Language Selection

புதிய ஜனநாயகம் 2007

put_oct-2007.jpg

பாரதிய ஜனதாவின் அலுவலகத்தை தி.மு.க. தொண்டர்கள் நொறுக்குவதையும், கொடிமரத்தைப் பிடுங்கி எறிவதையும், தமிழகமெங்கும் வேதாந்தியின் உருவப்பொம்மைகளும் அத்வானியின் உருவப்பொம்மைகளும் எரிக்கப்படுவதையும் தொலைக்காட்சியில் பார்த்த வட இந்திய மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவை மூடிக்கொண்டு கம்பக்கதவின் பின்னே பேயறைந்தாற்போல நின்று கொண்டிருந்த பா.ஜ.க தலைவர்களைப் பார்த்த அவர்களது வட இந்தியத் தலைவர்கள் எப்படிப் புழுங்கியிருப்பார்கள்? முகத்தில் பார்ப்பனக் கொழுப்பையும் திமிரையும் தவிர,

 வேறு உணர்ச்சிகளைக் காட்டவே தெரியாத ராம.கோபாலன்ஜியும், எச்.ராஜாஜியும் பீதியில் உறைந்து நின்றதைப் பார்த்த சங்கப் பரிவாரத்தின் காக்கி அரை நிஜார்கள் என்ன உணர்ந்திருப்பார்கள்?

 

பா.ஜ.க அலுவலகத்தின் மீது தி.மு.க.வினர் தாக்குதல் தொடுத்த சம்பவத்தின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவது நம் நோக்கமில்லை. "தங்கள் தலைவரின் தலையை வெட்டி வந்தால் எடைக்கு எடை தங்கம் தருவதாக' ஒரு பரதேசி கூறும்போது, அந்தத் தலைவனின் மீது அன்பு கொண்ட தொண்டர்கள் ஆத்திரம் கொண்டு தாக்குவது எங்கும் நடக்கக் கூடியது தானே என்று கருதலாம்.

 

ஆனால், இந்தத் தலைவர் இராமனை எள்ளி நகையாடிய தலைவர். அதற்கு எதிர்ப்பு வந்தபோதும் அதை லட்சியம் செய்யாத தலைவர். பாரதிய ஜனதாவின் மொழியில் சொன்னால், இந்துக்களின் மதத்தையும் கடவுளையும் இழிவு படுத்திய நாத்திகர். அவருக்கு ஆதரவாகத் திரண்டு வந்தவர்களோ அனைவரும் "இந்துக்கள்'

 

தங்கள் தலைவர் இராமபிரானை "இழிவு'படுத்துகிறார் என்று தெரிந்தும் அதைப் பொருட்படுத்தாதது மட்டுமல்ல, அதனைத் தட்டிக் கேட்ட சாமியாரையும் கட்சியையும் ஒரு இந்து திருப்பித் தாக்க முடியுமா? இராமனுக்கு எதிராக இராவணனைக் கொண்டாடும் ஒரு தலைவருக்குப் பின்னால் இந்து என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் அணிதிரளமுடியுமா?

 

இதுதான் தமிழகம் தவிர்த்த இந்தியாவுக்கு, குறிப்பாக வட இந்தியாவுக்குப் புரியாத புதிர். பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஆத்திரத்தைத் தூண்டும் புதிர். அந்தப் புதிரின் நாயகன் பெரியார். பார்ப்பன இந்துமதவெறி சித்தாந்தத்துக்குப் பலியாகியோ அல்லது அஞ்சி நடுங்கியோ எஞ்சியுள்ள இந்தியா குனிந்து நிற்கையில், கம்பீரமாக அதனை எதிர்த்து நிற்கிறது தமிழகம். இது பெரியார் பிறந்த மண் என்பதற்காக நாம் கர்வம் கொள்ளக்கூடிய தருணம் இது.

 

கருணாநிதியின் பேச்சையும், தி.மு.க.வினரின் எதிர்த்தாக்குதலையும் மிகைபடப் புகழ்வது நமது நோக்கமல்ல. அதேநேரத்தில் அதனைப் அலட்சியப்படுத்திப் புறக்கணிப்பது நேர்மையும் அல்ல. இராமனை அம்பலப்படுத்தி கருணாநிதி ஒருவேளை பேசாமல் இருந்திருந்தால், ""ஏன் பேசவில்லை?'' என்று அவரைக் கேட்கும் யோக்கியதை கொண்ட யாரும் இந்திய ஓட்டுக் கட்சி அரசியலில் இல்லை. இத்தகைய விமரிசனங்கள் அவருக்கு அரசியல் ஆதாயத்தைத் தரப்போவதும் இல்லை. தேர்தல் அரசியல் சந்தர்ப்பவாதத்தில் கரைகண்டு, பாரதிய ஜனதாவுடன் கூட்டு வைக்கும் அளவுக்குச் சீரழிந்த பின்னரும், முன்னர் பெருங்காயம் வைத்திருந்த அந்தப் பாண்டத்தில் இன்னும் காரம் மிச்சமிருக்கிறது. அந்தக் காரம் தி.மு.க. என்ற கட்சியின் இயல்பாக இல்லாவிடினும், கருணாநிதி என்ற கிழவரின் இயல் பாக இருக்கிறது. பிழைப்புவாதத்தில் ஊறிப்போன அந்தக் கட்சியிலும் கூட, பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்ற உணர்வு ஒருவேளை அவர்களுக்கே தெரியாமல்கூட இன்னும் கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. "தந்தை'யின் சாயல் பிள்ளைகள் மீது படிந்திருக்கிறது!

 

சமஸ்கிருதத்தை எதிர்த்து நின்ற தமிழ், பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற பவுத்தம், சமணம், சித்தர்கள் ... என்று ஒரு நெடிய மரபைக் கொண்டிருக்கும் தமிழகத்தில், மக்கள் மத்தியில் விரவியிருக்கும் இந்த பார்ப்பன எதிர்ப்புணர்வை வேறு யாரும் புரிந்து வைத்திருக்கவில்லை என்றாலும், தமிழகத்தின் பார்ப்பனக் கும்பல் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறது. ""இராமனைக் கற்பனை என்று கூறியதன் மூலம் கருணாநிதி இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்திவிட்டார்'' என்று ஜெயலலிதா அலறுவதும், ""கருணாநிதி திருந்தாததனால்தான் இத்தகைய கடும் விமரிசனங்கள் எழுகின்றன'' என்று தலைவெட்டி வேதாந்திக்கு வக்காலத்து வாங்குவதும் வெறும் தி.மு.க. அ.தி.மு.க. போட்டி அரசியல் அல்ல. பார்ப்பன எதிர்ப்பு மரபை தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டி, பார்ப்பன சாம்ராச்சியத்தை நிறுவ வேண்டுமென்ற ஜெவின் வெறிக்கு இவை நிரூபணங்கள். பாரதிய ஜனதாவால் இந்த இராமன் விவகாரத்தைத் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்ல இயலாது என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். அதனால்தான் அந்தப் பணியைச் சொரணையற்ற தன் அடிமைகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.

 

பார்ப்பன பாசிசத்தை நிலைநாட்டும் தங்களது பொது நோக்கத்துக்காகத்தான் சங்கராச்சாரி கைதை ஒட்டி ஏற்பட்ட பகையை மறந்து சோவும், சுப்பிரமணிய சாமியும், அத்வானியும் ஜெயலலிதாவுடன் கை கோர்க்கின்றனர். அன்று சு.சாமிக்கு எதிராகத் தனது மகளிரணியை வைத்து அம்மண ஆட்டம் நடத்திக் காட்டிய அம்மையார், "சேது சமுத்திரத் திட்டத்துக்கு இடைக்காலத் தடை வாங்கிய சாதனைக்காக' இன்று சுப்பிரமணிய சாமிக்கு மலர்க்கொத்து அனுப்பி வைக்கிறார். தினமணியோ, மதியின் அருவெறுக்கத்தக்க கேலிச்சித்திரங்களாலும், வன்மம் தெறிக்கும் தலையங்கங்களாலும் நிரம்பி வழிகிறது. இராமன் சேது பிரச்சினையில் இந்தத் தமிழ்நாட்டுப் பார்ப்பனக் கூட்டணியின் துணையை பாரதிய ஜனதா பெரிதும் நம்பியிருக்கிறது.

 

"வெளிக்கியிருக்கப் போனவனுக்கு விளாம்பழம் கிடைத்த கதையாக' பாரதிய ஜனதாவுக்கு அகப்பட்டிருக்கிறது இராமன் சேது பிரச்சினை. எந்திரத்தில் மடக்கி மடக்கித் நசுக்கப்பட்ட கரும்பு போல "அயோத்தி இராமன்' சக்கையாகி பொடியும் ஆகி உதிர்ந்துவிட்டான். இனி, அயோத்தி இராமனைக் காட்டி அந்தக் கோயில் பூசாரியிடமே கூட ஓட்டு வாங்க முடியாத நிலை! அரசு அதிகாரத்தை இழந்த நிலையில் பதவிப் போட்டியால் பா.ஜனதாக் கட்சி கந்தலாகிக் கிடந்தது.

 

காங்கிரசை விஞ்சும் அளவுக்கு பதவிப்போட்டி, கோஷ்டித் தகராறுகள், போலி விசா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க இலஞ்சம், காமக் களியாட்டங்கள், அதிகாரத் தரகு பேரங்கள் என ஆளும் வர்க்கமே முகம் சுளிக்குமளவுக்கு மொத்தக் கட்சியுமே அழுகி நாறியது. அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முதல் மன்மோகன் சிங்கின் மறுகாலனியாக்கக் கொள்கைகள் வரை அனைத்திலுமே காங்கிரசின் கொள்கைதான் பாரதிய ஜனதாவின் கொள்கையும் என்பதால் "எதை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சியாக இருப்பது' என்ற கேள்விக்கு பாரதிய ஜனதாவிடம் விடை இல்லை. எனவே, கையில் கிடைத்திருக்கும் இந்த "விளாம்பழத்தை' அது விடுவதாக இல்லை.

 

இராமன் பாலம் குறித்த பாரதிய ஜனதாவின் ஆவேசங்கள் எல்லாம் வெறும் வேசங்கள். மார்ச் 9, 2001 அன்று சேது சமுத்திரத்திட்டம் குறித்த ஆய்வுக்கு உத்தரவிட்டவர் அப்போதைய அமைச்சர் அருண் ஜேட்லி. அதன்பின் உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பா.ஜ.க அமைச்சர்கள் தற்போதைய கால்வாய்ப் பாதைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். கடலுக்கடியில் பாலம் இருக்கிறதா என்று "கண்டுபிடிப்பதற்காக' சுரங்கத்துறை அமைச்சர் உமாபாரதி நியமித்த ஆய்வுக்குழுவும் "அவ்வாறு ஏதுமில்லை' என்று அழுத்தம் திருத்தமாக அப்போதே அறிக்கை கொடுத்துவிட்டது. அன்றைய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சத்ருகன் சின்ஹா, ""ஆதாம் பாலத்துக்கு (அதாவது இராமர் பாலத்துக்கு) குறுக்கேதான் சேதுக்கால்வாய் தோண்ட இருக்கிறோம்'' என்று செப். 29, 2003 அன்று நாடாளுமன்ற மேலவையில் அறிவித்துமிருக்கிறார். இத்தனை உண்மைகளையும் இருட்டடிப்பு செய்து விட்டு இன்று சாமியாடிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா.

 

பாரதிய ஜனதாவிலிருந்து வெளியேறிய உமாபாரதி, தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக பத்துப் பேருடன் ராமேசுவரம் கடலில் நின்று அவ்வப்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். மற்றபடி ஜெயலலிதா, பா.ஜ.க உள்ளிட்ட யாரும் இதனை ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை.

 

மே2007இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவுக்கு உயிர் கொடுத்து பிரச்சினையைத் துவங்கி வைத்தவர் தலைமை நீதிபதி ஷா. ""ஆதாம் பாலம் (இராமன் பாலம்) ஒரு தொன்மை வாய்ந்த சின்னம்தான் என்பது குறித்து தொல்லியல் துறையைக் கொண்டு ஆய்வு செய்யாமலேயே கால்வாய் வெட்டப்படுவதாகவும் இதற்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும்'' என்றும் கோரினார் சு.சாமி. அவை இயற்கையாக அமைந்த மணற்திட்டுக்கள் என்பது பா.ஜ.க அரசின் காலத்தில் நடத்தப்பட்ட ஆய்விலேயே நிறுவப் பட்டுவிட்டதால் தொல்லியல் துறையின் ஆய்வு என்ற கேள்வியே எழவில்லை. எனினும், நீதிபதி ஷா வழக்கைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, சுப்பிரமணியசாமியின் கருத்தை வழிமொழிந்து நீதிமன்றத்தில் ஒரு பிரச்சார உரை நிகழ்த்தினார். பிறகு வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். பார்ப்பன மதவெறியின் முதல் கொள்ளி இப்படித்தான் வைக்கப்பட்டது.

 

பிறகு உச்சநீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவின் வாசகங்களைக் காரணம் காட்டி பிரச்சினையை ஊதிவிட்டது விசுவ இந்து பரிசத். ""ஆதாம் பாலம் என்பது இயற்கையான மணற்திட்டு. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல'' என்று கூறிய தொல்லியல் துறை, இராமாயணமும் அதன் பாத்திரங்களும் புனைகதைகளே என்றும் குறிப்பிட்டது. உடனே களமிறங்கினார் அத்வானி. ""இது தேவ தூஷணம்'' என்றும், இந்துக்களுக்கு அவமதிப்பு என்றும், இந்தியா என்ற கருத்தாக்கத்தையே இது நிராகரிப்பதாகவும் கூறி, மன்மோகன் சிங்கை தனியே சந்தித்து ஆட்சேபம் தெரிவித்தார். ""ஆட்சியே போனாலும் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒரு வார்த்தையைக் கூடத் திருத்தமாட்டேன்'' என்று வெறி கொண்டு பேசிய மன்மோகன்சிங், அத்வானி சொன்ன மறுகணமே ஆட்சேபத்துக்குரிய அந்த வாக்கியங்களை நீக்குமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டார். மறுநாள் மொத்த மனுவையுமே வாபஸ் பெற்றது காங்கிரசு.

 

""ராமன் இந்தியக் கலாச்சாரத்தின் பிரிக்கவொண்ணாத அங்கம்.. இது வழக்குக்கோ விவாதத்துக்கோ உரிய பொருளே அல்ல... இராமன் இருந்தாரா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. இந்த உலகமே இராமனால்தான் இருக்கிறது... நம்பிக்கையின் அடிப்படையிலான விசயங்களுக்கு நிரூபணம் தேவையில்லை.'' — இது அத்வானியின் அறிவிப்பு அல்ல; மனுவை வாபஸ் பெறுமாறு உத்தரவிட்ட காங்கிரசு அரசின் சட்ட அமைச்சர் பரத்வாஜின் பிரகடனம். 1980களில் பாபர் மசூதியின் கதவுகளைத் திறந்து இராமன் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்க ஏற்பாடு செய்ததும் இந்தப் பார்ப்பன நரிதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

 

உடனே அமைச்சர் அம்பிகா சோனி ராஜினாமா செய்யவேண்டும் என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் ஆர்.கே.தவாணும் கோரினர். தொல்லியல் துறை அதிகாரிகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். மனுவை திரும்பப் பெற்றதை தி.மு.க.வைத் தவிர ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. போலி கம்யூனிஸ்டுகளோ, ""இராமன் கற்பனைப் பாத்திரம் என்று தொல்லியல் துறை தனது மனுவில் கூறியிருக்கத் தேவையில்லை'' என்று கடிந்து கொண்டனர்.

 

இராமன் என்றொருவன் இருந்ததற்கும், அவன் பாலம் கட்டியதற்கும் ஆதாரமாக வால்மீகி இராமாயணம், துளசிதாசரின் ராமசரித மானஸ் ஆகிய "வரலாற்று நூல்களை' சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும்போது, ""இது வரலாறு அல்ல, புராணக் கட்டுக்கதை'' என்று மறுக்காமல் தொல்லியல் துறையால் எப்படி வாதாடமுடியும்? பெரும்பான்மை இந்துக்களின் மனம் புண்படும் என்பதற்காக இந்த வரலாற்று உண்மையைக் கூறக்கூடாது என்பது எந்த வகை மதச்சார்பின்மையில் சேரும்? தொல்லியல் என்பது ஒரு வரலாற்று விஞ்ஞானம். ஒரு அறிவியலாளன், அவன் சான்றுகளின் அடிப்படையில் தான் கண்ட உண்மைகளைக் கூறவேண்டுமா அல்லது புராணப் புரட்டுகளுக்கு விஞ்ஞானம் என்று சான்றிதழ் தரவேண்டுமா? "பூமி சூரியனைச் சுற்றுகிறது' என்று கூறியதற்காக கலீலியோவைக் கூண்டிலேற்றிய பாதிரிகளுக்கும் இந்தக் காங்கிரசு களவாணிகளுக்கும் என்ன வேறுபாடு? ஜெர்மானியர்கள்தான் தூய ஆரியர்கள் என்றும் வெள்ளையரல்லாதோர் அரைக்குரங்குகள் என்றும் அறிவியல் பாடம் எழுதச் சொன்ன இட்லரின் பாசிசத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? ஒரு வேறுபாடும் இல்லை.

 

இதோ பாசிசம் பேசுகிறது. ""இராமன் வாழ்ந்ததை மறுக்கும் ஒரு அரசுக்கு ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை'' என்கிறார் அத்வானி. ""தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறு, தலையை வெட்டு என்று பகவத்கீதை ஆணையிடுகிறது'' என்கிறான் வேதாந்தி. அதே நேரத்தில் "விவாதத்துக்குத் தயார்' என்று சவடாலும் அடிக்கிறார் அத்வானி. பார்ப்பனக் கும்பலின் இந்த இரட்டை நாக்கு புரளும் விதத்தைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.

 

விவாதிக்கத் தயாராக இருப்பவன் தொல்லியல் துறையின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் அல்லவா விவாதித்திருக்க வேண்டும்! எங்கே விவாதத்தின் முடிவில் ஒரு தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டியிருக்குமோ அங்கே விவாதிக்க மறுத்து, "இது எங்கள் நம்பிக்கை' என்று கூறுவது; நீதிமன்றத்துக்கு வெளியே வந்து "விவாதத்துக்குத் தயார்' என்று ஜம்பமடிப்பது இதுதான் பார்ப்பன பாசிஸ்டுகள் தொடர்ந்து கையாண்டுவரும் உத்தி.

 

அயோத்தியில் அகழ்வாராய்ச்சி நடத்திய ப.ப.லால் என்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தொல்பொருள் ஆய்வாளர் அயோத்தியில் மனிதர்கள் வாழத்தொடங்கியதற்கான தடயம் கி.மு. 700ஆம் நூற்றாண்டிலிருந்து இருப்பதாகக் கூறினார். அன்று இவருடைய ஆய்வைத்தான் இராம ஜென்மபூமிக்கு ஆதாரமாகக் காட்டியது ஆர்.எஸ்.எஸ். தற்போது இராமர் பாலம் 17.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்று வாதிடுகிறார்கள். இராமன் பிறப்பதற்கு முன்பே இராமன் பாலம் கட்டப்பட்டுவிட்டது போலும்! இந்தக் கேலிக்கூத்துடன் எப்படி விவாதம் நடத்துவது?

 

இராமன் பாலத்தில் தோரியம் கொட்டிக்கிடப்பதாகவும், அதனால் தான் கால்வாய் தோண்ட வேண்டாம் என்று கூறுவதாகவும் ஒரு புதுக் கரடி விடுகிறார் இல.கணேசன். கால்வாய் தோண்டினால் தோரியம் கரைந்து விடுமா, அவ்வாறு தோரியம் இருந்தாலும் அதை வெட்டாமல் எடுக்கத்தான் முடியுமா? அல்லது அங்கே யுரேனியமே கொட்டிக் கிடந்தாலும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம் என்றுதான் பாரதிய ஜனதா சொல்லிவிடுமா? எதுவும் இல்லை. பிறகு விவாதம் எதற்கு?

 

5 நாளில் 800 மைல் நீளத்துக்குப் பாலம் போட்டதாகக் கூறுகிறது வால்மீகி இராமாயணம். 30 மைல் கூட இல்லாத இலங்கைக்கு 800 மைல் நீளத்துக்குப் பாலம் போட்டதாகக் கூறும் கோமாளித்தனத்துக்கு எந்த "சோ' விளக்கம் கூறுவார்? இன்று அதிநவீன கருவிகளை வைத்துக் கொண்டு ஒரு மேம்பாலம் கட்டுவதற்கே மாதக்கணக்கில் ஆகும்போது அணிலும் குரங்கும் சேர்ந்து 5 நாளில் பாலம் கட்டிய கட்டுக்கதையுடன் எப்படி விவாதம் நடத்துவது?


"விவாதம் நடத்தத் தயார்' என்று கூறுபவர்கள் அறிவுபூர்வமாகக் கேள்வி கேட்டால் ஆத்திரம் அடைவார்கள். "உன் அறிவுக்கெல்லாம் எட்டாத பேரறிவு அது' என்று மிரட்டுவார்கள். கடைசியில், ""எங்கள் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் மத உணர்வைப் புண்படுத்துகிறாய்'' என்று குற்றம் சாட்டுவார்கள்.

 

விவாதம் என்றாலே அங்கே சான்றுகளின் அடிப்படையில்தான் முடிவுக்கு வரமுடியும். சான்றுகளால் நிரூபிக்கத் தேவையில்லாத "நம்பிக்கை' விவாதத்துக்கு வருவதில்லை. மேலே சொர்க்கமும் கீழே நரகமும் இருப்பதாக நம்பும் மக்கள் அதை நிரூபிக்க முயல்வதில்லை. இராமாயணத்தை நம்பும் பக்தர்கள் அது வரலாற்று ரீதியாக உண்மைதானா என்பது குறித்து எப்போதும் கவலைப்பட்டதில்லை.இராமனை அவதார புருசனாகக் கருதும் அவர்கள் அவனுடைய நடவடிக்கைகள் மனிதனுக்கு சாத்தியமானவைதானா என்று சோதித்துப் பார்க்கவும் முயலுவதில்லை.

 

அது அவர்களுடைய தனிப்பட்ட மத நம்பிக்கை. அவ்வளவுதான். ""இராமன் என்று ஒருவன் இருந்தான். அவன் கடலுக்குக் குறுக்கே பாலம் கட்டினான்'' என்று நம்புகிறவர்கள் நம்பிக்கொள்ளட்டும். ஆனால், அந்த நம்பிக்கை நாட்டின் பொது முடிவாக ஆக்கப்படுமானால் அதனைச் சான்றுகள் மூலம் நிரூபிக்கத்தான் வேண்டும். கேள்விகளுக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அவ்வாறு கேட்பது மத உணர்வைப் புண்படுத்துவதாகாது.

 

ஆனால், பார்ப்பன பாசிஸ்டுகளோ இராமாயணத்தை இதிகாசமாகவும் அதே நேரத்தில் வரலாறாகவும் காட்ட முயற்சிக்கிறார்கள். இராமனை ஒரே நேரத்தில் கடவுளாகவும் வரலாற்று மாந்தனாகவும் காட்ட முயல்கிறார்கள். வரலாற்று வகைப்பட்ட கேள்விகளை எழுப்பினாலோ, இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்திவிட்டதாக அல றுகிறார்கள். இந்து தேசிய அரசியலைக் கட்டமைப்பதற்கான சூழ்ச்சிதான் இது.

 

இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். ஆனால் அது இந்தியாவின் பழங்குடி மக்களான திராவிடர்களுக்கு எதிராக ஆரியர்கள் நடத்திய ஆக்கிரமிப்பு யுத்தத்தையும், நால்வருண அமைப்பு எனும் பார்ப்பனக் கொடுங்கோன்மையையும் பிரதிபலிக்கும் கட்டுக்கதை. இதில் வரும் சமூக உண்மைகள் மட்டுமே வரலாற்றுத் தன்மை வாய்ந்தவை. இராமன் பாலம், புஷ்பக விமானம், பிரம்மாஸ்திரம் போன்றவை அனைத்தும் புனைகதைகள். பார்ப்பன பாசிஸ்டுகளோ இதில் வரும் புனைகதைகளை வரலாறு என்று நம்பச் சொல்கிறார்கள். பார்ப்பனக் கொடுங்கோன்மையை நிரூபிக்கும் சமூக உண்மைகளை மட்டும் புனைகதையென்று கருதி மறந்துவிடச் சொல்கிறார்கள்.

 

இராமன் பாலம் வரலாற்று உண்மை என்றால், இந்த நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தொடர்புபடுத்தி பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் எல்லா கட்டுக்கதைகளையும் வரலாற்று உண்மைகளாக அங்கீகரிக்க வேண்டியிருக்கும். "ராமன் தலைவைத்துப் படுத்த கல், சீதை குளித்த இடம், இலட்சுமணன் முதுகு சொறிந்த இடம்' என்று இலட்சக்கணக்கான "வரலாற்று' முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.

 

அரசு பதவியில் இருக்கும் இந்துக்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கு விரோதமாக அரசு நிகழ்ச்சிகளையே மதச்சடங்குகளாக்குகிறார்கள். மத நம்பிக்கையை அரசு மேடையில் நின்று பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை உண்டாம். ஆனால், கருணாநிதி மட்டும் தன்னுடைய நாத்திகக் கருத்தை ஒரு மத நம்பிக்கை போல மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமாம். வெளியில் பேசினால் அது மக்களின் மத உணர்வைப் புண்படுத்துமாம்.

 

மதத்தை தனிப்பட்ட நம்பிக்கையாக வைத்துக் கொள்வதும், பொது நடவடிக்கைகளை அறிவியல் கண்ணோட்டத்துக்கு உட்படுத்துவதும்தான் மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் சாரம். ஆனால், அறிவியலின் பாற்பட்ட நாத்திகக் கருத்தை "தனிப்பட்ட மத நம்பிக்கையைப் போல' மனதிற்குள் வைத்துக் கொள்வதும், மதக்கருத்தை மட்டும் வெளியில் பேசுவதும்தான் உண்மையான மதச்சார்பின்மை என்கிறது பார்ப்பன பாசிசக் கும்பல். இராமனது இல்லாத மகிமைகளைப் பிரச்சாரம் செய்ய ஆத்திகத்துக்கு உரிமை உண்டென்றால், அதன் பொய்மையை அம்பலப்படுத்தும் உரிமையை நாத்திகத்துக்கு எப்படி மறுக்க முடியும்?

 

ஒரு மனிதன் தன்னை வருத்திக் கொள்வதை மட்டும்தான் மத உணர்வு என்று கருதி சகித்துக் கொள்ள முடியும். ஆனால், சக மனிதனை சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும், மக்களின் மொழியை "இழிமொழி' என்றும் கூறி நசுக்குகிறது பார்ப்பன மதம். இந்த ஆதிக்க உணர்வை மத உணர்வு என்று எப்படி அங்கீகரிக்க முடியும்?

 

இராமாயணத்தை அங்கீகரிப்பதென்பது என்பதன் பொருள், பார்ப்பன ஆதிக்கத்தையும் சூத்திர அடிமைத்தனத்தனத்தையும் அங்கீகரிப்பதுதான். பெரியாரும் அம்பேத்கரும் இதனை ஆணித்தரமாக நிறுவியிருந்த போதும், அவர்களைத் தங்களது அரசியல் பிழைப்புவாதத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் கட்சிகள் எவையும் அவர்களுடைய பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகளைப் பேசுவதில்லை. பிற்படுத்தப்பட்டோர்தாழ்த்தப்பட்டோர் என்று பேசும் தலைவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும் சுக்ரீவன்களையும், வீடணன்களையும், ஆழ்வார்களையும் நாம் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.

 

நாடெல்லாம் சுற்றிக் கடைசியில் வரவேண்டிய இடத்திற்கு வந்துசேர்ந்திருக்கிறது பார்ப்பன பாசிசம். கால்வாய் வெட்டுவதற்குக் காலதாமதம் ஆனாலும் பார்ப்பனக் கும்பலின் கல்லறைக்குக் குழி வெட்டும் வேலையை உடனே துவக்குவோம். காசியிலிருந்து ராமேசுவரத்திற்குத் தீர்த்த யாத்திரை வரும் இந்து பக்தர்கள், பார்ப்பன பாசிசம் புதைக்கப்பட்டிருக்கும் கல்லறையையும் தரிசித்துச் செல்லட்டும்!


· இரணியன்