Language Selection

புதிய ஜனநாயகம் 2007

put_oct-2007.jpg கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, ""தனியார்மயத்தை அனுமதியோம்; அரசுத்துறையைப் பாதுகாப்போம்!'' என்று சவடால் அடித்து அடையாள எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது கேரளத்தில் இலாபமீட்டும் அரசுத்துறை நிறுவனத்தை முடக்கி, வெளிப்படையாகவே தனியார்மயத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கக் கிளம்பிவிட்டது.

 

கேரளத்தின் கொல்லம் மாவட்டம், சாவரா எனுமிடத்திலுள்ளது, கேரள தாதுப் பொருள் மற்றும் உலோக நிறுவனம் (KMML). டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் இந்த அரசுத்துறை நிறுவனம், மாநிலத்தின் இலாபமீட்டும் இரண்டாவது பெரிய அரசுத்துறை நிறுவனமாகும். கடற்கரை மணலை அகழ்வு செய்தல், தாதுப் பொருட்களைப் பிரித்தெடுத்தல், டைட்டானியம் டை ஆக்சைடு இயற்கை நிறமிக் கூறுகளை உற்பத்திச் செய்தல் என அனைத்தையும் கொண்ட ஒருங்கிணைந்த இந்த நிறுவனம், உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

முந்தைய "இடதுசாரி' ஆட்சியில் சுசீலா கோபாலன் தொழிற்துறை அமைச்சராக இருந்தபோது, ரூ.782 கோடி செலவில் இந்த அரசுத்துறை நிறுவனத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டு சட்டமன்றக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, அக்குழுக்களும் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்குப் பரிந்துரைந்துள்ளன. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கூட்டணி அரசும் தொழில்நுட்பக் கூட்டுக்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிட்டு ஆரம்ப ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

 

இப்போது கேரளத்தில் மீண்டும் "இடதுசாரி' கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்த அரசுத்துறை நிறுவனம் விரிவடைந்து வளர்ச்சி பெறும் என்று கேரள மக்கள் எதிர்பார்த்தார்கள். அதிலும், டைட்டானியம் டை ஆக்சைடுக்கு கிராக்கி அதிகரித்துள்ள நிலையில், இந்த அரசுத்துறை நிறுவனத்தை முன்னுதாரணமிக்கதாக வளர்த்தெடுப்பார்கள் என்று பெரிதும் நம்பினார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஐகுகீO) இந்த அரசுத்துறை நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு 10,000 டன் டைட்டானியம் உலோகக் கட்டிகளை (ஸ்பான்ஞ்)த் தயாரிக்கத் திட்டமிட்டிருந்ததால், இடதுசாரி ஆட்சியாளர்கள் தமது கொள்கைப்படி இந்த அரசுத்துறை நிறுவனத்தைக் கட்டிக் காத்து வளர்க்க வாய்ப்புகளும் சாதகமாகவே அமைந்திருந்தது.

 

ஆனால் இந்த எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்துவிட்டு, சி.பி.எம். கட்சிப் பிரமுகரும் தொழில்துறை அமைச்சருமான லெமாரம் கரீம், அந்நியதனியார் முதலாளிகள் கேரளாவின் தாதுவளத்தைச் சூறையாட தாராள அனுமதி கொடுத்துள்ளார். கடந்த மே 17ஆம் தேதியன்று ரஷ்யாவின் ""ரோசோபாரன்'' என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, தனியார்மயக் கொள்ளைக்கு கால்கோள் விழா நடத்தியுள்ளார். இந்த ஒப்பந்தபடி, கேரள தாதுப்பொருள் மற்றும் உலோக நிறுவனத்தின் வளாகத்துக்குள்ளேயே, ரஷ்ய நிறுவனம் டைட்டானியம் உலோக கட்டிகளைத் தயாரிக்கும் ஆலையை ஏறத்தாழ ரூ. 1400 கோடி செலவில் நிறுவும். அரசுத் துறை நிறுவனத்திடமிருந்து இந்த ரஷ்ய நிறுவனம் பகுதியளவுக்குக் கச்சாப் பொருளைப் பெற்றுக் கொள்ளும். மீதியை கேரள கடற்கரையிலுள்ள தாது மணலை அகழ்வு செய்து அள்ளிக் கொள்ளும்.

 

இதுவும் போதாதென ஏராளமான சலுகைகளுடன் டாடா நிறுவனத்தை அழைத்து வந்து, ஆலப்புழை மாவட்டத்திலுள்ள பள்ளிபுரத்தில் øட்டானியம் ஆலையைத் தொடங்கவைத்து, கேரளத்தின் தாதுவளத்தை டாடா நிறுவனம் சூறையாட சி.பி.எம். ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். கடைசியில், டாடா, ரோசோபாரன் ஆகிய இரு தனியார் அந்நிய நிறுவனங்களுக்கு கச்சாப் பொருளையும் தொழில்நுட்பத்தையும் அளிக்கும் கறவை மாடாக கேரள அரசுத்துறை நிறுவனம் மாற்றப்பட்டு விட்டது.

 

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாக "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை. உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி வெளியிட்டு அதனடிப்படையில் இந்த ரஷ்ய நிறுவனம் தேர்வு செய்யப்படவுமில்லை. கேரள அரசுத்துறை நிறுவனமே டைட்டானியம் உலோக கட்டிகளை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள போது, அதைப் புறக்கணித்துவிட்டு ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது ஏன் என்ற கேள்விக்கு சி.பி.எம். தலைவர்கள் இன்றுவரை வாய்திறக்கவில்லை.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, ரோசோபாரன் நிறுவனமானது, ரஷ்ய கிரிமினல் மாஃபியா கும்பலின் ஆயுதபேர நிறுவனமாகும். உலகின் 30% டைட்டானிய பேரத்தைக் கட்டுப்படுத்தும் ரஷ்யாவின் மிகப் பெரிய ஏகபோக நிறுவனமான ""அவிஸ்மா'' சார்பாக இந்த ரோசோபாரன் நிறுவனம் கேரள அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி வெளியிட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யாமல், ஏகபோக ""அவிஸ்மா'' நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டால், எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி குடைச்சல் தரும் என்பதாலேயே, சி.பி.எம். ஆட்சியாளர்கள் தந்திரமாக ரோசோபாரன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆனால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக, இந்த மோசடித்தனம் அம்பலமாகி சந்திசிரிக்கத் தொடங்கி விட்டது.

 

இத்தனைக்கும் பிறகும் ""கேரள தாதுப் பொருள் மற்றும் உலோக நிறுவனம் ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது அந்த அரசுத்துறை நிறுவனத்தைப் பாதிக்கும். மாறாக, கேரள அரசுதான் ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகை செய்துள்ளது. ஒருபுறம் அரசுதுறை நிறுவனமும், மறுபுறம் இரு தனியார் நிறுவனங்களும் ஒரே துறையில் இயங்கும். இதனால் அரசுத்துறை நிறுவனம் பாதிப்படையாது'' என்று நாக்கைச் சுழற்றி விளக்கமளிக்கிறார் கேரள தொழிற்துறை அமைச்சர். இவர் கேரள சி.பி.எம். கட்சியின் விஜயன் கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய புள்ளி. பதவிக்கவும் அதிகாரத்துக்காகவும் விஜயன் கோஷ்டியுடன் நாய்ச்சண்டை போடும் அச்சுதானந்தன் கோஷ்டியோ, இத்தனியார்மயமாக்கலுக்கு எதிராக வாய் திறக்காமல் பம்மிப் பதுங்குகிறது.

 

இலாபத்தில் இயங்கும் அரசுத்துறை நிறுவனம் ஈடுபட்டுள்ள தொழிலில் அந்நிய தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது ஏன்? இந்த அரசுத்துறை நிறுவனத்தை நவீனப்படுத்தி விரிவுபடுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த மறுப்பது ஏன்? தமிழகத்தின் டைட்டானியம் ஆலை குறித்து ஒரு நிலைப்பாடும், கேரளத்தில் வேறொரு நிலைப்பாடும் சி.பி.எம் கட்சி எடுப்பது ஏன்? இப்படிப் பல நூறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். அவற்றுக்கு சி.பி.எம். துரோகிகளிடமிருந்து பதில் கிடைக்கப் போவதில்லை. மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மே.வங்க வழியில் தனியார்அந்நிய முதலாளிகளின் அடியாளாகச் செயல்படக் கிளம்பிவிட்ட இப்பித்தலாட்டப் பேர்வழிகளிடமிருந்து அதை எதிர்பார்ப்பதில் நியாயமுமில்லை.


· தனபால்