ஆறுகளும் காற்றும்
உயிர்களும் இயற்கையும்
மனிதரும் மனங்களும்
இயல்பாக இருந்த ஓர் இறந்த காலத்தில்
இணையே,
நமதிந்தக் கலவியும் நிகழ்ந்திருக்கலாம்
என்றாய்.
தூய்மை கெட்டுத் தூர்ந்து வரண்ட ஆற்றங்கரையில்
கொள்ளையடித்துச் செல்லப்பட்ட முன்னாள் மணற்பரப்பில்
மெல்லக்கொல்லும் கழிவுக்காற்றில் மூச்சிரைத்து
அப்போதுதான் முடிந்திருந்தது எம் கலவியின் உச்சம்
நன்றியும் நட்பும்
அன்பும் அடங்காத ஆசையும்
மிக்க
கலவி முடிவின் அணைப்பினையும் சிறு முத்தங்களையும்
உதறி எழுந்து பயந்தோடினோம்
அழுக்கேறிப் புளித்த மனித மனங்களின்
குரூர வெறிக் கண்களைக் கடந்தும் தப்பியும்..
நவீனப் பல்பொருளங்காடிகளில்
நஞ்சடித்துப் பழுக்கவைத்த
பளபளக்கும் பகட்டுப் பழங்களின்
வெம்பி உருக்குலைந்த இரசாயன இளிப்பு.
சவத்தின் புன்னகை.
வரலாற்றின் நஞ்சூசிகளால்
நுணுக நுணுகத் திருத்திக் குலைத்துத் தேய்த்து இழுத்து அழுத்திப் பிதுக்கி அலங்கரிக்கப்பட்டதாய்
எமக்குக் கிடைத்த
கலவியின் முகத்திலும்
சவத்தின் புன்னகை.
விற்பனைத்தண்ணீர்க் கழிவுப் போத்தல்களும்
பயன்படுத்திக் கழிக்கும் பிளாத்திக்குக் கோப்பைகளும்
பொலித்தீன் பைகளும் நிறைந்த குப்பைக் குவியலுக்குள்
செய்வதறியாமல் அதனைப் போட்டுவிட்டு வந்தோம்
ஒட்டாமல் நடந்து
வெவ்வேறு வீடடைந்த எம்மைப்போல்
உள்ளும் புறமும் ஈரம் கொண்டு
ஆணுறை கூட
அதன் அருகிலேதான் கிடந்தது.
வாழ்க்கையின் அதி நவீனப்
பல்பொருள் அங்காடியில்
கலவிகள் அடுக்கிய காட்சியறையில்
ஏராளம் தெரிவுகள்!
போர்க்களப் பலிநிலத்தில்
துப்பாக்கி முனையில்
பேய்ச்சுவை பூசியதாய் ஒன்று.
சிவப்பு விளக்கொளியில்
வறுமையில் வறுத்தெடுத்து
ஆதி அடிமைமுறைச்
சுவையோடு இன்னொன்று
சீதனச் சலுகையொடு
பண்பாட்டுப் பொலிவோடு
வேறுவழியின்றியும் இலாபகரமாகவும்
தெரிவதற்கு மற்றொன்று
செல்பேசிக் கமராக்கள்,
புதுப்புதுப் பொறிவலைகள்
வேட்டையை விரும்பும்
வெறியர்க்கும் தெரிவுண்டு
'ஆநிரை' கவரும் அக்கால மனநிலையில்
எண்களாய் மட்டுமே பெண்களை ஆக்கி
எண்ணிக்கை சொல்லி எக்காளப் பெருமைகொள்ளும்
கொள்ளைக்காரக் குரூரர்க்கும் தெரிவுண்டு.
அங்காடிக் கூடைகளைக் காவியபடி
அலைக்கழிந்து திரிகின்றார் மானுடர்..
நெருக்கடி நெருக்கடி
ஆழ்மன நெருக்கடி..
நுகர்விற்கும் புணர்விற்கும் அல்லாடும் நெருக்கடி...
தெரிவுகள் தெரிவுகள்!
திறந்த சந்தையின் சுதந்திரத் தெரிவுகள்!
தொலைக்காட்சி திறந்தால்,
கண்ணுக்குள் விரல்விட்டு மூளையைத் தட்டுது
இணையத்தில் துள்ளி எட்டிக் கழுத்தைப் பிடிக்குது
சுதந்திரத் தெரிவின் விளம்பரப் பொழிவு
பாலின்பப்பண்டங்கள், போர்னோக்கள்..
Porno பயிர் விளையும் பண்பட்ட நிலமாய
கலாசாரக் கட்டகங்கள், மதநூல்கள், போதனைகள்...
நுகர்விற்கும் புணர்விற்கும் அல்லாடும் நெருக்கடி...
மரபணு மாற்றிப் புனைந்த பழங்களின் பளபளப்பு
நஞ்சடித்துப் பழுத்த பகட்டுப் பழங்களின்
வெம்பி உருக்குலைந்த இரசாயன இளிப்பு.
சவத்தின் புன்னகை.
இந்த நவீனப் பழக்கடையில்
இயற்கைப் பழத்தை எங்கே வாங்குவது?
இக்காலக் கலவிக் கடையில்
இயல்பான கலவியை எங்கேபோய்த் தேடுவது?
கழிவேறா ஆறும்
நஞ்சூறாக் காற்றும்
பண்பாடும் மதநூலும் பழுதாக்கா மனங்களும்
பணவெறியும் நுகர் வெறியும் குதறாத மனிதரும்
எல்லாம் இயல்பாயும் இருக்கும் ஓர் எதிர்காலத்திலேனும்
கட்டற்றுப்பெருகும் காமத்துடனும்
அணையுடைக்கத் ததும்பும் ஆசையுடனும்
தீரவே தீராத ஈடுபாட்டுடனும்
சமப்பாலுறவாகவோ
அன்றி ஓர்
எதிர்ப்பாலுறவாகவோ
இணையே,
நமதிந்தக் கலவி நிகழ்ந்திருக்கலாம்
என்றேன்.
--மு. மயூரன்
17-06-2012
[17-06-2012 நடந்த தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஆண்டுவிழாக் கவியரங்கத்தில் வாசித்தது. கவியரங்கப் பார்வையாளர்களை மனங்கொண்டே இந்த வடிவமைப்பில் எழுதினேன். கட்டிறுக்கமாகச் சொல்லத்தக்க சொற்தெரிவினையல்லாது செவிப்புல வாசிப்பிற்கான சொற் தெரிவினையும் வாக்கிய அமைப்பினையுமே முடிந்தவரை பயன்படுத்த முயன்றுள்ளேன்.]
--