இறங்கிப்பார் தெருவில்
நெஞ்சில் ஈரமாவது ஊறும்
ஏங்கும் சனத்தின் குரல்கள் எழுந்தால்,
தூங்காதிருக்கும்
கழுகார் முழிகளில்
பொறாமைப் பொறிகள் தெறிக்கும்
வறுமையையும் பேசும்
வாழ்வின் இடரெல்லாம் கண்டு
வருந்துவதாய் நீலிக்கண்ணீர் சொரியும்
உலகத்தெருவெலாம்
உழைப்பவன் குரலொலித்தால்
தானும் ஒன்றுபட்டதாய் அலறும்
குந்தியிருந்து
ஏழனச்சிரிப்பொடு பிதற்றி முனகும்
ஒற்றைக்கண் கோத்தாவிடமும்,
எஞ்சியகண்
மானுடக்குரல்களை மாட்டிவிடும்
காட்டிக்கொடுப்புக்குமாய்,
ஏழையின் குரலொடு மோதும்
ஆட்காட்டி சொல்கிறது
தான் அறிஞனாம்.....
சூழக்கிடக்கும் நூல்களும்
சுழல்கதிரையும், மடிக்கணனியும்
மூழையில் ஏற்றாது
இறங்கிப்பார் தெருவில்,
உழைப்பவர் கொள்கையும்
ஒன்றுபடும் இனங்களும்
உரிமைக்காய் அணிசேர்வதை
இறங்கிப்பார் தெருவில்
பொருமி வெடித்து
போட்டுக்கொடுக்கும் நெஞ்சத்தில்
ஒருதுளி ஈரமாவது ஊறட்டும்
இறங்கிப்பார் தெருவில்
மாமேதையே
“மக்களிற்குப் பயன்படா அறிவு
அணு உலைக்குச் சமன்”
இறங்கிப்பார் தெருவில்
........சுஜீவன் (06/01/2013)