மக்களுக்காகவா!? அல்லது ஏகாதிபத்திய நலனுக்காவா!? கடந்த காலம் போல் மக்களை மந்தைகள் போல் நடத்துவதால், உணர்வு பூர்வமான உணர்ச்சிகள் மட்டும் இன்றி வெற்றிகளும் கூட மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்படும். இது தான் மகிந்தாவை திணறடித்த லண்டன் போராட்டக்குமான கதியாகும்.
பிரித்தானியா மகாராணியின் வைரவிழா கழியாட்ட நிகழ்வில் கலந்து கொள்ள வந்த மகிந்தவை,மக்கள் தமது தீவிர எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் விரட்டியடித்தனர். தமிழ் மக்களை புலிகள் எனக் கூறி முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்த மமதையுடன் காலிமுகத்திடலில் களியாட்ட நிகழ்வை நடாத்திய அதேவேகத்தில், லண்டனுக்கு புறப்பட்டு வந்தார் மகிந்தா. அவருக்கு நல்லதொரு பாடத்தை மக்கள் கற்றுக் கொடுத்துள்ளனர்.
இதற்கு அப்பால் இந்த போர் குற்றவாளியான மகிந்தரை ராணியின் விழாவிற்கு அழைத்த பிரித்தானியா, தனது ஏகாதிபத்தியத்தின் உண்மை முகத்தை மீண்டும் ஒருமுறை எமக்கு காட்டியுள்ளது. மனிதாபிமானம், மக்கள் நேயம் என்று நாளாந்தம் கூக்குரல் இடும் இவர்கள், இலங்கையில் லட்சக்கணக்கில் அப்பாவி மக்களை கொன்றும் வதைமுகாம்களை நிறுவி, முன்னாள் போராளிகளை வதைத்து வரும் இந்த மகிந்தரை, உலகெங்கும் கோடிக்கான மக்களை கொன்று குவித்து உலகை கொள்ளையிட்ட பிரித்தானிய பேரரசின் காலனித்துவ களியாட்ட நிகழ்விற்கு வரவழைத்துள்ளனர். இதன்மூலம் தாமும் இந்த மகிந்தரின் செயலுக்கு துணையானவர்கள் என்பதையே மீண்டும் நிருபித்துக் காட்டியுள்ளனர்.
இந்த மக்கள் விரோதிகள் கூடி கொண்டாடிய கூத்தை, இந்த போராட்டம் தடுத்த வெற்றி என்பது, இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களின் ஏகாதிபத்திய நலனுக்கு சரணடைய வைக்கின்றது.
இவை ஒரு புறம் இருக்க இந்தப்போராட்டத்தின் வெற்றி மக்களின் உணர்வு சார்ந்தது. அதை குறந்தேசியவாதிகள் கடந்த காலம் போல் தங்கள் சொந்த நலனுக்கே பயன்படுத்துகின்றனர்.
வழமைபோல மக்களின் உண்மையான பிரச்சனையை ஒடுக்கப்பட்ட மற்றைய தேசிய, சர்வதேசிய இனங்களுடன் கலந்து கொள்ளாமல், தனிமையில் தமது போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மீண்டும் கடந்த காலங்களில் விட்ட அதே தவறை செய்கின்றனர்.
இவை அனைத்தையும் கடந்து இந்த பாசிச மகிந்தவை விரட்டிய போராட்டத்தின் வெற்றி மக்களின் உணர்வுக்கு கிடைத்த வெற்றியே.