ஒன்றாம் தேதி நக்கீரன் இணையதளத்தில் பார்த்துக்கொண்டிருந்த போது ரோபோ தாக்கி இளம்பெண் பலி- திருப்பெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையில் பெண் பலி என போட்டிருந்தது. இரண்டாம் தேதி காலை நாளிதழ்கள் எதிலுமே எந்த நிறுவனம் என்று போடவில்லை. பெட்டி செய்தியாக விபத்தில் பலி என்றே செய்தியாக்கப்பட்டிருந்தது.
என்ன நடந்தது என்பதை வினவில் படித்து தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இரண்டாம் தேதில் மாலையில் தான் அப்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து கிடைக்கும் என ஒரு நண்பர் சொன்னார். இருந்தாலும் காலையில் செல்வதென தீர்மானித்து காலையிலேயே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றேன். பிணவறையை தேடிக் கண்டுபிடித்து அருகில் செல்லும் போது ,
ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனை சுற்றி 40 உளவுப்பிரிவு போலீசார்கள் மொய்த்துக்கொண்டிருந்தனர். யாராவது வந்தால் அவர்களை நோட்டம் விடுவது அவர்களுக்கு வேலையாய் இருந்தது. ஆட்டோக்காரரிடம் விசாரித்தேன்” நோக்கியாவுல செத்துச்சே அந்தப்பொண்ணு பாடி எப்ப வரும்?” “தெரியலப்பா, இப்ப ஒரு குடிகாரன் வூட்டுலயே கதவ சாத்திகிட்டான் அதான் நடக்குது என்றார்”
பிணவறைக்கு அருகிலிருந்த மரங்களுக்கு கீழே சில ஆண்கள் இருந்தார்கள். சில பெண்களும் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் மிகத்தீவிரமாய் எதையும் விவாதிக்கவில்லை, ஆனால் மெதுவாய் எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திலே உடல் வந்தது. அந்த ஆண்களும் பெண்களும் அந்த உடலின் அருகே சென்றார்கள். நானும் அருகில் சென்று பார்த்தேன் நோக்கியாவில் கொல்லப்பட்ட அதே அம்பிகா தான் அது. ஒரு துளி சத்தம் கூட இன்றி, கண்ணீரின்றி அந்த உடன் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டது. சில ஆண் தொழிலாளிகள் அந்த ஆம்புலன்ஸில் ஏறிப்போனார்கள்.
உளவுத்துறையோ வாகனத்தில் பறந்தது. மீதியிருந்த தொழிலாளிகள் கிளம்பிப்போனார்கள். ஒரு ஆண் தொழிலாளியிடம் பேச்சுக்கொடுத்தேன்.”எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, நாளை எங்களுக்கும் நடக்கும், அந்த மெஷின்ல சென்சார் ஒழுங்கா வேலை செய்யல. திமுக தொழிற்சங்கம் கம்பெனிக்குத்தான் வக்காலத்து வாங்குது. நாங்க எல்லாம் நிரந்தர தொழிலாளிகள். நாங்க இன்னைக்கு யாரும் வேலைக்குப்போக வில்லை. சவ ஊர்வலத்துக்கு நாங்க போகப்போறோம்
சிலரிடம் பேசியபோது வேறு சில விபரங்கள் தெரியவந்தது. நோக்கியாவின் அந்தப் பெண் தொழிலாளி சிக்கி மருத்துவவமனைக்கு எடுத்து செல்லப்பட்டவுடன், அந்த இயந்திரம் துடைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டிருக்கிறது. மேலும் அப்பெண்ணின் சவ ஊர்வலத்திற்கு ஒப்பந்த தொழிலாளிகள் செல்லக்கூடாதென்று நிர்வாகத்தின் சார்பில் மிரட்டல் விடுத்திருக்கிறது. ஆதலால் எந்த ஒப்பந்தத்தொழிலாளியும் வரவில்லை.
அந்த இயந்திரத்தில் சுமார் இருபது நிமிடமிருந்த அப்பெண்ணின் உடல் , அவரின் கதறல்கள் எல்லாம் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு ஆதாரங்கள். ஏன் மூன்று மாதங்களுக்கு முன் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 300க்குமேற்பட்டோர் விசவாயுக்கசிவினால் பாதிக்கப்பட்டபோது அது விரதத்தால் வந்த வினை என்றான் நோக்கியா. இப்போது எட்டாம் தேதிக்கு பஞ்சாயத்து ஒத்தி வைக்கப்படுகிறது.
தொழிலாளி தன் உரிமைகளைப்போராடித்தான் பெற வேண்டுமே ஒழிய இப்படி பஞ்சாயத்தில் அல்ல. தினம் நூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்த அப்பெண்ணின் உயிர் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்யும் பன்னாட்டு நிறுவனத்தின் ஊடாக நிறுத்தப்பட்டது. முதலாளித்துவத்தின் உலகளாவிய இந்தப்பயணம் இன்னும் பல தொழிலாளர்களின் உயிரைக்கோருகின்றது.
வெளி நாட்டுக்காரனாயிருந்தாலும் நோக்கியா நம் நாட்டு விழாக்களுக்கு தவறாமல் காவு கொடுக்கிறான். முன்னர் ஆகத்து 15 ஐ ஒட்டி 300 தொழிலாளிகளுக்கு வாந்தி ,மயக்கம். தீபாவளியை ஒட்டி அம்பிகாவின் கொலை. தொழிலாளிவர்க்கம் என்பது மிகப்பெரிய வெடிகுண்டின் திரி. நெருப்புதான் வர்க்க உணர்வு. உணர்வு வரும் போது தானாய் வெடிக்கும், வெடிக்க வைக்கப்படும் போது முதலாளித்துவ சாம்ராஜ்யம் தூளாகும்
பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் போது சில தொழிலாளிகள் தனக்குள் பேசிக்கொண்டார்கள் “கொடுமை”. அப்பெண் முதலாளித்துவ பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டது தெரிந்தும் அதற்கெதிராக போராடாது இருப்பதல்லவா கொடுமை!