"சமூக நீதி'யின் தாயகம் எனச் சித்தரிக்கப்படும் தமிழகத்தில், சமூக அநீதிகளும் தாழ்த்தப்பட்டோர் மீது மிகக் குரூரமான வன்கொடுமைத் தாக்குதல்களும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2002ஆம் ஆண்டு திண்ணியத்தில் இராமசாமி, முருகேசன் எனும் இரண்டு தாழ்த்தப்பட்டோர் வாயில் ஆதிக்க சாதி வெறியர்கள் மலத்தைத் திணித்தனர். அதே ஆண்டில், திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டியில் சங்கன் என்ற தாழ்த்தப்பட்டவரை நடுவீதியில் அடித்து உதைத்த ஆதிக்க
சாதிவெறியர்கள், அவர் வாயில் சிறுநீரைக் கழித்தனர். 2003ஆம் ஆண்டில், மதுரை மாவட்டம் கீழஉரப்பனூரில் முத்துமாரி என்ற தலித் பெண், மலத்தைக் கரைத்துக் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டார். இந்த வரிசையில் இப்போது புதிதாக இன்னுமொரு வன்கொடுமைத் தாக்குதல் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம், சமயநல்லூர் வைகை நகரைச் சேர்ந்த, சட்டப்படிப்பு முடித்துள்ள தாழ்த்தப்பட்ட இளைஞரான சுரேஷ்குமார் என்பவரை கடந்த 26.9.07 அன்று இரவு சுற்றி வளைத்துத் தாக்கிய 9 பேரைக் கொண்ட தேவர் சாதிவெறியர்கள், அவரது ஆடைகளைக் கிழித்தெறிந்து உள்ளாடையுடன் தெருவில் ஓடவிட்டு அடித்து நொறுக்கி, தெரு ஓரத்தில் கிடந்த மலத்தை அள்ளி அவர் வாயில் திணித்ததோடு, சாக்கடையை அள்ளி அவர் மேல் ஊற்றி இழிவுபடுத்தியுள்ளனர். உடலெங்கும் பலத்த காயங்களோடு மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள தலித் இளைஞர் சுரேஷ்குமார், இப்படி வெறித்தனமாகத் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் அளவுக்கு அப்படி என்ன குற்றத்தைச் செய்து விட்டார்?
தேவர்சாதி வெறியரான கிள்ளிவளவன், சமயநல்லூர் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர். தற்கால நிழல் தலைவரும் இவர்தான். (பெண் தொகுதியாக அறிவிக்கப்பட்டதால், தனது தம்பி மனைவியைத் தலைவராக்கி விட்டு, இவர் நிழல் தலைவராக செயல்பட்டு வருகிறார்.)
சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதி தனித் தொகுதியாகும். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிதான், தமிழக அரசில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக உள்ளார். எனினும், சமயநல்லூரில் செல்வாக்கு செலுத்துவது தேவர் சாதியினர் தான். அதிகாரப் போட்டியில் ஈடுபட்டு வருவதும் தேவர் மற்றும் சேர்வார் சாதியினரே. இப்போட்டியில் கடந்த 15 ஆண்டுகளில் வெற்றி பெற்று வருவதும் தேவர் சாதியைச் சேர்ந்த கிள்ளிவளவன் கும்பலே. இவ்வதிகாரப் போட்டியின் விளைவாக அடிக்கடி அடிதடிகளும், வெட்டுக் குத்துக்களும் நிகழ்வது வாடிக்கை. ஆனால், அத்தகைய அடிதடிகளிலெல்லாம் யாரும் சுரேஷ் அளவிற்கு மோசமாக இழிவுப்படுத்தப்பட்டதில்லை.
சுரேஷ், சமயநல்லூர் தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக செயல்பட்டு வந்துள்ளார். கிள்ளிவளவனும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்தான். கடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் சேர்வார் சாதியைச் சேர்ந்த தனது நண்பர்களுக்காக வேலை செய்தார் சுரேஷ். எதிர்த்துப் போட்டியிட்ட கிள்ளிவளவன், சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களை ஆள் வைத்து அடிக்க ஏவினார். இதில் அவர்கள் தப்பி விட்டனர்.
பின்னர், அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மலையாளம் மூலம், தான் குடியிருந்த வைகை நகர் பகுதியில் சிமெண்ட் ரோடு போடச் செய்தார் சுரேஷ். ""அந்தப் பகுதிக்கு சிமெண்ட் ரோடு போடக் கூடாது'' எனத் தடையாக நின்ற கிள்ளி வளவனைப் பொதுமக்கள் ஆதரவோடு முறியடித்துள்ளார் சுரேஷ்.
இவைதான் கிள்ளிவளவனுக்கும் சுரேஷ்க்கும் இடையிலான பகை வளரக் காரணமான சம்பவங்கள். ஆனால், சுரேஷ் ஆதரிக்கும் சேர்வார் சாதியினரையோ பிற சாதி இந்துக்களையோ தாக்கி, வாயில் மலத்தை திணிக்கும் கொடூரத்தைச் செய்ய கிள்ளி வளவன் முற்படவில்லை. ""ஒரு பள்ளப் பயல், தனக்கு எதிராக செயல்படுவதா'' என்ற சாதிவெறியே சுரேஷ் மீதான தாக்குதலுக்குக் காரணம்.
சமமான அந்தஸ்துள்ள சாதியினரைத் தாக்குவதற்கும், ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதனாலேயே வாயில் மலத்தைத் திணித்து தாக்குவதற்குமான சாதிவெறியின் கொடூர முகத்தை எளிதில் உணர முடியும். ஆனால், கொலைவெறியோடு தாக்கிய அந்த சாதிவெறி கும்பலின் மீது கொலை முயற்சி வழக்குக் கூடப் பதிவு செய்யாமல், கொலை மிரட்டல் விடுத்ததாக மட்டும் வழக்குப் பதிவு செய்துவிட்டு, சுரேஷ் மீது மாடு திருடியதாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசு துறையை இயக்குவது எது?
இரவு 11.30 மணிக்கு தாக்கப்பட்டு, 1 மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேஷை, மறுநாள் மதியம் 3 மணி வரை நேரில் சந்தித்து வாக்குமூலத்தைப் பெற போலீசு துறை முயற்சிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரில் கணேஷ், செந்தில் அரசு ஆகிய இரண்டு பேரை மட்டும் பெயரளவிற்குக் கைது செய்து விட்டு, பிற குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிய போலீசு உதவியது. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி தாழ்த்தப்பட்ட மக்கள், பகுஜன் சமாஜ் கட்சி தலைமையில் சமயநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது அவர்களைப் பேசவிடாமல் தடுத்தும், ஒலிபெருக்கியை முடக்கச் செய்தும் அடாவடித்தனம் செய்தது போலீசு. கிள்ளிவளவனோ ஆர்ப்பாட்டத்திற்கு எதிரில் திமிராக நின்று புகைப் பிடித்துக் கொண்டிருந்தான். பின்னர் ஆர்.டி.ஓ. விசாரணை, தாசில்தார் விசாரணை எல்லாம் முடிந்த பிறகு, மற்ற குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்து, உடனடியாகப் பிணையில் வெளிவரவும் உதவியுள்ளது போலீசு. நீதித்துறையும் இதற்குத் துணை போயுள்ளது.
கிள்ளிவளவன் உட்பட குற்றவாளிகள் 9 பேரும் சுதந்திரமாக வெளியே திரிகின்றனர். அவர்கள் மீது சுரேஷûக்குக் கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்கு நடந்து வருகிறது. சுரேஷ் மீது மாடு திருடிய வழக்கும் நடந்து வருகிறது. குற்றவாளிகள் ஊருக்குள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஊருக்குள் போனால் மீண்டும் தாக்கப்படலாம் என்பதால், சுரேஷ் ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறார். தி.மு.க. தலைமையோ, தனது கட்சி ஊழியர் இப்படி வன்கொடுமைக்கு ஆளான பின்னரும் சாதிவெறியர்களுக்கு எதிராக வாய் திறக்க மறுக்கிறது.
திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டோர் வாயில் மலத்தைத் திணித்து வன்கொடுமையை ஏவிய சாதிவெறியர்கள் மீதான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனை மட்டுமே அளித்து நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், சுரேஷ்குமார் மீது வன்கொடுமையை ஏவிய தேவர் சாதிவெறியர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்று நம்ப முடியுமா?
சட்டம், நீதிமன்றம், போலீசு, அதிகார வர்க்கம், ஓட்டுப் பொறுக்கிகள் அனைத்துமே தாழ்த்தப்பட்டோரை வஞ்சித்து ஏய்க்கும்போது, இனி தாழ்த்தப்பட்டோர் தமது சமூக உரிமைகளுக்காக அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து ஆதிக்க சாதிவெறிக் கும்பலைத் தனிமைப்படுத்தி, அக்கும்பலின் வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து சிவில் உரிமைகளையும் ரத்து செய்யுமாறு, சட்ட வரம்புகளை மீறித் தெருப் போராட்டங்களில் இறங்குவதைத் தவிர, வேறென்ன வழி இருக்கிறது?
பு.ஜ. செய்தியாளர், மதுரை.