தெருக்களில் முழங்கும்
மாணவர் கிளர்ச்சிக்குத் தெரியாது
இனங்களைப் பிரித்துப்போட்டு
பதாகைகள் ஏந்திட
எமக்காய் ஒலிக்கும் குரல்களில்
இனவாதத் தீயை தேடல்
எந்தவகை நியாயம்
செயல்பாட்டை மறுக்கும்
புரட்சிகரசொல்லாடல் தத்துவங்களும்
சேர்ந்தேதான்
நந்திக்கடலில் மகிந்தசிந்தனை இரத்தம்குடிக்க
பார்த்திருந்தது
இந்த வெள்ளைவான் கனவான்கள்
கழிவு எண்ணையை
இணையத்தளங்களில் வீசியபடியே
வரைவிலக்கணங்களுடன் உலாவருகிறார்கள்
திமுத்து எதிர்கொள்ளும் சவால்களும்
லலித் குகனின் கடத்தலும்
களத்தில்
உளவுப்படையின் கழுகுப்பார்வைக்குள்
மாணவத் தோழர்கள்
சிசித் ஜனக்க இழப்பிலும்
எழுந்து நிற்கிறது!
இலங்கை மக்களிற்கான
இலக்கு
ஜக்கியம் மட்டுமேயென அடித்துச்சொல்கிறது
இனஅழிப்பின் சூத்திரதாரரின் பீரங்கிகள்
வடக்கு கிழக்கிலிருந்து
தெற்குமேற்காயும் திரும்பியிருக்கிறபோதும்
விவாதங்களும் விதண்டாவாதங்களும்
அழிப்பின் பின்னாயும்
படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டதாயில்லை
இடித்துரைக்கின்ற
மக்கள் பலம் எழுச்சிகொள்ளும் தருணமெல்லாம்
மெத்தப் படித்தவர்கள்
கரைத்துக் குடித்த புத்தகங்களில்
காணப்படவில்லையேயென ஆதங்கப்படுகிறார்கள்
வெடித்துச் சுக்குநூறாய்
மனிதம் துடித்துமீண்டதை
ஏனோ மறந்துபோய் விடுகிறார்கள்
கரங்களை இணைக்கும் காலமிது
எரிக் சொல்கைம்
இந்தியா அமெரிக்கா எல்லாத் தேசமும்
உயிர்கள்
கருகிவீழ்ந்த காலத்து வாய் மூடியிருந்தவர்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எமக்காய்
தெருக்களில் இறங்கியதாயும் சரித்திரமில்லை
தேடியலையும் எந்த அழுத்தமும்
ராஜபக்ச கோட்டையில்
துரும்பையும் அசைக்கவில்லை
ஜக்கியப்பட்ட
மக்கள் எழுச்சியே இனி அசைக்கும்
புதுயுகம் திறக்கும்!
மகிந்தபாசிசம் ஆட்டங்காண்பதும்
மண்ணைக்கொள்ளையிடும்
அன்னியக் கூட்டம் ஓடுவதும்
மக்கள் குரலே சரித்திரமாய் படைக்கும்!!
-09/10/2012