முதன்முதலாக புளொட்டுக்குள் ஸ்தாபன கோட்பாடு அறிமுகம்:
ஸ்தாபன கட்டுப்பாடுகள் மூலம் இயக்க நடவடிக்கைகளை ஒழுங்குக்குள் கொண்டுவர டொமினிக் நடவடிக்கை!!
புளொட்டின் தள இராணுவப் பொறுப்பாளர் ரமணனும் யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சின்னமெண்டிஸும் தளநிர்வாகத்துடனும் மக்கள் அமைப்பினருடனும் முரண்பட்டு நின்றதால் சின்னமென்டிஸை யாழ் மாவட்ட அமைப்புக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கால் கேட்டுக்கொள்ளப்பட்டு யாழ்மாவட்ட அமைப்புக்குழுக் கூட்டங்களில் சின்னமெண்டிஸ் கலந்துகொண்டிருந்தபோதும் கூட அவர்களது செயற்பாடுகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. யாழ்மாவட்ட அமைப்புக்குழு கூட்டங்களில் தனது கருத்துக்களையோ அல்லது அபிப்பிராயங்களையோ தெரிவிக்காமலே ஒரு பார்வையாளர் போல் கலந்துகொள்ளும் சின்னமெண்டிஸ் வழமைபோல் தளநிர்வாகத்துடனும் மக்களமைப்புடனும் முரண்பாடான போக்கைக் கொண்டவராகவே காணப்பட்டார்.
தளம் வந்திருந்த படைத்துறைச் செயலர் கண்ணன் தொடர்ச்சியாக புகைபிடிக்கும் பழக்கத்தைக் கொண்டவராகக் காணப்பட்டார். படைத்துறைச் செயலர் கண்ணனைத் தொடர்ந்து தளம் வந்திருந்த சின்னமெண்டிஸ் உட்பட இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினரும் கூட தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதனால் படைத்துறைச் செயலர் கண்ணன் மக்கள் அமைப்பில் செயற்பட்டவர்களிடமிருந்து புகைப்பிடித்தல் பற்றிய விமர்சனத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
படைத்துறை செயலர் கண்ணன்(சோதீஸ்வரன்)
இதில் மக்களமைப்பைச் சேர்ந்தவர்களாகிய எமது பக்கம் கூட சில வரட்டுத்தனமான பார்வைகள் இருந்தது உண்மை என்றபோதிலும், யதார்த்தத்தில் சில மறுக்கமுடியாத உண்மைகளை உள்ளடக்கிய விமர்சனமாகவும் இது அமைந்தது. பல்வேறு ஒழுக்கக்கேடுகளையும், சீரழிவுகளையும், குறைபாடுகளையும் தன்னகத்தே கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பின் விளைபொருளான ஒரு மனிதன் விடுதலை அமைப்புக்குள் இணைந்தவுடன் தனது கடந்தகாலத்திலிருந்து உடனடியாகவும் முற்றுமுழுதாகவும் துண்டித்துக் கொள்ள வேண்டும், "தூய்மை"யான புரட்சியாளனாக மாறவேண்டும் என நாம் கருதியது எமது பக்கத் தவறாகும்.
அதேவேளை நாம் எமது செலவுகளுக்கென மக்களின் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பணத்தைச் சேகரித்துக் கொண்டு, மக்கள் பணத்தில் இத்தகைய அநாவசிய செலவுகளை செய்வதுகூட தவறான ஒரு செயலே ஆகும். 1983ன் பிற்பகுதியில், தோழர் தங்கராஜாவால் அரசியல் பாசறைகள் நடத்தப்பட்ட ஆரம்பநாட்களில் பாசறையில் பங்குபற்றுபவர்களுக்கான உணவுக்கு அமைப்பின் பணமே செலவாகி வந்தது.
ஆனால் தோழர் தங்கராஜா, கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி போன்றோர் இந்த நிலையை மாற்றியமைத்தனர். நாம் மக்களுக்காகப் போராடுவதால் மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்காளிகளாக மாறவேண்டும், மக்களது பங்களிப்பு அவசியம் இருக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். இதனடிப்படையில் மக்களிடமிருந்து உணவைப் பெற்று அரசியல் பாசறைகளில் பங்குபற்றுபவர்களுக்குக் கொடுப்பதென்றும், அமைப்பின் பணத்தில் உணவு வாங்குவதை கூடியவரை தவிர்ப்பதென்றும் முடிவு செய்திருந்தனர். மக்களிடமிருந்து உணவைப் பெறும்போது மக்களுடனான உறவு வலுப்படும் அதேவேளை அமைப்பினரும் கூட அந்த மக்களுக்கு விசுவாசமாகவும் மக்களின் நலன்களுக்காகவும் செயற்படுவார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
அன்றிலிருந்து மக்களது உணவிலேயே நாம் தங்கியிருந்தோம். பாசறைகளில் பங்குபற்றுபவர்களிலிருந்து இந்தியாவுக்கு பயிற்சிக்குச் செல்ல வருபவர்கள் வரைக்கும் தமது உணவுக்கு மக்களிலேயே தங்கியிருந்தனர். மக்களது பணத்திலும், மக்களது உணவிலும் தங்கியிருந்த நாம், மக்களது பணத்தை புகைப்பிடித்தல் போன்ற அநாவசியமான செலவுகளுக்குப் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தோம். இந்தநிலையில் படைத்துறைச் செயலர் கண்ணன் தனது புகைப்பிடித்தலை குறைத்துக் கொண்டதுடன் மெண்டிஸ் உட்பட ஏனைய இராணுவப் பிரிவினரையும் அதைப் பின்பற்றும்படி வேண்டினார்.
(சின்னமெண்டிஸ்)
தளநிர்வாகத்துடனும், மக்கள் அமைப்பினருடனும் முரண்பட்டு நின்ற இராணுவப் பொறுப்பாளர்களும் அவர்களது செயற்பாடுகளும் அமைப்புக்குள் ஒருவகையான குழப்பநிலையை தோற்றுவித்திருந்தது. இத்தகைய முரண்பாடுகளையும் குழப்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவையை உணர்ந்துகொண்ட தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக் அதற்கான பணியில் இறங்கினார். புளொட் என்ற அமைப்பு உருவான காலத்திலிருந்தே அதற்கென ஒரு ஸ்தாபனக் கோட்பாடுகளோ, கட்டுப்பாடுகளோ இருக்கவில்லை என்பதால் அத்தகையதொரு ஸ்தாபனக் கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் அங்கத்தவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் அமைப்புக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கும் குழப்பநிலைகளுக்கும் முடிவு கட்டலாம் என டொமினிக் கருதினார்.
டொமினிக்(கேசவன் -புதியதோர் உலகம் ஆசிரியர்)
இதற்கு ஆதரவான கருத்தையே மக்களமைப்பைச் சேர்ந்த நாமும் கொண்டிருந்தோம். டொமினிக்கின் கடின உழைப்பின் மூலம் மிகக்குறுகிய காலப்பகுதிக்குள் "ஸ்தாபனக் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும்" என்ற சிறுகையடக்கத்தொகுப்பு எழுதி முடிக்கப்பட்டது. இந்தக் கையடக்கத் தொகுப்பை யாழ்ப்பாணத்தில் "செய்தி மக்கள் தொடர்பு திணைக்களம்" அச்சேற்றி வெளியிட்டது. புளொட்டின் இராணுவப் பிரிவினர் உட்பட அனைத்து அங்கத்தவர்களுக்கும் "ஸ்தாபனக் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும்" வழங்கப்பட்டதோடு, அனைத்து அமைப்பு அங்கத்தவர்களும் ஸ்தாபனக் கோட்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடக்கவேண்டும் என்றும் அதில் வலியுறுத்திக் கூறப்பட்டிருந்தது. ஸ்தாபனக் கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பதில் மக்கள் அமைப்பைச் சார்ந்தவர்களுக்கோ, மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பைச் சார்ந்தவர்களுக்கோ கடினமானதொன்றாக இருக்கவில்லை. ஆனால், குறிப்பாக இராணுவப் பொறுப்பாளர்களுக்கும் இராணுவப் பிரிவைச் சேர்ந்த ஒரு பகுதியினருக்கும் ஸ்தாபனக் கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பதென்பது கடினமானதொன்றாகவே இருந்தது.
எமது இராணுவம் ஒரு புரட்சிகர இராணுவம், மக்கள் இராணுவம் என்று மக்கள் மத்தியிலான கருத்தரங்குகளிலும், எமது பிரச்சார வெளியீடுகளிலும், தமிழீழத்தின் குரல் வானொலிச் சேவையிலும் பறைசாற்றிக் கொண்டிருந்தோம். ஆனால், நடைமுறையில் எமது இராணுவம் "புரட்சிகர" என்ற சொல்லில் இருந்து வெகுதூரம் விலகி நின்றது மட்டுமல்லாமல், மக்களிலிருந்து அன்னியப்பட்டுக்கொண்டிருந்த ஒரு இராணுவமாகவும், மக்கள் அமைப்பினருடன் முரண்பட்டுநின்ற ஒரு இராணுவமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
AK-47 தோளில்தொங்க அரசியல்பாசறை நடாத்திய SR சிவராம்
(எஸ்.ஆர் என்று புளொட்டினுள்ளும் ஊடகத்துறையினரால் பின்நாட்களில் தராக்கி என்றும் அழைக்கப்பட்ட சிவராம்)
தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த இராணுவப் பொறுப்பாளர்கள் தளநிர்வாகத்துடனும் மக்கள் அமைப்பினருடனும் முரண்பாடுகளை கொண்டிருந்ததை அறிந்திருந்த எஸ்.ஆர் என்று அழைக்கப்பட்ட புவிராஜகீர்த்தி சிவராம் இந்த முரண்பாடுகளை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி தன்னை முன்னணிக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை - சூழ்ச்சிகளை- செய்யத் தொடங்கினான். பிரதேசவாதத்தையே தனது தாரக மந்திரமாகக் கொண்டிருந்த மத்தியகுழு உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான ஈஸ்வரனுடனும் சின்னமெண்டிஸுடனும் நெருக்கமான உறவை கொண்டிருப்பதே தனது எதிர்கால அரசியலுக்கு பயனுள்ளது என உணர்ந்து கொண்டான். அசோக் என்று அழைக்கப்பட்ட யோகன் கண்ணமுத்துவினதும், ஈஸ்வரனினதும் சிபார்சின் பேரில் எஸ்ஆர் என்று அழைக்கப்பட்ட புவிராஜகீர்த்தி சிவராம் சுழிபுரம் வழக்கம்பரை அம்மன் கோவிலடியில் படைத்துறைச் செயலர் கண்ணனைச் சந்தித்துவிட்டு வெளியே வந்து அங்கு கூடியிருந்த இராணுவப்பிரிவு உறுப்பினர்களிடம் " நான் படைத்துறைச்செயலர் கண்ணனில் ஸ்டாலினை கண்டேன்" என்று கண்ணனைப் புகழ்ந்து துதிபாடத் தொடங்கினான்.
அரசியல் மற்றும் இராணுவ விடயங்களில் சராசரி விடயங்கைக் கூட சரிவர புரிந்து கொண்டிராத படைத்துறைச்செயலர் கண்ணனை ஸ்டாலினுடன் ஒப்பிட்டதன் மூலம் தனது சூழ்ச்சித்தனமான நோக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டான் எஸ்.ஆர் என்றழைக்கப்பட்ட புவிராஜகீர்த்தி சிவராம். யாழ்மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் மென்டிஸுடனும் இராணுவப் பிரிவைச் சேர்ந்த ஒருபகுதியினருடனும் மிகவும் நெருக்கமாகிக் கொண்டிருந்த சிவராம் படைத்துறைச் செயலர் கண்ணனை ஸ்டாலின் என்று புகழ்ந்து துதிபாடியதன் மூலம் இராணுவப்பிரிவினரை உச்சிகுளிரப் பண்ணியிருந்தான். இராணுவப் பிரிவினருடன் ஏற்பட்ட நெருக்கத்தைப் பயன்படுத்திய எஸ்.ஆர் என்ற சிவராம் "இராணுவம் வேறு அரசியல் வேறு என்று பிரித்துப்பார்க்கக் கூடாது" என்ற தனது "புதிய கண்டுபிடிப்பை" முன்னெடுத்துச் சென்று தனக்குப் பின்னிருந்த கூட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கினான். இராணுவ பயிற்சியே பெற்றிராத சிவராம் யாழ்ப்பாணத்தில் வேலணையில் நடைபெற்ற ஒரு அரசியல் பாசறையில் ஏ.கே 47 துப்பாக்கியை தனது தோளில் தொங்கவிட்டபடியே புளொட்டினுள் தன்னிடம் மட்டும்தான் அரசியலும் இராணுவமும் ஒன்றாகக் காணப்படுகின்றது என்ற மிகவும் கேலிக்கிடமான கருத்துக்களை வெளியிட்டான்.
இந்த கேலிக்கிடமான கருத்துக்களைக் கூட எஸ்.ஆர் என்ற சிவராம் தனது பேச்சுவன்மையாலும், கவர்ச்சிகரமான பேச்சாலும் அரசியல் பாசறைகளில் கலந்துகொண்டவர்களிடம் கொண்டு செல்வதில் ஓரளவு வெற்றி கண்டான். இத்தகைய கருத்துக்களுடாக எஸ்.ஆர் என்ற சிவராம் தன்னைப்பற்றிய ஒரு பிரமையை அமைப்பு உறுப்பினர்களிடத்தில் ஏற்படுத்திக் கொண்டிருந்தான். பார்த்தன் தள இராணுவப் பொறுப்பாளராக செயற்பட்ட காலத்தில் இருந்து அரசியல் வேறு இராணுவம் வேறு என்ற நிலையோ அல்லது இராணுவப் பிரிவும் அரசியற் பிரிவும் முரண்பட்டோ, பரஸ்பர ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் இன்றியோ செயற்பட்டது கிடையாது. அப்படி செயற்படுவது தவறானதும் கூட என்பதை நாம் நன்கு அறிந்திருந்தோம். ஆனால் எஸ்.ஆர் என்ற சிவராமின் நோக்கமே அமைப்புக்குள் இராணுவப் பிரிவுக்கும் அரசியற் பிரிவிக்கும் இடையில் தோன்றியிருந்த முரண்பாட்டை பயன்படுத்தி தன்னை முன்னணிக்கு கொண்டு வருவதாகவே இருந்தது.
புளொட் என்ற அமைப்பையும் அதன் கொள்கையையும் முதன்மைப்படுத்தி அரசியல் வகுப்புகளை நடத்துவது என்பதைவிட தன்னையும் தனது கருத்துக்களையும் முதன்மைப்படுத்தி தனக்கு பின்னால் ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டிருந்தான் எஸ் ஆர் என்ற சிவராம். இதனால் எஸ்.ஆர் என்ற சிவராமை சுற்றிய ஒரு கூட்டம் புளொட்டினுள் விரிவடைந்து கொண்டிருந்தது. மாணவர் அமைப்பு, மகளிர் அமைப்பினரில் ஒரு பகுதியினரும் சிவராமினது போலித்தனமானதும் கேலிக்கிடமானதுமான நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களாலும் செயற்பாடுகளாலும் கவரப்பட்டவர்களாய் இருந்தனர். அரசியல் வகுப்புக்களை நடத்திக் கொண்டிருந்த பாசறை ரவி(முத்து), ரகு, பிரசாத் போன்றவர்கள் கூட எஸ்.ஆர் என்றழைக்கப்பட்ட சிவராமின் கவர்ச்சிமிக்க பேச்சுக்களால் சிவராமைச் சுற்றி அணிதிரண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
இதே காலப்பகுதியில் இந்தியாவில் தோழர் தங்கராஜாவின் அரசியல்பாசறைகளில் பங்குபற்றியவர்கள் தளம் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்தியாவில் இராணுவப்பயிற்சி முடித்தபின் தோழர் தங்கராஜாவின் அரசியல் பாசறைகளில் பங்குபற்றி, அரசியல் செயலர் சந்ததியாரால் தெரிவுசெய்யப்பட்ட இவர்களை தளத்துக்கு அனுப்பிவைத்ததன் நோக்கம் அரசியல் வகுப்புக்களை நடாத்துவதற்கு ஆகும். இவர்களில் வவுனியா சத்தியன், டானியல், பிரகாஷ் போன்றவர்களும் அடங்கியிருந்தனர். அரசியல் வகுப்புக்களை நடாத்துவதற்காக இந்தியாவிலிருந்து தளம் அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் ஆன்மாவை இழந்துவிட்ட மனிதர்களைப் போல் காணப்பட்டனர். இதில் வவுனியா சத்தியன் புளொட்டின் ஆரம்பகாலங்களில் பெரியமுரளி, தோழர் தங்கராஜா, யக்கடயா இராமசாமி போன்றோருடன் வவுனியாவில் செயற்பட்டுவந்த ஒருவர்.
சத்தியன் அமைப்பு வேலைகளாக யாழ்ப்பாணம் வரும்போதெல்லாம் கொக்குவிலில் என்னுடனேயே தங்குவது வழக்கம். அக்காலத்தில் ஓரளவு அரசியல் தெளிவுள்ளவராக இருந்த சத்தியன், எதையுமே வெளிப்படையாகப் பேசுபவராகக் காணப்பட்டதோடு மிகவும் நட்புறவோடும் பழகக்கூடியவர். ஆனால் சத்தியன் இந்தியா சென்று இராணுவப்பயிற்சி முடித்து தளம் வந்தபின் என்னுடன் பேசுவதற்கே தயங்குபவராகக் காணப்பட்டார். முன்பு அவரிடம் காணப்பட்ட வெளிப்படையாகப் பேசும் தன்மை, நட்புறவாகப் பழகுதல் எல்லாமே அவரிடமிருந்து தொலைந்துவிட்டிருந்தது. இதற்கான காரணத்தை அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16