சமர்ப்பணம்:
விளக்கின் ஒளி தேடியோடித், தீச் சூட்டில் கருகிப்போன
என் விட்டில் குழந்தைகளுக்குச் சமர்ப்பணம்.
**************************************************
(1)
எனக்கொரு ஊர் இருக்குப் பாருங்கோ
அதுக்கு ஒர் பெயரும் இருக்குப் பாருங்கோ!
பெயர் என்ன பெயர் ஊர்க் கதை பேசுவம் வாங்கோ (ஊர்க் கதை பேசுறதுதானே எங்களுக்குப் பிடிச்ச விசயம்)
ஊரில எல்லாரும் ஒருமாதிரியில்லப்
பாருங்கோ!
அங்க முண்டங்களாயும், முடங்களாயும்,
செவிடாயும், குருடாயும் இருக்குது ஒரு கூட்டம்!
தனியே ஊமையாயும் ஒரு கூட்டம் இருக்குது பாருங்கோ!
எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமலும்
ஒரு கூட்டம் இருக்குது பாருங்கோ!
கூட்டத்துக்கு எல்லாம் அதிகாரம் செய்ய
ஒரு பருத்த கூட்டமும் இருக்குது பாருங்கோ!
அதிகாரக் கூட்டத்துக்கும் அதிகாரம் செய்ய
ஒரு முதலைக் கூட்டமும் ஊரில இருக்குது கேளுங்கோ!
ஊருக்குள்ள ஒரு நாள் வெள்ளை முகத்தோட
எல்லாப் பல்லும் சிரிச்சபடியும், கறுத்த உடையோடும், பெருத்த
பெட்டிகளோடும்
வெளி ஊரில் இருந்து வந்தாங்கள்.
அவங்கள்
அதிரகாரக் கூட்டம்தான் ஓடிப்போய் அவங்களுக்கு
வளைந்து நெளிந்து வரவேற்புச் செய்ததது முதலில்.
முதலைக் கூட்டமோ பெரிய குளிர் அறைகளில்
வெளியூர்க் கூட்டத்துக்கு விருந்து வைத்தது.
எங்கள் ஊர்க் குளங்களில் இன்னும் சில முதலைகளை உருவாக்க
வெளியூர்க் கூட்டமும் முதலைக் கூட்டமும் ஒப்பந்தங்கள் சில போட்டதாய்
மறுநாள் பத்திரிக்கைகள் கூச்சல் போட்டன.
ஊரில் உள்ள முண்டங்களுக்கு தங்கள் முகச் சாயலில்
முகங்கள் செய்து கொடுத்தது வெளியூர்க் கூட்டம்,
தங்களின் ஊர்க் கண்ணாடிகளில் மட்டுமே முகம் பார்க்க வேண்டும் என்ற
நிபந்தனையுடன்!.
முடங்களாய் இருந்த கூட்டத்துக்கு
போலிக் கால்கள் செய்து போட்டு
அவை நடக்க வேண்டிய பாதைகளை தாங்களே சொல்லியும் கொடுத்தது
அந்த வெளியூர்க் கூட்டம்.
செவிடாய் இருந்த கூட்டத்துக்கு எந்நேரமும்
தங்கள் புகழ் பாடும் பாடல்கள் அடங்கிய செவிட்டு யந்திரங்களை
இலவசமாக அள்ளியும் கொடுத்தன.
குருடாய் இருந்தவருக்கும், ஊமையாய் இருப்பவர்க்கும்
தங்கள் ஊர்க் கதைகளைச் சொலிக்கொடுக்கவும்
மேலும் உள்ளூரில் முண்டங்களாகவும், முடவர்களாகவும், செவிடராகவும்,
பல புதிய கூட்டங்களை உருவாக்கவும் நிறுவனங்களை அமைத்தும்
விட்டது அந்த வெளியூர்க் கூட்டம்.
இப்ப எல்லாம் எங்கள் ஊரில் எது நடந்தாலும்
வெளியூர்க் கூட்டம் நிச்சயம் ஒரு கருத்துச் சொல்லும்
எங்கள் ஊர்ப் பத்திரிகைகளும் வெளியூர்க் கூட்டத்தின் புகழ் பாடிப்பாடியே
சருகாகிப் போயின பாருக்கோ!
பல புது வெளியூர்க் கூட்டங்கள்
எங்கள் அதிகாரக் கூட்டத்தின் அழைப்பின் பெயரில்
தினமும் வந்த வண்ணமே இருக்குது பாருங்கோ!.
மெல்ல மெல்ல எனது ஊரும்
தனது சுயம் இழந்தே போனது.
முண்டங்கள் தங்களுக்கு கிடைத்த புதிய முகங்கள் பற்றிய ஆணவத்துடன்
ஊரில் அங்குமிங்கும் திரிந்தன பாருங்கோ!
ஊரில் உள்ள எல்லாக் கூட்டங்களும் தங்கள் பொது அடையாளங்களை
மறந்தேபோய் வெளியூர்க் கூட்டத்தின் பொம்மலாட்டத்தில் ஆடின கேளுங்கோ!
ஊரில திடிரென ஒருநாள்
புரட்சிக் கூட்டம் ஒன்று உருவானது
புரட்சிக் கூட்டத்துக்கு பயந்து பின்னங்கால் பிடரியில் பட
அதிகாரக் கூட்டம் ஓட்டம் எடுத்தது பாருங்கோ!
முதலைக் கூட்டமோ புரட்சிக் கூட்டத்துடன்
ஒப்பந்தம் போட முன்னுக்கு வந்து நின்றது பாருங்கோ!
பின்னாலே வெளியூர்க் கூட்டமும் நின்றிந்தது கள்ளப்
புன்னகையுடன்.
(2)
ஊரில உள்ள எல்லாத் தீப்பந்தங்களையும் முதலைக் கூட்டம்
மிகக் கவனமாக அங்குமிங்கும் ஒளித்து வைத்துவிட்டது.
எங்கேனும் ஒரு தீ மெதுவாகப் பரவிவிடும் என்ற அச்சத்தில்
வித விதமான போதை நீரைச் சற்றே அதிகமாய்த்
தெளித்தும் இருந்தன.
சிகப்பு நாளிலும் தீப்பந்தங்களை தங்கள் ஒளித் தேவைக்காக
முதலைகளே கண்ணும் கருத்துமாய்
தங்களின் கைகளிலேயே
வைத்து இருந்தன பாருங்கோ!
எந்தக் கூட்டமும் சிகப்பு நாள் பற்றி தீப்பந்தங்களிடம்
பேசுவதில்லைப் பாருங்கோ!
தீப்பந்தங்களின் மதிகள் எல்லா நாளும் மங்கியே
இராது பாருங்கோ!
என்றாவது ஒருநாள் முதலைகளின் கொட்டத்தை
அவை எரித்தே தீரும் என்று கனாக் காணமல்
ஊரில் உள்ள எதிர்காலங்கள் எல்லாம் இன்றே
ஒன்று சேர்ந்து தீப்பந்தங்களை கையில் எடுங்கோ
இனியொரு புது விதி செய்வோம் எனச்
சபதமிடுங்கோ!.
உலகமெல்லாம் அன்பு மொழி பேசி
அடிமைச் சங்கிலியை உடைத்தெரியுங்கோ
மதிதன்னை எந்தச் சூதும் கௌவ்வாமல்
கவனமாக காத்து நில்லுங்கோ.
இன்றே புறப்படுங்கள்
இனியொரு புது விதி செய்வோம்.
தொடரும்.......
13.05.2012