா
எப்படி விடுவான்
கழிவு எண்ணையை வீசுவான்
பையில் மூடிய கல்லால் எறிவான்
லலித்,குகனை கடத்திப்போவான்
சிங்களவர் தமிழர் முஸ்லிம் மலையகமக்கள்
மோதினாலல்லவா மிதிக்கலாம் அவன்
உழைப்பவர் குரலுக்குள்
இன மதம் கடந்து உரிமைக்குரலே
இரத்தத்தில் ஊறிக்கிடக்கிறது
இது,
எமை அடக்குபவனுக்குத் தெரியும்.
அவர்கள் விதைத்த இனவாதம்
அறுதிப் பெரும்பான்மை
வாக்கு அறுவடையாகிப்போய்
இனியொருக்கால்
வீழ்ந்து சரிவதை எப்படி அனுமதிப்பான்
வடக்குக் கிழக்கிற்கு சுற்றுலா வரலாம்
வணக்கத்தலங்களை தொழுது திரும்பலாம்
ஆனால்,
இராணுவ இடருக்குள் கிடக்கும்
மக்களை
சுதந்திரக்காற்றை சுவாசிக்க விடுவென்றால்
ஓமந்தை கடப்பது கேள்விக்குறியாகும்
தீபமேற்றினால் கைது
தெருவிறங்கிக் கோசமிட்டால் மிரட்டல்
நீதியை எழுதினால் சூடு
ஊதியம் கேட்டால் கண்ணீர்ப்புகைக்குண்டு,
உரிமையைக்கேட்டால் பயங்கரவாதம்
ஒன்றுபட்டெழுந்தால் அன்னியத்தலையீடென்றால்,
சர்வ வல்லமையும் திரட்டிய
சர்வாதிகாரத்தில் அடங்கிக்கிடப்பதா
தேசப்பற்று..?
மீண்டெம் தேசம் விடிவதும்
ஆண்டெமைப் பிளந்தவர் சரிவதும்
இலங்கையில் எழுதப்படும் கிட்லர் அரசாட்சிக்கு
சம உரிமை இயக்கம் மாற்றைத் திறக்கும்
-16/01/2013