தேசாபிமானத்தால் மரத்துப்போன தெற்கிற்கு யாழ்ப்பாணம் என்பது அன்று போல் இன்றும் புலிகளின் முகாம் தான். அங்கிருக்கும் இராணுவம் மிருகத்தனமாக செயல்பட்டதும், செயல்படுவதும் 'தமிழர்"களுக்கு எதிரானது என்பதால் அது நியாயமானதாகும்." என்ற கருத்தியல் மாயையில் சிக்கியிருக்கும் தெற்கு மக்களை கொஞ்சம் தடடிக் கேட்போம்.
கடந்த 25ம் திகதி யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த இராணுவம் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் பேயாட்டம் ஆடியது உங்களுக்குத் தெரியும். இவ்வாறான சம்பவங்கள் தெற்கிலிருந்து வெளிவரும் 'தேசாபிமான பத்திரிகை"களுககு செய்தியாகத் தெரிவதில்லை....
27ம் திகதி மாலை யாழ். பல்கலைக்கழகத்துக்குள் 'விளக்கேற்றும்" நிகழ்வொன்று நடப்பதாக அறிந்த ராஜபச்ஷ அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரிய ராணுவமும், கோடாபய ஏவிவிடும் வரை காத்திருந்த விஷேட அதிரடிப்படையும் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தன. அங்கே "வீரர்கள்தினம்" அனுஷ்டிக்கப்படுவதாக முதலாளித்து அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு தகவல் கிடைத்ததாம். அதன் பின்னர் தான் பல்கலைக்கழகத்துக்குள் ராணுவம் நுழைந்ததாம்.
பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ராணுவம் மாணவர்களை மிருகத்தனமான தாக்கியது. தகவலறிந்து அவ்விடத்துக்கு வந்த தமிழர் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் பிரதிநிதிகளையும் ராணுவத்தினர் தாக்க முற்பட்டதோடு, உறுப்பினரின் ஊடகப்பிரிவினர் வைத்திருந்த புகைப்படக் கருவிகளை பறித்து நிலத்தில் அடித்து நொறுக்கினர்.
இந்த நேரத்தில் அவர்களது 'தேசாபிமானம்" உச்சத்தை தொட்டிருந்தது. விடுதிகளுக்குள் நுழைந்த 'பழைய நீலோற்பல மலர் வீரர்கள்" தமது தேசாபிமானத்தை காட்டத் துவங்கினார்கள். மாணவ மாணவிகளை மிருகத்தனமாகத் தாக்கினார்கள். இந்தத் தாக்குதலை கண்டித்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீதும் மிருகத்தனமான தாக்குதல் மேற்கொள்ளபபட்டது.
71ப் போலவே 88-89 காலகட்டத்திலும் தெற்கில் கிளர்ச்சிகள் தலைதூக்கின. அவை ஆயுதப் போராட்டங்களாகும். தான் நம்பிக்கை வைத்துள்ள கொள்கைக்காக போராடி ஒருவன் மரணித்து விட்டால், அவனைப் பொறுத்த வரையில் அது ஒரு வீரமரணமாகும். அவன் கொள்கை வீரனாகும். இன்று முன்னிலை சோஷலிஸக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் கொள்கை வீரனாக மதிக்கும் சமன் பியசிரி பர்ணாந்து போன்ற மனிதன், முதலாளித்துவ அரச பொறிமுறைக்கு ஏற்ப வீரனாக இல்லாமலிருக்கலாம். அதேபோல் 'பயங்கரவாதத்துக்கு துணிந்து முகம் கொடுத்த வீரனென ஐக்கிய தேசியக் கட்சி துதிபாடும் ரஞ்சன் விஜேரத்ன போன்ற வலதுசாரி தலைவரை வீரனாக இடதுசாரிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேவேளை அவரவர் கொள்கைகளுக்கேற்ப வீரர்களாக மதிக்கப்படுபவர்களை நினைவு கூறுவதை தடுப்பது ஜனநாயகத்தில் எந்த வகையைச் சேர்ந்தது?
கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வு நடக்கும் போது, அதற்கு எதிரான கோஷங்களுக்கு சார்ப்பானவர்கள் அதனை குழப்புவதில்லை. அதே போன்று 60,000 பேரைக் கொன்ற ஆட்சியாளரான பிரேமதாசவின் நினைவு தினத்தையோ, அதற்கு வழிசமைத்த ஜே.ஆர்.ஜயவர்தனவின் நினைவு கூறலையோ யாரும் குழப்புவதில்லை. தெற்கில் வீரர்களை நினைவு கூறுவதற்குள்ள உரிமை வடக்குக்கு மறுக்கப்படுவது ஏன்? மறுபுறம் பல்கலைக்கழகம் என்பது அதி உயர் கருத்தாடல்களுக்கான திறந்த வெளியாகும். மாணவர்கள் இயற்கையாகவே கடும் போக்கானவர்கள். அவர்கள் அரசியலில் தீப்பொறியைப் போன்றவர்கள்.
தெற்கில் 88-89 போராட்டம் தோல்வியடைந்ததன் பின்னர், வெளிப்படையாக கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் அனுஷ்டிப்பதற்கு ஆரம்பிக்க முன்னர் "என்றாலும் நாங்கள் சிறகடிப்போம்" என்ற தலைப்பில் ஞாபகார்த்த இலக்கிய விழாவென்று றுகுணு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அன்று றுகுணு பல்கலைக்கழகத்துக்கு இருந்த அந்த உரிமை, இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன்? அவர்கள் தமிழர்கள் என்பதனாலா என்று யாராவது கேட்டால் அதற்கான பதில் என்ன?
முதலாளித்துவ அரசாங்கங்களிடம் பதில் இல்லாத கேள்விகளைக் கேட்பதில் எந்தப் பிரயோஜனமும் கிடையாது. எனவே, இனவாத ராணுவத்துக்கு எதிராக அனைவரும் தோழமையுடன் அணிதிரள வேண்டும். அதைத் தவிர வேறு வழி இல்லை.