தூரத்தேயிருந்து
குண்டுகளை வீசிய டோராப்படகுகள்
எங்கள்
இறங்குதுறையை ஆக்கிரமித்துக்கொண்டது
கிராமத்து தலைநிலம்
அழகையும் அமைதியையும் தொலைத்து
படைமுகாம்களால் சூழப்பட்டுக்கிடக்கிறது
மக்கள் விடுவிக்கப்பட்ட பெயரில்
விலங்கிடப்பட்டுக் கிடக்கிறார்கள்
கடற்காற்று வருடியகரையில்
சுவர்கள் எழுந்து
மண் சுகத்தை தொலைத்திருக்கிறது
அரசமரத்து வேர்களைச் சுற்றி
அரண் அமைக்கப்பட்டிருக்கிறது
பட்சிகள் கூட வந்துறங்கியதிற்கான
எந்தத் தடயங்களுமில்லை
மரத்தடியில்
கூடியிருந்து பேசியபொழுதுகளையும்
சுகமான நினைவுகளையும்
இளையதலைமுறை இழந்துபோயிருக்கிறார்கள்
எல்லாநிகழ்வுகளிலும் படையினர்பிரசன்னம்
வசந்த விதிமுறையாக்கப்பட்டுள்ளது
நிரந்தரமாகவே
நிலைகொள்ளவதற்கான தயாரிப்புகள்
அடைப்புகளால் மூடப்பட்டு படுவேகமாகிறது
இயற்கையின் வசந்தவாழ்வை
மகிந்த வசந்தம் விழுங்கிக்கொண்டேயிருக்கிறது
-22/08/2012