அதோ எரிகிறது ஏதோ!
யாரோ எரிக்கின்றார் எதையோ!
கரும் புகை மூட்டம் வானை முட்டியும்
எங்களை மூடியும் இருக்கிறது.
தீயும் நாற்றம் ஊரெல்லாம் பரவியிருக்கிறது.
நாசித் தூவாரங்களுக்குள் மல்லிகை வாசனை திணிக்கப்படுகிறது.
நமக்கேன் அது பற்றிய ஆராய்ச்சி
வேறு வேலைவெட்டி இருப்பின் பார்ப்போம்!
வாரீர்.
எரிவதும் எரிக்கப்படுவதும் நாமேயாயினும்
நமது நேரம் பொன்னானது எனவே
நமக்கேன் வீண் வம்பு.
எரிந்த பின்னும் எரித்து முடித்த பின்னும்
சொல்லி அனுப்புங்கள் வந்து வேடிக்கை பார்க்கிறோம்,
வீணான சவச் சாம்பலை.
சொற்களில் மாத்திரமே கவலையாய்ப் பேசுவோம்,
வேண்டுமென்றால் கொஞ்சம் முதலைக் கண்ணீரும் வடிப்போம்.
எங்களிடம் வேறெதையும் கேட்டு விடாதீர்.
எம்மால் எதையும்
தரவோ, செய்யவோ முடியாது.
நாங்கள் இப்படி இருக்கவே ஆக்கப்பட்டவர்கள் அறிவீர்.
எத்தனை எத்தனை தீக்களில் நாம் தினமும் எரிந்து நிற்கின்றோம்
எம்மிடம் எதற்கும் கணக்கில்லை,
கணக்கு வைக்க யாரும் எங்களை விடுவதுமில்லை
தீச் சூட்டு வடுக்கள் பற்றியோ
கருகிய சாம்பல்கள் பற்றியோ
தீயை எம்மத்தியில் வைத்தவர் பற்றியோ
நாம் பேசுவதுமில்லை,
பேசப்போவதுமில்லை,
எங்களிடை இருக்கும் அவரை
அறிந்துகொள்ள நாம் விரும்புவதுமில்லை.
நெருப்பின் வடிவம் பற்றியோ
அதன் சுவாலைகள் செய்யும் அக்கிரமங்கள் பற்றியோ
எந்தக் கவலையும் கொள்ளாமல்
தினமும் மகிழ்ந்து குலாவியிருப்போம்
காண்பீர்.
*********
ஆயிரம் ஆண்டுகால பழங்கதைகள் உள்ளன எம்மிடம்
பல புதுமைப் புனைவுகளும் உள்ளன நம்மிடம்
அவை பற்றிப் பெருமை பேசிப் பேசியே
நாம் நமது காலத்தின் கடைசிவரை
வாழ்ந்து போவோமே அன்றி.
எடுப்புக்கெல்லாம் கேள்விகேட்டு
எதையும் யாரோடும் பகைத்துக்கொள்ளோம்.
அனைத்துக்கும் அடிபணியும் சமரசமே எங்கள் மந்திரமாகும்.
*************
அழகழகாய் விதவிதமாய்
எத்தனை எத்தனை தீச் சுவாலைகள் நம்மூர்களில்,
அத்தனையையும் மூட்டியவர்கள் பெரும் கெட்டிக்காரர்கள்,
இல்லை இல்லை பெரும் சக்திக்காரர்கள்,
இல்லை இல்லை அவர்கள் பெரும் புனிதர்கள்.
அவர்தம் கெட்டித்தனத்தை நாமே ஆக்கினோம்,
அவர்தம் சக்திக்கு நாமே உணவாயிருந்தோம்,
அவர்தம் புனிதத்துக்கு நாமே படியளந்தோம்,
அனைத்துக்கும் நாமே காரணமும் ஆனோம்.
எத்தனை எத்தனை தீச்சுவாலைகள் நம்மூர்களில்
நம்மத்தியில்....
*********
சாதியெனும் ஒர் அழகிய தீ ....
எரித்தவை ஓராயிரம்
அதில் எரிந்தவை பல்லாயிரம்
மகிழ்வோடு கூடிக் களித்திருந்த இருந்த எம்மை
நீறு பூசி
குறுக்காலே நூல் போட்டு
பொய் மந்திரப் புகை போட்டு
வந்தவர்
அவர்
வகை வகையாய் கால் என்றும் கை என்றும்
தலை என்றும் மார்பென்றும்
நம் பிறப்பின் கதைகள் பல பேசியும்,
செய்தும்,
எம்மைப் பீடம் கட்டி அழகழகாய் எரித்தனர்.
இதுவே சொர்க்கம் எனும் கனாவில் நாம் எரிந்து சாம்பல் ஆனோம்.
வர்க்கம் எனும் பெரும் தீ....
எரித்தவை ஓராயிரம்
அதில் எரிந்தவை பல்லாயிரம்
நாம் என்றும் நமக்கான உழைப்பு என்றும் இருந்த நம்மிடம்
உழைப்பின் வகை சொல்லி
உழைப்புக்குச் சொந்தம் கூலியாக்கி
உழைப்பிலே முழுநேரமும் எம்மைக் கிடக்கச் செய்து
உழைப்பிலே நாம் கருகியபடி இருக்கையில்
அவர்கள் அதில் சுகமாய்க் குளிர் காய்ந்தனர்.
நாம் இயந்திரத்தின் கீழே எரிந்து சாம்பல் ஆனோம்.
மதம் எனும் மாபெரும் தீ....
எரித்தவை ஓராயிரம்
அதில் எரிந்தவை பல்லாயிரம்
நமக்குள் இருந்த பயம் ஊறிச்
சுடராக பற்றி எரிந்தது
தீ.
சின்னதாயும் பெரிதாயும் ஆங்காகே யாருக்கெல்லாமோ
எம்மை எரித்து உணவாக்கியது
அத் தீ.
பெரும் போர்கள் செய்து அதற்கு நூல்களும் செய்து
புதிது புதிதாய்
பெரும் கதைகள் சொல்லிக்கொண்டே
தினமும் எங்கள் கைகளும் மனங்களும் அதில் எரிந்தே சாம்பலாயின.
தேசியம் எனும் போலித் தீ
ஊரெல்லாம் புரையோடி இருக்கக் காண்பீர்
இருப்பின் அடையாளங்களிலும் எல்லாமுமாகவும்
புதிதாயும் வகைவகையாயும் அத் தீயை மூட்டிய வண்ணமே
இருக்கிறார்கள்.
எங்களை ஏதோவொரு கலவையாய்க் கலந்து
எரித்தும் விடுகிறார்கள் அதில்,
எதுவும் தெரியாமலே எங்கள் சுயங்களை
எரித்துச் சாம்பலாக்கினோம்.
இனம் எனும் ஒரு பொறித் தீ
நிறங்களுக்குள்ளும் தீயை வைத்து
எல்லாத் தலைமைகளையும் அதில் எரிய வைத்து
உரிமைக்கான தீ என்றாகி
சிந்தனைகளை எல்லாம் பொய்யாக்கி
கேள்விகளை எல்லாம் முடமாக்கி
முடிவில் முடிவேதும் இல்லாமல்
எல்லோரையும் எரித்துச் சாம்பலாக்கிப் போனது.
அதிகாரம் எனும் ஆசைத் தீ
இது பொல்லாத் தீ
ஆண்டாண்டு காலமாய் அடக்க முடியாத,
அடங்காது எல்லோரையும் அழிக்கும் கொடுந் தீ.
இந்தக் கருத்து, அந்தக் கருத்து என்று எல்லாப் பக்கமும்
சுடர் விட்டுப் பற்றியெரியும் தீ
யாருக்கெல்லாம் தேவையோ அவர்தம் கையேந்தியும்
கைவிட்டும், மண் விழுந்தோடியும் எல்லோர் கைகளுக்கும்
சேர்ந்தும்
மூட்டியவரையும் எரிக்கும் தீ
முழுமையாக எங்களை எரித்துச் சாம்பலாக்கி ஏப்பம் விடும்
எத்தனை எத்தனை தீச்சுவாலைகள் நம்மூர்களில்
நம்மத்தியில்....
*******
உங்கள் அடிமைகள் நாம்
எங்களை முழுமையாக எரித்து விடுங்கள்.
உங்கள் கனவுகளை
எங்கள் சாம்பல்கள் கொண்டு பூசி மெழுகி விடுங்கள்.
எங்கள் சாம்பல்கள் மீது காவியம் பாடுங்கள்.
எங்கள் சம்பல்கள் மேல் நின்று ஊளையிடுங்கள்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
நாங்கள் யாருமில்லா எங்கள் ஊர்களில்
நீங்கள் மட்டும் தனியே நிற்க வேண்டாம்.
நீங்கள் வைத்த தீயில் எரியாமலும்
உங்களால் எரிக்க முடியாமலும் போன
எங்களிற் சில இன்னும் எங்கேனும்
சாம்பல்களிற் உயிர்ப்போடு கிடக்கவே செய்யும்
தீயின் சூடு தாங்காமல்
தணியாமல் இருக்கவே செய்யும்
அவை மீண்டும்
சாம்பலின் சுடர் மிக எழும்
உங்களையும் எரித்துச் சாம்பலாக்கித்
தங்கள் காலடிகளில் புதைத்தும் விடும்
அறிவீர்.