இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு, உள்ளடங்கிய தேசிய இனப்பிரச்சனை சார்ந்த விடையங்களை வலியுறுத்தி, அல்லது ஆதரவாக, இலங்கைக்கு அப்பால் பல்வேறுபட்ட வடிவங்களில், போராட்டங்கள், அழுத்தங்கள் அங்கங்கே நடைபெறுகின்றது. இதில் முற்போக்கு, பிற்போக்கு அரசியல் வெளிப்பாடுகள் என்ற பார்வைக்கப்பால், இந்நடவடிக்கைகள் எதோ ஒரு வகையில் ராஜபக்ச அரசுக்கு சில நிர்ப்பந்தங்களையும், முகம் கொடுக்கமுடியா சூழ்நிலையையும் உருவாக்குகின்றது என்பது உண்மையே.
அந்த வகையில் இவைகள் அனைத்தும், இலங்கைத் தமிழர்களின் இன்றைய கால கட்டத்தில் முற்போக்கான நிலைமையை சித்தரிக்கின்றது. இதில் நாம் நிதானமாக நோக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டிய தேவை நம்முன்னுள்ளது. புலம்பெயர் நாடுகளாகிய மேற்கத்தைய நாடுகளில், பல்வேறுபட்ட, விரிவான அவரவர்களின் தன்மைக்கேற்ப அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. குறிப்பிட்ட இந்நாடுகளில் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களாவர்.
தமிழ் நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் இருந்தபோதிலும், அங்கே இலங்கைத் தமிழர் சார்ந்த போராட்டங்கள் அனைத்தையும் முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், குழுக்கள் அனைத்தும் இந்தியத்தமிழர்கள் சார்ந்த, அவர்களால் நடத்தப்படும் நிறுவனங்களேயாகும். குறுப்பிட்ட இந்நிறுவனங்கள், இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை சுவீகரித்துக் கொள்ளக் கூடாது. போராட்டத்தை இலங்கைத் தமிழர்கள்தான் செய்ய வேண்டும். இந்தியத் தமிழர்கள் நமது உறவுகள் என்ற முறையிலும், மனிதாபிமான அடிப்படையிலும், அவர்கள் நமக்கு ஆதரவாக செயல்பட வேண்டும், கை கொடுக்க வேண்டும், ஆத்மபலம் தரவேண்டும். இதை விடுத்து நமது போராட்டத்தை சுவீகரித்துக் கொண்டு, நமது மக்களின் தேவைகளை அவர்கள் தீர்மானிப்பது நம்மை மிகவும் பலகீனப்படுத்திவிடும்.
நாம் தமிழர் கட்சியின் ஆவணம் நமது போராட்டத்தை அவர்கள் சுவீகரித்துக் கொண்டார்கள் என்பதை மிகவும் தெளிவாகவே விளக்குகின்றது. இது நம்மை மிகவும் ஒரு ஆபத்தான கட்டத்துக்கு மிக விரைவாக இட்டுச்செல்லும் என்பது தெளிவு. இதையிட்டு யாரும் பெரிதாக அலட்டிக் கொன்றதாகத் தெரியவில்லை. இது உடனடியாக சுட்டிக்காட்டப்பட வேண்டியதேயாகும். இந்தியாவில் இலங்கைத் தமிழர் சார்பான அரசியல் செயற்பாட்டாளர்களின், அரசியலில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லாத போதிலும், ஒரு சில தலைவர்களின் சுயநலமற்ற ஈடுபாட்டை நான் மதிக்கின்றேன். அதேவேளை இன்று தமிழ் நாட்டில் என்றுமில்லாத அளவுக்கு இலங்கை தமிழர் சார்ந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது உண்மையே.
நமது பிரச்னையை விற்று வயிறு வளர்க்கும் அமைப்புக்கள் அதிகம் செயற்படுகின்றதும் நிஜமேயாகும். இதில் ஒரு அங்கமாகவே நாம் தமிழர் சீமானும், 'டெசோ' முகத்தோடு வரும் கொலைஞர் கருணாநிதியையும் நாம் கருத வேண்டியுள்ளது. சிறுகதை எழுதுபவர்கள் கூட இலங்கைத் தமிழர் பிரச்னையை கருப்பொருள் ஆக்குவது நாகரீகம், அல்லது முற்போக்கு என்ற நிலையை மீறி சந்தையில் செலுத்தக்கூடிய பொருளாக மாறிவிட்டது.
ஏனெனில் இலங்கைத் தமிழர் உலகம் முழுவதும் வாழ்வதால் இலக்கியச்சந்தை, இசைச்சந்தை, கலைச்சந்தை, போன்றவை விரிவடைந்து இந்த வியாபாரிகள் கொளுத்த லாபம் அடையும் நுணுக்கத்தையும் நாம் உணர வேண்டும்.
தாயக மண்ணில் வாழும் அரசியல் அமைப்பே தீர்வுகளை தீர்மானிக்கும் அரசியல் தகுதியை கொண்டதாகும். புலம்பெயர் தமிழர்கள் சார்ந்த அமைப்புக்கள், தாயகத்து அமைப்புக்களோடு, விவாதிக்கவும், அதன் பயனாக சர்வதேச சமூகத்தின் முன் நமது அரசியலை விரிவு படுத்த கருவியாக இருப்பதுமேயாகும். தமிழ் நாட்டு உறவுகள் நமக்கு ஆதரவாகவும், உடன்பிறப்பின் உணர்வோடும் செயற்பட்டால் போதுமானதாகும். சீமானும், கொலைஞரும் எமது போராட்ட வியாபாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதை எமது மக்கள் பார்த்துக்கொள்வார்கள், அல்லது நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்றுகூட சொல்லலாம். ஏனெனில் எமக்கு அந்தத்தகுதியுண்டு.
இவ்விருவரும் சுயநலம் அற்றவர்களாயின், தமிழ் நாட்டு சிறைகளிலும், அகதி முகாம்களிலும், கேட்பாரற்று எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்கும் எமது ஈழத்து தமிழ் உறவுகளை விடுவிக்கப் போராடிக்காட்டட்டும், அதுவே நாம் விடுதலை பெற்ற மாதிரியே உணர்வோம்.
--இலக்கியா 20/06/12