மீண்டும் மீண்டும் மரண தண்டனையே வேண்டும்
என்கிறது எங்கள் ஈழத் திருநாடு.
சில காலத்தின் முன்னால்
சிறி லங்காவாகிப்போன இலங்கை மண்ணில்
தண்டனையாக மரணங்கள் தொடரவேண்டும்..!?
அப்படித்தான் மக்களைத் திருத்திடுவோம்
அதுதான் நாட்டுக்கான சேமவாழ்வு என்கிறது அரசு.
தமிழர் விடுதலைக் கூட்டணியின்
பேச்சுகளால் பெரிதாய் யாத்த
புலியாலும் புளட்டாலும்
ரெலோவாலும் ஈரோசாலும்
ஈபிஆரெல்லோ ஈப்பிடீப்பியாலும்...
இன்னுமின்னும் எத்தனையோ குழுக்களாலும்
மறைமுகத் தனியாராலும்...
கும்பல்லில் கோவிந்தாவாக...
மகுடிக் குறவரும்...
தினந் தெண்டித் தின்போரும்...
தும்பு மிட்டாய் - கரஞ்சுண்டற் காரரும்...
இராணுவ முகாமருகால் வழிமாறி வந்தோரும்...
ஏனென்ற கேள்வியை எம்பிக் கேட்டாரும்...
அண்டை அயல் இனத்தோரும்...
அதிகம் குடித்துத் தன்னிலை மறந்தாரும்...
அத்தனை இயக்கங்களுக்கும்
தம் பிள்ளைகளை பகிர்ந்து பிரிந்தோரும்...
சாதி மத வர்க்கநிலை உடைக்காத ஆயுத ஆசைகளின்
தமிழ்க் குறுந்தேசியப் போராட்டம் அர்த்தமில்லை என்ற
அரசியலைச் சொன்னோரும்...
இன்னுமின்னும் எத்தனை எத்தனையோ மனிதர்களை..!?
உளவாளியென்றும்
ஊத்தைவாளியென்றும்
இந்தக் கொலைகாரக் கும்பல்கள்
எங்கள் தேசத்து மரண தண்டனையென
1976இற்கு முன்பாகவும் பின்பாகவும்
சும்மா சும்மா சுட்டுச் சுட்டு வீழ்த்திய மனிதரை
எம் விழிகள் கண்ணுற்று
கத்திக் கதறி அழுது பேசி
குரலறுபட்ட எமக்கு..!?
சிறிலங்காவின் நீதி விசாரணை என்பது
கம்பளப் பூச்சியைத் தடவிக் கொடுப்பது போன்றதுதான்.
அது முற்றுவதற்கு முன்
பருத்த நாயுண்ணி என்பதனை எத்தனைபேர் அறிவாரோ..?
அதனால் நீதியிலும்;
சிறிலங்கா அரசு என்றுமே உச்சந்தான்.
2009 மே மாதம் முள்ளி வாய்க்கலில் சேர்ந்து நின்ற
அத்தனை நாடுகளும் நீதியில் மிகமிக உச்சந்தான்.
அதற்கும் அப்பால் தனியீழப் போராட்டமென்று
அனைத்து இயக்கங்களையும் அழித்து
இறுதிக் கையெடுத்த புலிகள்
இந்தியச் சார்பில் ஈரோசிற் பாதியை
தம்மோடு இணைத்ததும் அரசியலில் அதியுச்சந்தான்.
இதற்குள்ளே சிறிலங்கா அரசுடனே
சேர்ந்தவரும் புலியாலே பிரிந்தவரும்
ஓர் தற்சமைய அதிகாரம் பெற்றதிலே..!?
இம்மென்றால் படைகள் வரும்
ஏனென்றால் இலக்கத் தகடற்ற எருமைவரும்.
இதற்குள்ளே சேதியான
1976இல் தடைப்பட்ட
சிறிலங்காவின் மரண தண்டனை
மீண்டும் இடம் பெறப்போவதிலே
இன்னார்களையும் அது தேடிவரும்.
ஆக..,
இதற்கென்றோர் நாடு
இதற்கென்றோர் நாடாளுமன்றம்
இதன் மேலாயோர் அதிகார வர்க்கம்
இதன் பின்னால் மதமும் சாதியமும் மொழிவெறியும்..
இவை சற்றே தலைகீழாய் கவுண்டதுதான்
இந்நாட்டு அரசியல் மாற்றம்.
நடக்கட்டும் மரண தண்டனை.
- மாணிக்கம்