Language Selection

புதிய ஜனநாயகம் 2007

put_oct-2007.jpg மாதச் சம்பளமாக ஏறத்தாழ ரூ. 18,000 வாங்கும் ஒரு போலீசு இன்ஸ்பெக்டர், பல இடங்களில் பலகோடி மதிப்புள்ள சொகுசு பங்களாக்களைக் கட்டியெழுப்ப முடியுமா? ஏன் முடியாது என்று தன்னையே உதாரணமாகக் காட்டும் சேலம் பள்ளப்பட்டி போலீசு இன்ஸ்பெக்டர் இலட்சுமணனின் மகாத்மியங்களைக் கேட்டால் தமிழக மக்கள் அதிசயித்துப் போவார்கள்.

 

முதல் தகவல் அறிக்கை (ஊஐகீ) பதிவு செய்ய ரூ. 10,000; அடியாள் சப்ளைக்கு ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம்; சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்க ரூ. 40,000; தள்ளுவண்டி, பழக்கடை வியாபாரிகளிடமிருந்து மாமூல் ரூ. 60,000; கட்டப்பஞ்சாயத்துக்குக் கமிஷன் பல லட்சம் என்று இந்த ""வசூல் ராஜா'' அடித்து வரும் கொள்ளைக்கு எல்லையே கிடையாது. பள்ளப்பட்டி போலீசு நிலையத்தை கட்டப்பஞ்சாயத்து நடத்தி பகற்கொள்ளையடிக்கும் நிலையமாக மாற்றிய பெருமை இந்த இன்ஸ்பெக்டருக்கு மட்டுமே சொந்தம். இச்சட்டபூர்வக் கொள்ளையனிடம் சிக்கி சேலம் நகர மக்கள் படும் வேதனையைச் சொல்லி மாளாது.

 

""என்னை எவனும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது'' என்று தினவெடுத்துத் திரியும் இந்த வசூல் ரௌடி இன்ஸ்பெக்டர், அண்மையில் சேலம் பள்ளப்பட்டியில் ""காமதேனு மெட்டல்ஸ் அண்டு செக்யூரிட்டீஸ் லிமிடெட்'' எனும் நிறுவனத்தை நடத்தி வந்த திருமதி சைலஜா என்பவரை மிரட்டி, அதன் நிர்வாகத்தையே அபகரித்துள்ளார். இந்நிறுவனத்துக்குக் கட்டடம் விற்ற ராஜேஷ் என்பவர், அக்கட்டடத்தை தன்னிடமே விற்று விடுமாறு திருமதி சைலஜாவை அச்சுறுத்தி வந்தார். ராஜேஷிடம் பல லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்த இன்ஸ்பெக்டர் இலட்சுமணன், திருமதி சைலஜாவை ஆபாசமாக ஏசியதோடு, அக்கட்டடத்தை ராஜேஷ் கேட்கும் விலைக்கு ஒப்படைக்காவிட்டால், அ.தி.மு.க. கவுன்சிலர் மாரியப்பன் தலைமையிலான அடியாட்களை ஏவி சைலஜாவை ஒழித்து விடுவதாக மிரட்டி, இக்கம்பெனியின் சாவியைப் பறித்து ராஜேஷிடம் கொடுத்து, கம்பெனியையே அபகரித்துள்ளார்.

 

இக்கட்டப் பஞ்சாயத்து ரௌடி இன்ஸ்பெக்டரின் கொடுஞ்செயலைப் பற்றி நீதிபதிகள், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, போலீசு தலைமை இயக்குனர், ஆணையர் உள்ளிட்டு அனைவரிடமும் புகார் செய்து இக்கம்பெனி நிர்வாகிகள் முறையிட்டதன் பேரில், கடந்த 25.7.07இல் இந்தக் கொள்ளையன் பணி மாறுதல் செய்யப்பட்டார். ஆனாலும், இன்னமும் இங்கு நிழல் இன்ஸ்பெக்டராக உலாவும் இலட்சுமணன், இக்கம்பெனி நிர்வாக இயக்குனர் மற்றும் உறவினர்கள் மீது பொய்யாக திருட்டு வழக்கு சோடித்து கொட்டமடித்து வருகிறார்.

 

அதிகாரத் திமிரோடு அடாவடித்தனம் செய்துவரும் சீருடை அணிந்த இந்த வசூல் ரௌடிக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்த பு.ஜ.தொ.மு; அதன் தொடர்ச்சியாக 3.9.07 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. காமதேனு மெட்டல்ஸ் கம்பெனியின் நிர்வாகிகள் உள்ளிட்டு இந்தப் பகற்கொள்ளை இன்ஸ்பெக்டரால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் உழைக்கும் மக்கள் திரளாகப் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர்கள், திராவிடர் கழக முன்னணியாளர்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, போலீசு தலைமை இயக்குனர், இந்த வசூல் ரௌடி விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ரௌடி இன்ஸ்பெக்டருக்கு எதிராகத் துணிந்து உறுதியாக நிற்கும் பு.ஜ.தொ.மு. நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் சேலம் நகரமெங்கும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


பு.ஜ. செய்தியாளர்கள்