கேரளக் கடற்கரையோரத்திலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு கள்ளத் தோணியில் புறப்பட தயாராகவிருந்த 15-பேர் காவல்த்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் அவர்கள் இருந்த அகதி முகாமிற்கு கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். வந்தவர்கள் சும்மா இருந்துவிடவில்லை, தம்மைக் காட்டிக் கொடுத்தவர்கள் என இரண்டொருவரை வெட்டித்தள்ளி வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்தார்கள். இது ஆகஸ்ட்மாத 9-ம் திகதிய தமிழகப் பத்திரிகைகளின் செய்தி.
இனி 4-8-10 ஜுனியர் விகடன் சஞ்சிகையில் பார்த்த ஒரு விடயம். கவிஞரும், சினிமாப் பாடகருமான புகழ் பூத்த தாமரை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு 30-நாட்கள் பயணம் சென்று வந்திருக்கும் அவர் வழங்கியுள்ள செவ்வியைப் படித்ததால் புல்லரிக்கும. அப்படியே தமிழ் ஈழத்தில் தான் இருக்கிறோம் என்ற பிரமிப்பிற்கு ஆளாவோம். மேலை நாடுகளில் நாடுகடந்த ஈழத்திற்காக போராடுகிறவர்கள் தாமரைக்கு அப்படியொரு நம்பிக்கையை வழங்கியிருக்கின்றார்கள். முடிவுரையாக அவர் சொல்வார் “தலைவர் பிரபாகரன்” உயிருடன் இருப்பதாக அவர்கள் உறுதியாக நம்புகின்றார்கள். மே 17-வரை போர்க்களத்தில் இருந்த எப்படியோ தப்பி வந்த சிலரும் இதனை மறுக்கவில்லை. அதே நேரம் ‘தலைவர் வருவார். தமிழீழம் பெற்றுத் தருவார்’’ என்கின்ற முழக்கத்தை தவிர்த்து, ‘நாம் போராடித் தமிழீழம் பெறுவோம், அதனைத் தலைவர் கையில் தருவோம்’ என முழங்கும்படி நான் வேண்டினேன். உலகளாவிய அளவில் இப்போது உருவாகி இருக்கும் ஆக்கபூர்வமான கைகோர்ப்புக் – கைகோப்பு கண்டிப்பாகத் தலைவர் கையில் தமிழீழத்தை ஓப்படைக்கும்” நரம்புகளில் நம்பிக்கை தெறிக்கச் சொலகிறார் தாமரை (இறுதி வரியும் ஜீனியர் விகடன் உபயம்.)
தாமரையின் தமிழீழப்பற்று!
தாமரையின் தாயுள்ளம் மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரை இன்னும் இரத்த வெள்ளம் ஓடிட வேண்டாம் என்பதில் வெளிப்படுகின்றது. அதனால் தான் தலைவர் வந்து பெற்றுத் தருவதாக இல்லாமல், டொலர்-ஈரோ தேசத்துப் புலம்பெயர் குடிகளைப் பார்த்து, டொலரை-ஈரோவை வைத்து என்னவாச்சும் பண்ணி ஈழத்தை வாங்கி தலைவர் கையில் கொடுக்கச் சொல்லியுள்ளார். டொலரை வைத்து அம்மணியை வந்து போக ஏற்பாடு பண்ணி இது போல எதையாச்சும் வாய்ச் சவடால்களைப் பேச வைத்து நிதிதிரட்டலுக்கு வாய்க்கால் வெட்ட முடியுமே அல்லாமல், ஈழத்தை வெட்டியெடுக்க முடியுமா?
அதென்னங்க அப்பிடியொரு இழக்காரம் முன்னதாக தொடக்கத்தில் அம்மணி சொன்னதைப் பாருங்க: “இந்த நேரத்தில் ஈழத்தின் வீழ்ச்சி குறித்து மனம் வெதும்பிக் கிடப்பது மூடத்தனம். அதனால்தான், அடிபட்ட புலியாய் மறுபடியும் ஆர்த்தெழத் தொடங்கி இருக்கிறது தமிழினம். 20-ற்கும் மேற்பட்ட நாடுகளில் ‘தமிழீழ அரசு’ அங்கீகரிக்கப்பட்டு, இருக்கின்றன. சட்டத்திற்கு உட்பட்டு தமிழர்கள் எடுக்கும் இத்தகைய ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் சிங்களத்தில் கழுத்தில் கயிறு வீசி இருக்கின்றன. இந்த நேரத்தில், ஒரு சேர நாம் திரள்வது தான் நம்மை சதிராடியவர்களுக்கு சம்மட்டி அடியாக இருக்கும். இதை தமிழக தமிழர்களும் தணியாத வேகத்தோடு கையில் எடுக்கவேண்டும்.”
வேண்டியது தான் என்றாலும் மனக்குடையும் கேள்விகளை அடக்க முடியவில்லையே!. மே 17-துயரைத் தவிர்க்க மேல் நாடெல்லாம் நம்மவர்கள் கெம்பியெழுந்து ‘சட்டபூர்வமாய்ப் போராடி’ என்ன ஆயிற்று? தமிழகத்தில் பலரும் எண்ணையூற்றி எரிந்தும் பல வருடங்களின் பின்னர் கைகோர்த்துப் பல நூறு பேர் போராடியும் தடுக்க முடிந்ததா?
சுயத்தை இழந்து அந்நியத்தை நம்பிய தலைவர்!
நாடு கடந்த ஈழத்தை 20-ற்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்திருக்கின்றனவா? இந்த நம்பிக்கை தானே கடைசி நேரம் வரை தலைவரை முள்ளியவாய்க்காலில் தவமிருக்க வைத்தது. நாடு கடந்ததை அங்கீகரிக்கிறவர்கள் தலைவரின் ஈழப் பிரகடனத்ததை அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லையெனினும், அவரைக் காவாந்து பண்ணுவோம் என்ற நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அவரும் அந்த நம்பிக்கையோடு காத்துக் கிடந்தார்.
ஒரு மாதத்திற்கு முன் எரிக்சொல்கெய்ம் சொன்னார். “அவர்கள் சரணடைவது தொடர்பில் எங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். நாங்களும் ஏற்பாடுகளுடன் இருந்தோம். அதற்குள் இலங்கை ராணுவம் அவசர கோலமாய் அனைத்தையும் முடித்துவிட்டது.” என்பதாக. நேரடியாக அமெரிக்க-நோர்வே கப்பல் ஏதும் வராத போதிலும், அவர்களது அனுசரணையோடு கையேற்கப்படுவதாக கூறப்படுகிறது என்ற நம்பிக்கையோடு சரணடைந்த பல நூறு பேர்கள் கொன்றொழிக்கப்பட்மை தொடர்பில் தான் இப்போது இலங்கை அரசிற்கு எதிரான கொலைக்குற்ற விசாரணை குறித்த ஐ.நா. பேசிக்கொண்டிருக்கின்றது.
சரணடைந்து கொல்லப்பட்டவர்களில் தலைவர் இருந்தாரா? இருந்ததாக தமிழ் மக்கள் நம்ப விரும்பவில்லை. அவ்வளவு வீரம் பேசியவர்-இல்லை, வீரத்தோடு ஆயிரக்கணக்கானோரை கள வேள்வி கொடுத்து சாதனைகளை நிகழ்த்தியவர் இப்படிக் கோழைத்தனமாக சரணடைந்து இருக்கமுடியுமா? சில நம்பிக்கைகளை விட்டு விட வேண்டும். இல்லையென்றால் மேலே தட்டிவிடும். பெரும்பான்மையான் சமூகத்திற்கும் மேலே தட்டிவிட்டால் எப்படி? கொழும்பு உட்பட உலகின் பெரு நகரங்கள் பலவற்றில் அலகு குத்திப் பறவைக்காவடியில் தொங்கும் எமது சமூகத்தைப் பிறர் ‘முழுக்கக் கழன்ற கூட்டம்’ என்றுதான் சொல்கின்றார்களா? சொல்லட்டும். ‘கடவுளாவது காக்கவில்லை’யென்றால் எப்படி? நம்பிக்கைள் ஆறுதல் தருவன, தயவுசெய்து விட்டு விடுங்கள்! ஆமென்.
எல்லாம் முடிந்து ஒரு சில தினங்களில் இலங்கை ஜனாதிபதி ஒரு பேட்டியில் சொன்னார். (சரணடைந்ததைக் கவனமாக தவிர்த்தாலும், புலித்தலைவர்கள் எல்லோரும் அநியாயமாக மாண்டார்கள் என்பதாக அவர் கூறுவார் என)
சரி பேட்டியில் என்னதான் சொன்னார்?. “முப்பது வருடங்களாக கொரில்லா யுத்தத்தோடு பெரும் படையாக வளர்ந்த புலிகள் இப்படி அநியாயத்துக்கு ஒர் இடக்கு முடக்கில் மாட்டுப்பட்டு செத்தொழிந்திருக்க வேண்டியதில்லை. நானாக இருந்திருந்தால் ஒரு பக்கத்தால் உடைத்துக்கொண்டு வெளியேறி காட்டுக்குள் இருந்து தொடர்ந்து போராடி இருப்பேன்” என்பது ஜனாதிபதியின் கூற்று.
என்ன தெனா வெட்டான பேச்சு? உங்களுக்கத் தெரிந்து அவர்களுக்குத் தெரியாமல் போகிற அளவுக்ககு அவர்கள் முட்டாள்களா? உண்மையில் புலிகளின் இராணுவ வல்லாண்மை வியப்பளிக்கத்தக்கது. புலிகளின் ‘விடுதலைப்’ போராட்டத்தில் அவர்கள் அளவிற்கு கடற்படையை இத்தனை வலிமையுடன் வளர்த்தவர்கள். வேறு எவரும் இவ் உலக உருண்டையில் வேறெங்கும் இல்லை. இராணுவத் தாக்குதலுடன் ஓரடியில் ஈழத்தை வென்றெடுக்கும் வலிமை புலிகளிடம் இருந்தது. வடக்கிலிருந்து 2000-ம் ஆண்டில் பிடரி தெறிக்க ஓடிய ராணுவத்திற்கு இது தெரியும். கட்டுநாயக்காவில் விமானத் தளத்துக்குள் புகுந்து கோடிக்கணக்கான பெறுமானமான சொத்தை அழிதத்து முதல், அநுராதபுர விமானப் படைத்தளத்தைப் பல மணிநேரம் புலிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவரை புலிகளின் தாக்குதல் திறன் இலங்கை அரசிற்கு தெரியும்.
அரசியல் ஞான சூனியமாக இருந்து வெறும் இராணுவ வல்லாண்மை கவைக்குதவாது என்பதைத்தான் கடைசி நேர தலைவரின் அவலம் உணர்த்த விரும்பும் உண்மை என்பதை விளங்கிக்கொள்வதில் தயக்கம் வேண்டாம். உடைத்துக்கொண்டு காட்டுக்குப் போவது பயன்தரும் என்று கருதியிருப்பின் தலைவர் போயிருப்பார். அதை புரிந்துகொள்ள முடியாத குழந்தையல்ல அவர். அந்த ரகமான இராணுவப் போராட்டத்தில் பயனில்லை என்ற நிலையில்தான் எரிக் சொல்கெய்ம் சொன்ன ஏற்பாடுகளில் நம்பிக்கை வைத்து மோசம் போனார்! அந்த ஏற்பாடுகளுக்கு இடைத்தரகராக இருந்து, தலைவரால் சர்வதேசத் தலைவரென முடிசூட்டப்பட்ட கே. பத்மநாதன் தற்போது இலங்க அரசின் ‘முடிசூடா மன்னன்’.
இந்த வகையறா சர்வதேசம் இந்தளவிற்குத் தான் இருக்க முடியும். தமிழீழம் கட்டக் கடைசி வரை சாத்தியமில்லை என்பதை உறுதியாக விளங்கிக் கொண்டவர் தலைவர் ஒருவர் தான். மற்றவர்கள் நம்பிக்கை கொண்டிருக்க இடமுண்டு. அந்தாள் அதி உச்சம்வரை சென்று தோற்றவர்.
சர்வதேசத் தலைவர் கே. பத்மநாதன் சேர்த்த காசை இலங்கை அரசிடம் சமர்ப்பணம் செய்து அகதிகளுக்கு ஏதும் பண்ண வந்திருக்கின்றேன் என்கின்றார். இப்போது நாடு கடந்த ஈழத்துக்காக காசு திரட்டுகிறவர்களும் எப்போது வந்து அந்தக் காட்டிக்கொடுப்பை செய்வார்கள்? அல்லது ஊர்வசியோ, மேனகாவோ போன்ற சினிமாத்தாரகை எவருக்காவது வாழ்வளித்து உலகம் உய்யும் வழி காண்பீர்களோ? அவர்களைக் குற்றம் சொல்ல யாருக்க என்ன உரிமை இருக்கிறது. ஏமாறுகிறவர்கள் இருந்தால், ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.
நாடுகடந்த ஈழத்திற்கான பயணங்கள்?
இது வெறும் ஏமாறுகிற-ஏமாற்றுகிற விவகாரமல்ல. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தை கேரளக் கடற்கரையிலிருந்து தொடங்கியிருந்தோம். ஈழக் கடற்கரை முதல் இந்தோனேசிய, கனடாக் கரை வரை இதே கதைதான். பல கள்ளத் தோணிகள் நடுக்கடலில் மூழ்கிப் பலபேர் ஜலசமாதியான கதை பல பத்திரிகைகளில் வந்தபடிதான். கள்ளத்தோணிக்கு காசு கொடுத்ததால் உள்ளதையும் இழந்த சம்பவங்களைப் பல குடும்பங்கள் சொல்லியழுவது தொடர் தொடராய் பத்திரிகைகளில் வந்தபடிதான்.
இத்தனை கொடிய கடற்பயணத்தில் உயிரைப பணயம் வைத்து அக்கரை போகும் அவதி ஏன்? எமது மண்ணில் போராட்டம் வந்த போதும் தீர்வு எட்டவில்லை என்ற விரக்தி உண்மைதான். பௌத்த சிங்களப் பேரினவாதம் என்றுமில்லாத அளவு இன்று கோரத்தாண்டவம் ஆடுவதும் உண்மைதான்.
ஆதலால் எங்கள் சினிமாத் தாரகைகளும், சீமான்களும் சொல்கின்ற மாதிரி கடல் கடந்த தமிழ் ஈழத்திற்கு போராடக் கிளம்ப வேண்டியதுதான். ஈழம் முதல் கேரளம் வரையான கரையோரங்களில் இருந்து படகுகள் அலைபோல் கிளம்புவது அதற்காகத் தான். ஓரிரு தசாப்தங்களின் முன்னர் ஈழத்திலிருந்து இந்தியக் கரைகளுக்கு படகேறிவந்து போராட்டத்தில் இணைந்த பல்நூறு இளைஞர்களின் தியாகம் எமக்கான எந்தப் படிப்பினையைப் பெற்றுத்தந்துள்ளது.
எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்கும் மற்றவர்களது ஆதரவு மிக மிக அவசியமானது தான். அது உதவிகரமானது என்கின்ற அளவில் அமைந்திருக்க வேண்டும். கறிக்கு உப்பு போல், நாங்களோ பிறரைத்தானே முழு அளவில் நம்பித் தொலைத்தோம். உப்புக்கறி ஆக்க முயன்ற கதையாக!, தமது விடுதலைக்காகப் போராடுவதாக அல்லாமல், வேறொருவர் நலன்களுக்காகப் போராடுகிறவர்கள் இலவச இணைப்பாக விடுதலை வந்த சேரும் எனக் கருதின், அது முதலுக்கும் நட்டமாகும். கடவுளாலும் காப்பாற்ற முடியாமல் போகும் என்பதைத் தான் கடந்த மூன்று தசாப்தங்களின் யுத்தவரலாறு எமக்கு உணர்த்தியிருக்கிறது.
ஆயினும் அதை நாம் உணர்ந்திருக்கிறோமா? இல்லை என்பதைத் தானே அவுஸ்திரேலியத் திகில்ப் பயணங்கள் காட்டுகின்றன. என்னகாணும், பகிடியும் வெற்றியும் தெரியாமல், மெய்யாலுமே நம்மாளுகள் நாடுகடந்த ஈழத்திற்கு போராடப் படகு ஏறுவதாய் நம்பித் தொலைத்து விட்டீரோ?
இல்லாமல்? இவர்கள் வழமான வாழ்வு தேடித் தான் அங்கே போகின்றார்கள் என்பது தான் சரி. போய் என்ன செய்யப்போகிறார்கள். சினிமா நட்சத்திரங்களை அழைத்துக் களியாட்டம் நடாத்தும் ‘கிக் தீர்ந்து போனால்’, வைரமுத்து-தாமரை போன்ற பாடகர்களையும், சீமான்-தங்கர்பபச்சன் போன்ற இயக்குனர்களையும் அழைத்து ‘நம்புங்கள் தமிழீழம் நிச்சயமென்று’ முழங்க வைப்பார்கள். அவர்கள் குளிர் காய்வதற்கு எண்ணையூற்றி எரிக்கிற கூட்டமும் தமிழ் கூறு நல்லுலகில் இருந்து தொலைக்கிறது. திரைகடலோடிய ஈழப்பற்றாளர்களால், இன்னும் ஒரு 50-ஆண்டுகளுக்கு ஆயினும் தலையிடிதான்.
பொது எதிரியை இனங்காண வேண்டாமோ?
ஏன் இப்படி அலுத்துக் கொள்ளவேண்டும்.? இலங்கையில் யுத்தம் முடிந்தபோதிலும் வடக்கு-கிழக்கில் மட்டுமின்றி நாடு பூராவிலும் இராணுவம் துப்பாக்கி சமேதரராய் வீதியோரங்களில் நின்றுகொண்டிருக்கிறார்கள். யுத்தத்தைச் சொல்லி பிழைப்பு நடாத்த இடமற்றுப் போன நிலையில் மக்களின் வயிற்றிலடிக்கும் பொருளாதார நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றபோது, மக்கள் கிழர்ந்தெழலாம் என உணர்ந்தே இலங்கை அரசு நாட்டைத் தொடர்ந்து இராணுவ மயப்படுத்தி வைத்திருக்கிறது. இராணுவத்திற்காக வரவு-செலவுத் திட்டத்தில் தொடர்ந்தும் முன்னுரிமை . இது சொந்த மக்களுக்கு எதிராக என்று உணர இடம் ஏற்படக்கூடாது. அதற்கு உதவுகிறவர்கள் நாடுகடந்த ஈழ வெங்காயங்கள். இலங்கையில் புலியை அழித்து விட்ட போதிலும் உலகெங்கும் இருக்கிற புலிக்கு எதிராக போராடவேணடியிருக்கிறது என இலங்கை அரசின் பிரதிநிதிகளால் பேசமுடிகிறது. ஆக புலி இருந்தம் கெடுதி, இறந்தும் கெடுதி.
வடகிழக்கு பிராந்திய மக்களது தலைவிதியை, நாடுகடந்த ஈழம் என்கின்ற மேலைநாட்டு கனவான்கள் நெருக்கடிக்கு உள்ளாக்குவது ஒன்றும் புதிய அனுபவம் அல்ல. எல்லாம் பழக்கப்பட்ட பழைய பல்லவிதான். முன்னர் இலங்கைக்குள் அடங்கியது, உலகம் கிராமமாகி விட்ட உலகமயமாதலில், இன்று முழு உலகு சார்ந்துள்ளது. முன்னர் கொழும்பு வாழ் தமிழர்களது (குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்து கொழும்பில் நிரந்தர வாசிகளான முதலாளிகளதும், உயரதிகாரிகள் மற்றும் உயர் மத்தியதர வர்க்கத்தினரதும்) பகடைக்காய்களாகவே வட-கிழக்கு தமிழ்மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். ஈழத் தமிழ்த் தேசியத் தலைவர்கள் மண்சார்ந்த பிரச்சினைகளைப் பேசுவது இழிவானது எனக்காட்டி தமிழ் உரிமை என மகத்தான வாய்ச்சவடால்களைப் பேசிக்கொண்டு கொழும்புத் தமிழர்களது நலன்களைத் காத்து விருத்திசெய்து வந்தனர். இன்று அந்த ஆண்ட பரம்பரை புலம் பெயர்ந்துள்ளது. அவ்வளவே!
பிரச்சனை, மண்ணில் வாழும் மக்கள் எவருக்காகவோ, தொடர்ந்து பகடைக்காய்கள் ஆவதா? அந்நியர் நலன்களுக்காக நாம் இனியும் அடிபட்டு மாள்வதா? அவர்களது கெட்டித்தனம், தங்களது கொண்டாட்டங்களுக்கு எங்களை இரையாக்க முடிகிறது என்பது, நாம் தொடர்ந்துமே புத்திகெட்டு பேதலிக்க வேண்டுமா? எங்களை அடக்கி கொட்டமடிக்கிற ஆண்டபரம்பரையின் நலனுக்காக எங்களைப் போலவே உழைத்து ஓட்டாண்டியாகிற சிங்கள-முஸலிம் மக்களை இனியும் எதிரிகளாகப் பார்க்க வேண்டுமா? சிங்கள அரசு தமிழ்ப் புலிப் பூச்சாண்டியைக் காட்டி உங்கள் வயிற்றிலும் அல்லவா அடிக்கிறது என உழைக்கும் சிங்கள மக்களுக்கு எப்படி உணர்த்தப் போகிறோம்? எதிரி யார்? நண்பன் யார்? என அறிய முயலாமல், ஊடக மோசடிக்கு ஆட்பட்டு இன்னமும் இருளில் மூழ்கப் போகிறோமா? தமிழ்-முஸ்லிம்-சிங்கள உழைக்கும் மக்களுக்கான ஊடக மார்க்கம் கண்டடைவோமா?. கேள்விகள் ஆயிரம்-தேடுவோம்.
1.“இனியொரு விதி செய்வோம்” - 01